
திரும்பவும் தி.மு.க சார்பில் நிற்க ஆசைப்பட்டு கிடைக்காமல் தன்னுடைய மகனையே களத்தில் இறக்கியிருக்கிறார் கல்யாணம். இரண்டு முறை தேர்தலில் நின்று தோற்றுப்போனாலும் ஒரே ஒரு தடவை ஜெயித்ததால் கல்யாணத்தின் கூரை வீடு சொற்ப காலத்தில் பங்களாவான அதிசயம் நடந்தது. அவ்வப்போது கூட்டம் போட்டு தன் இருப்பை காட்டிக்கொண்டே இருந்ததற்கு கைமேல் பலன். மூன்று மாதத்திற்கு முன்னால் கட்சியில் சேர்ந்த கல்யாணத்தின் வாரிசு மேல் உடன்பிறப்புகளுக்கு ஏகப்பட்ட கோபம். இருந்தாலும் வேறு வழியில்லை. மூன்று மாதத்தில் இந்த பொடிசு அரசியலில் கடைத்தேறிவிட்டது.
கோஷ்டி பிரச்னையை சமாளிக்க கோ.சி மணிதான் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கிறார். கோ.சி. மணி மகனுக்கே சீட் கொடுக்க மறுத்த கலைஞர், கல்யாணத்தின் கோரிக்கைக்கு தலையாட்டியதுதான் கட்சிக்காரர்களின் மண்டையை குடையும் கேள்வி. பஞ்சாயத்து பண்ணுவதில் கோ.சி.மணி எக்ஸ்பர்ட். இருந்தாலும் குடும்ப அரசியலால் நிறைய பேருக்கு எரிச்சல். இப்போதைக்கு குத்தாலம் தொகுதியின் வெற்றி ஆசைமணியின் கையில்தான். அதிருப்தியிலிருக்கும் இந்த முன்னாள் எம்.எல்.ஏ, அ.தி.மு.கவின் பெரும் புள்ளி. எம்.ஜி.ஆர் காலத்து ஆள். ஆசைமணிக்கு அம்மா மேல் கோபம் வந்தால் அ.தி.மு.க இங்கே காலி!