அடிதடி, வெட்டு குத்து, கோஷ்டி தகராறு, தள்ளுமுள்ளு, ஆள்கடத்தல் என்றெல்லாம் விதவிதமாக வார்த்தையை போட்டு விவரிப்பதற்கு பதிலாக சிம்பிளாக 'புரட்சி'ன்னு சொன்னாலே போதும். நம்மூரில் நிறைய பேருக்கு புரிந்துவிடும். எந்த ரவுடி ஜெயிப்பான்னு மண்டையை குடையுற 'புரட்சி' தொகுதி நிலவரம் கொஞ்சம் பார்க்கலாம். வேட்பாளர் புரொ·பைல் பார்த்தால் 'எரியுற கொள்ளி' டயலாக்கை சொல்ல தோணும். வேணாம், சொல்லி சொல்லி போரடிச்சுப் போச்சு! எதை தொட்டாலும் இம்சைதாங்கிற நிலைமையில இருக்கும் இந்தப்பகுதி குடிமகன்களை காப்பாத்த ஆண்டவனை ஒரு தபா வேண்டிக்கோங்கோ!
பூம்புகார்: கற்புக்கரசி பிறந்து, கருணாநிதி கண்டுபிடிச்ச ஊராக இருந்தாலும் எப்போதும் இது எம்.ஜி.ஆர் தொகுதிதான். இப்போது சுனாமி அலையால் ஆளுங்கட்சி பக்கம் சுருண்டு கிடக்குது. எப்படியாவது பொண்ணை நிக்க வெச்சுடணும்னு நம்பிக்கையோட தொகுதிக்கு ரவுண்டு வந்த மருத்துவர் திகைச்சுப்போய் வேட்பாளரை மாத்திட்டாராம். பூம்புகார் தமிழனுக்கு சினிமா மயக்கம் போக சான்ஸ் இல்லாமல் போய்விட்டது! இன்னொரு சுனாமி வந்து, அப்போ அம்மாவே ஆட்சியில இருந்தா இன்னும் நிறைய கிடைக்குமேன்னு நினைக்கிற அளவுக்கு மக்கள் இங்கே இருக்காங்கிறது ஷாக்கான சங்கதி. ஆதரவு ஓட்டை பங்கு போடுவதில் ஆளுங்கட்சிக்குள்ளேயே அடிதடி. அ.தி.மு.கவின் அக்மார்க் ரவுடிகளெல்லாம் ஏனோ இங்கேதான் பிறந்திருக்கிறார்கள். இப்போ பிரச்னை, கிளைமாக்ஸ் நேரத்தில் களத்தில் இறங்கியிருக்கும் 'கட்டபொம்மன் பேரன்' மாயா வெங்கடேசன்தான்! மாயவரத்து சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி போஸ்டரில் போஸ் கொடுக்கும் இந்த இம்சை அரசனிடம் ஏகப்பட்ட காசு. ஆளுங்கட்சி ஒரு பக்கம்; மாயா தரும் சாயா ஒரு பக்கம். பா.ம.க பெரியசாமியை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
திருவிடைமருதூர்: கட்சி நிக்கலையேன்னு கட்டை விரலை கட் பண்ணிக்கிட்ட விஷயத்தை யாரு மறந்தாலும் கலைஞர் மறக்கமாட்டார். அம்மா கட்சி தொண்டன் மாதிரி ஏகத்துக்கும் விசுவாசமா இருக்கானேன்னு கலைஞர் நினைக்கவும் மாட்டார். சிட்டிங் எம்.எல்.ஏ ராமலிங்கம் கட்டை விரலையே விலைக்கு வாங்குமளவுக்கு வசதியான பார்ட்டி. இந்த டிராமாவை ஜெயா டிவி. மிஸ் பண்ணியதுதான் ஆச்சர்யம். கோ.சி.மணிக்கு அடங்காத இந்த காளை இப்போது சிலிர்த்து நிற்கிறது. 'யாருமே இல்லாத இடத்தில் எதுக்குடா டீ ஆத்துறேன்'னு விவேக் தேவர் வந்தால் பா.ம.கவை நிச்சயம் கமெண்ட் அடிப்பார். ஜாதி ஓட்டு இல்லாத இடத்தில் உடன்பிறப்புகள் அடித்துக்கொள்வதை வேடிக்கை பார்த்த பா.ம.கவின் மேலேயே இப்போது புதுக்குண்டு. பாமகவின் ஆலயமணி, விடுதலைப்புலிகளுக்கு டீசல் கடத்திய கேஸில் மாட்டிக்கொண்டு அலைபவருக்கு அடிக்கடி ஷாக் ட்ரிட்மெண்ட் கொடுப்பது அ.தி.மு.க அல்ல தி.மு.கதான்!
வேதாரண்யம் : அடித்து துரத்துதல் (மணி சங்கர் அய்யரை மட்டும்!) ஸ்பெஷலிஸ்ட், இன்னபிற சங்கதிகளை கடத்தும் ஸ்பெஷலிஸ்ட்ம் மோதுகிறார்கள். வேதாரண்யத்தின் நிரந்தர எம்.எல்.ஏவை அசைத்துப்பார்க்க சாம, பேத, தான தண்டத்தில் இறங்கியிருக்கிறார் அம்மாவின் தளபதி. இரண்டு தரப்பும் கட்சிக்காரர்களை காசினால் குளிப்பாட்டுகிறார்கள். கலைஞர் பிறந்த ஊரில் இரட்டை இலை கொடி பறக்கிறது. திருக்குவளை தப்பித்தவறி இந்த தொகுதியில்தான் வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து ஒண்ட வந்திருக்கும் பிசாசை நம்புவதா அல்லது ஊர்ப்பிசாசையே நம்பித்தொலைவதா என்று மக்கள் குழப்பத்திலிருப்பதால் வேதாரண்யம் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டே கிடக்கும்!
பண்ருட்டி: கிழட்டு நரிக்கும் குட்டி நரிக்கும் கல்யாணமாம் என்று ஆள்காட்டி விரலை ஆட்டிக்காட்டாததுதான் குறை. பண்ருட்டியார் பெரிய ஆளு. கருணாநிதி கூடவே இருந்து எம்.ஜி.ஆர் கட்சிக்கு ஆள் பிடித்தவர். ராஜீவ் காந்தியையும் பிரபாகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு தப்பும் தவறுமாக டிரான்ஸ்லேட் பண்ணி நிறைய சாதித்தவர்! குட்டி நரியும் சாதாரண ஆளில்லை. ஆறு மாதம் அரெஸ்ட் வாரண்ட்டுக்கு டிமிக்கி கொடுத்து டெல்லியில் தலைமறைவாக இருந்துவிட்டு எலெக்ஷன் நேரத்தில்தான் ஊருக்கு வந்திருக்கிறார். சிப்காட்டில் ஸ்டிரைக் நடந்தால் வேல்முருகனுக்கு சந்தோஷம். கம்பெனியும் சரி அதில் வேலை பார்க்கிறவர்களும் சரி கட்டை பஞ்சாயத்துக்கு வீடு தேடி வருவார்கள். பிடிச்ச பாட்டு... ராஜா.. வசூல் ராஜா! கடலூருக்கு கலவர மாவட்டம் என்று நல்ல பெயர் வாங்கி தந்த நாலு பேரில் இவரும் ஒருத்தர்!