Wednesday, April 27, 2005

ஓசி, நீ வாசி

மைசூர் பஸ்ஸை விட்டு இறங்கி திக்கு தெரியாமல் அரைமணிநேரம் மெஜஸ்டிக்கையே சல்லடை போட்டு தேடிய பின்னர் ஒரு வழியாக மெளரியா ஓட்டல் பிளாட்பாரத்து வாசலில் கிடைத்தது அது. ஆனந்த விகடன்! முழுசா ரெண்டு நாள் ஆயிடுச்சே, தமிழ் பத்திரிக்கைகளை கண்ணால் பார்த்து. ஒரு வழியாக சென்னை செல்ல பஸ் கிடைத்து, வசதியாக ஜன்னலோரமாய் உட்கார்ந்து ஒரு முப்பது பக்கத்தை கடந்த பின்னர்தான் அந்த நினைப்பு வந்தது. சாயந்திர நேரத்து பெங்களூர் டிராபிக் நெரிசல்களை கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமே...

நல்ல ஐடியாதான். புத்தகத்தை எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். பெங்களூரை மிஸ் பண்ணலாமா? ஐடியாவை செயல்படுத்த ஆரம்பித்தேன். புத்தகத்தை மூடி பைக்குள் வைத்துவிட்டு நிமிரும்போதுதான் பின் ஸீட்டிலிருந்து வந்ததொரு குரல்.

'ஸார்... கதை புஸ்தகம் இருக்குதா?'

ஆஹா.. ஓசி பார்ட்டி! இது போன்ற ஆசாமிகளுக்கு எல்லா புஸ்தகமும் கதை புஸ்தகம்தான். எதையாவது வாங்கிப் புரட்டியே ஆகணும்.

'என்னது?'

கேட்டது புரிந்தாலும், புரியாத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டுதான் கேட்டேன்.

'உங்க கையில வெச்சிருந்தீங்களே ஒரு புஸ்தகம்... அதைக் கேட்டேன்'

'ஓ.. விகடனா?'

இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் கேட்டும் கொடுக்காத வள்ளல்கள் உலகத்தில் ஆயிரத்தில் இரண்டு பேர்தான் இருப்பார்கள்!

பஸ், எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை தாண்டி வேகமெடுக்க ஆரம்பித்தது. பத்து நிமிஷம் கூட ஆகியிருக்காது. எழு மணிக்குள்ளாகவே கண்டக்டர் பஸ்ஸின் எல்லா லைட்டையும் அணைக்க ஆரம்பித்தார். ஓசி பார்ட்டி அசரவில்லை. ஜன்னல் இடுக்குகளில் வழியாக வரும் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு பக்கங்களை புரட்ட ஆரம்பித்தது.

'சே... கையில் எளக்கிய புஸ்தகம் ஏதாவது வெச்சிருந்தா இவ்ளோ கஷ்டமாயிருக்காது.. போன வேகத்துல திரும்பி வந்துருக்கும்'

ஒரு கட்டத்துக்கு மேல் ஜன்னல் வெளிச்சமும் சதிசெய்ய ஆனந்த விகடனை சுருட்டி சீட்டின் இடுக்கில் வைத்துவிட்டு, தூங்க ஆரம்பித்துவிட்டது அந்த பார்ட்டி.

'இனிமே யாருகிட்ட இருந்தா என்ன.. அதான் லைட்டே இல்லையே'... மனசுக்குள் சமாதானம் செய்துகொண்டேன்.

கிருஷ்ணகிரி தாண்டி ரோட்டார மோட்டல். 'வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும் ஸார்' அதே டயலாக். திரும்பிப் பார்த்தேன். பக்கத்து ஸீட்டில் பார்ட்டி அசந்து தூங்கிக்கொண்டிருந்தது. பத்து நிமிஷம் கரைந்தும் வண்டியை எடுக்காத டிரைவரை மனதுக்குள் அர்ச்சனை செய்துகொண்டே திரும்பிப்பார்த்தேன். சீட் இடுக்குகளிலிருந்து விகடனார் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.

எடுக்கலாமா, வேண்டாமா...

என்னதான் நம்ம விகடனா இருந்தாலும் அடுத்தவன் ஏரியாவுக்குள் அனுமதி இல்லாமல் போய் கைவைக்கலாமா...

வேணாம், கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்...

கூல் டவுண்... கூல் டவுண்.. எத்தனை பேருகிட்ட ஓசி புஸ்தகம் வாங்கிட்டு வருஷக்கணக்கா திருப்பி கொடுக்காம இருந்திருக்கே... அதான் ஆண்டவன் சான்ஸ் கிடைச்சா அள்ளிப் போட்டு குத்திடறான்....

ஓசி புத்தகம் வாங்குறதும் தப்பு; கொடுக்கிறதும் தப்பு. மனசுக்குள் ஒரு அவசர தீர்மானம்.

மணி பதினொன்றரை. வண்டி வேலூரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

'சே... கதாவிலாசத்தையாவது ஆரம்பத்திலேயே படிச்சி முடிச்சிருக்கலாம்...

கண்டக்டர் பஸ்ஸிலிருக்கும் லைட்டையெல்லாம் எரியவிட்டுவிட்டு டிக்கெட் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார். தூக்கமே வரவில்லை. பின் ஸீட் பார்ட்டியை எழுப்பி விகடனை திரும்ப வாங்கிடலாமா...

வேணாம், இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்...

வண்டி கிண்டியை நெருங்கிவிட்டிருந்தது. வேறு வழியேயில்லை. எழுப்பி கேட்டுவிடலாம்.

தலையை சாய்த்து தூங்கிக்கொண்டிந்தவரை தட்டியெழுப்பி விகடனை கேட்டேன். சீட்டுகளுக்கு நடுவே சிறைபட்டிருந்த விகடனாரை தேடி எடுத்து கையில் கொடுத்து, கடன் கேட்க வந்தவனை பார்ப்பது போல் அந்த ஓசி பார்ட்டி விட்ட லுக் மனதை என்னமோ செய்தது.

காசி தியேட்டரில் இறங்கி பேட்டையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நல்ல வேளை எட்டு ரூபாய் விகடனை மிஸ் பண்ணாமல் இருந்தாமோ என்கிற சந்தோஷத்தை தலைகீழாக கலைத்துப்போட்டது மனசாட்சியின் குரல்.

'எட்டு ரூபாய் ஆனந்த விகடனால எட்டு மணி நேர நிம்மதி போயிடுச்சே...'


Image hosted by Photobucket.com

கொசுறு - மைசூர் திப்புசுல்தான் கல்லறை தோட்டத்து வாசலில் நண்பரின் சுட்டிப்பெண். ஆளைப் பார்த்தால் கோமாளியைப் போல் இருக்கிறதோ என்னவோ... என் முகத்தை பார்க்கும் நேரமெல்லாம் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து வைக்கிறாள். காரணம்தான் புரியவில்லை. என்றைக்கு, எதுதான் நமக்கு ஒழுங்காக புரிந்திருக்கிறது?!

Monday, April 11, 2005

கருத்து கந்தசாமிகள்

கருத்துக்கணிப்பு என்பதை ரொம்ப சாதாரண விஷயமாகத்தான் நினைத்திருந்தேன், மூன்று மாதத்திற்கு முன்புவரை. எதற்காக என்கிற விஷயத்தை சொல்லாவிட்டால் 'எதுக்கு இதையெல்லாம் கேட்குறே'ங்கிற கேள்விதான் பதிலாக வரும். விவரமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு பேனாவை எடுக்க ஆரம்பித்தால், 'வேற வேலையே உனக்கு இல்லையா'ங்கிற தொனியில் முகத்தையே கதவாக்கி அறைந்து சாத்திக்கொள்வார்கள். நிறையபேருக்கு ஆளுங்கட்சி அரசியலிலிருந்து அரிசிவிலை உயர்வு வரை எல்லாமே அத்துப்படி. பேச ஆரம்பித்தால் நிறுத்துவதே கிடையாது. இன்னும் சிலரோ பொதுவான விஷயங்களை விட்டு டிராக் மாறிப்போய் சொந்தக்கதை, சோகக்கதையை எடுத்துவிடுகிறார்கள். முகபாவத்தை வைத்து இப்படித்தான் பேசுவார்கள் என்று எதிர்பார்த்து, ஏமாந்து போய் ஜகா வாங்கின சம்பவங்களைப் பற்றி சுவராசியமாக நிறையவே எழுதலாம். எல்லாமே, 'மனிதர்களில் இத்தனை விதங்களா'ன்னு வியக்க வைத்த அனுபவங்கள்.

டிசம்பர் மாதம் ரஜினி பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாமுக்கு வந்தவர்களில் இருந்துதான் என்னுடைய வேலையை ஆரம்பித்திருந்தேன். ஆரம்பத்தில் அறுபது நண்பர்களிடம் பிரிண்டட் பேப்பரை கொடுத்து, பூர்த்தி செய்யச்சொல்லி பதில் வாங்குவது சுலபமான விஷயமாகத்தான் இருந்தது. ஆனால், பொதுவிடங்களில் பேனாவும், பேப்பரும் கையிலெடுத்தவுடனே 'எதுக்கு வம்பு' என்று மிரண்டு ஒதுங்கும் முகங்களைப் பார்த்தவுடன் கொஞ்சம் தலை சுற்றியது. சரசரவென்று மூன்று மாதமும் ஓடித்தான் போய்விட்டது. எத்தனை பேரிடம் கருத்துக்கணிப்பு என்கிற கணக்கு வழக்கெல்லாம் சரிவர நினைவில்லை. நான் பார்த்த வரையில் பெரும்பாலான மக்கள், இதனால் தனக்கு என்ன ஆதாயமிருக்கும் என்பதைத்தான் பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் நடையைக்கட்டி விடுகிறார்கள். ('நீ இந்தியா டுடே ஸ்டைலில் புரட்சிகரமாக ஏதாவது சர்வே எடுத்தா நிறைய பேர் வருவான்... இதுல என்ன இருக்குது' ஒரு நண்பரோட கமெண்ட்!) ஒரு சில 'கருத்து கந்தசாமி'க்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே சமயம் எல்லோரும் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் கருத்து சொல்வார்கள் என்று நாம் நினைப்பது மடத்தனம்தான். ஏகப்பட்ட லீட் கொடுத்து கேட்டாலும் திருதிருவென்றுதான் முழிக்கிறார்கள். 'தெரியாது' என்று வெளிப்படையாக சொல்பவர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. தனக்கு தெரியாத விஷயத்தையே மறைத்து, 'சொல்ல முடியாது' என்று சொல்லிவிட்டு போகக்கூட அவர்களால் முடியவில்லையே!

ஓகே. எடுத்த சர்வே பத்தி கொஞ்சமாவது சொல்ல வேண்டாமா?

1. ரஜினி - இனி செய்யவேண்டியது...

(a) அரசியலுக்கு வரவேண்டும் - 33 %
(b) தொடர்ந்து சினிமாவில் நடிக்கவேண்டும் - 42 %
(c) மெளனமாக இருப்பது நல்லது - 17 %
(d) எந்த முடிவை எடுத்தாலும் வரவேற்பேன் - 8 %

2. ரஜினி நெருக்கமாக இருப்பது யாருடன்?

(a) கருணாநிதி - 18 %
(b) ஜெயலலிதா - 8 %
(c) ப.சிதம்பரம் - 13 %
(d) நடுநிலை - 61 %

3. ரஜினியின் படங்களில் உங்களுக்கு பிடித்தமான விஷயம்?

(a) ஸ்டைல் நடிப்பு - 36 %
(b) காமெடி நடிப்பு - 23 %
(c) ஆக்ஷன் - 12 %
(d) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை - 29 %

4. ரஜினியிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்?

(a) அரசியல் வாழ்க்கை - 12 %
(b) ஆன்மீக வாழ்க்கை - 9 %
(c) சினிமா வாழ்க்கை - 7 %
(d) தனிமனித வாழ்க்கை - 72 %

5. சிகரெட், புகை பிடிக்கும் பழக்கமுண்டா?

(a) உண்டு - 56 %
(b) இல்லை - 41 %
(c) சொல்ல முடியாது - 3 %

இவை தவிர இன்னும் ஆறு கேள்விகள் கேட்டு வாங்கி, ஒரு உண்டியலில் போட்டு குலுக்கி வந்த ரிசல்ட்டை எக்ஸலில் ஏற்றி பின்னர் முரசுவில் தட்டி 'ரஜினி - ச(கா)ப்தமா'? புத்தகத்தின் கிளைமாக்ஸாக வைத்துவிட்டேன். கம்மிங் பேக் டு த சர்வே.

கருத்துக்கணிப்பு எடுப்பதற்கும் சில சைக்காலஜி தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நேரடியாக கேள்விக்கு வருவதற்கு முன்னால் சில பொதுவான விஷயங்களாக எடுத்துவிடவேண்டும். 'டிரா·பிக் ரொம்ப ஜாஸ்தியா இருக்குதே... ரோடேல்லாம் இப்படி குப்பையா இருக்குதே'ன்னு கேட்டு கொஞ்சம் வாயை கிளறியாக வேண்டும். கொஞ்சம் தைரியம் ஜாஸ்தியாக இருந்தால் 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே'ன்னு சும்மா ஒரு ஸீன் போட்டு வைக்கலாம். பார்ட்டி பக்காவாக சிக்கிவிடும். 'பாட்ஷா'வில் பாலகுமாரன் எழுதிய ஒரு டயலாக், 'இந்தியன் பேசாம இருந்தா செத்துப்போயிடுவான்'. நூறு சதவீத உண்மைதான். உலகத்தில் அறிமுகமில்லாத ஆளிடம் தனது பெயர், சொந்த ஊர், வயசெல்லாம் விலாவாரியாக சொல்கிற ஆசாமி இந்தியன் அதுவும் தமிழ்நாட்டுக்காரனாகத்தான் இருக்க முடியும்னு நினைக்கிறேன்!

Tuesday, April 05, 2005

மனக்கோட்டை

பஸ்ஸை விட்டு இறங்கியதும் பயமுறுத்தும் அதே செம்பழுப்புநிற கட்டிடங்கள். பரபரப்பான போக்குவரத்து. தஞ்சையிலிருந்து தூங்கிக்கொண்டே வருபவனை தட்டியெழுப்பும் அந்த பிருந்தாவன ஸ்டாப்பின் பேர் சொன்ன டிரா·பிக் குடை மிஸ்ஸிங். பத்துவருஷத்தில் பிருந்தாவனத்தின் தெருக்கள் குறுகிப்போய்விட்ட மாதிரி பிரமை.

Image hosted by Photobucket.com

இருபது வருஷத்துக்கு முன்னால் காமராஜபுரம் போக முப்பது ரூபாய் கேட்ட குதிரை வண்டிக்காரனோடு சண்டைபோட்டு நடத்தியே அழைத்துக்கொண்டு போன அப்பா, இப்போது இருபது ரூபாய் சொன்ன ஆட்டோக்காரனிடம் மறுப்பேதும் சொல்லாமல் ஏறி உட்கார்ந்தார். குதிரை லாயத்தில் எந்த குதிரை வண்டிக்காரனும் இல்லை.

Image hosted by Photobucket.com

'அட்டன்பரோவோட காந்தி படத்துல நடிச்சவருக்கு இன்னிக்கு என்ன ஆயிடுச்சாம்...' காந்தி நினைவு நாளில் கதர் குல்லா அரசியல்வாதி பக்கத்திலிருக்கும் இன்னொரு அரசியல்வாதியிடம் கேட்பது மாதிரியான மதனின் கார்ட்டூனை பார்க்க நேர்ந்தது புதுக்கோட்டை அத்தை வீட்டில்தான். (1984?) சம்மருக்கு அத்தை வீட்டுக்கு வந்தால் வருஷம் பூராவும் வந்த ஆனந்தவிகடனை எனக்காகவே மூட்டை கட்டி வைத்திருப்பாள் அத்தை. மெகா ஜோக்கையே அட்டையாக்கி ஆ.வி வந்துகொண்டிருந்த காலம் அது. காமராஜபுரம் இருபதாம் வீதியும் இருபத்தொன்றாம் சந்திக்கும் இடத்திலிருக்கும் கொப்புனியப்பன் கோவில் வாசலில் உட்கார்ந்து ஆ.வி படித்து சிரிப்பதும் கஷ்டமான எழுத்து நடையிலிருக்கும் கோபல்லபுரத்து மக்களை மேம்போக்காக மேய்வதும்தான் மே மாதங்களின் தினசரி நிகழ்ச்சி.

Image hosted by Photobucket.com

காமராஜபுரம் இருபத்தொன்றாம் வீதியில் விழுந்து புரளாத இடமே கிடையாது. கிரிக்கெட், கபடி என உச்சிவெய்யில் நேரத்திலும் விடாப்பிடியாக நின்று சட்டையில் செம்மண்ணை பூசிக்கொண்டு வானம் செம்மண் நிறத்துக்கு மாறும் நேரத்தில்தான் வீட்டுக்குள்ளேயே பிரவேசம். பட்டம் விடாத நாளில்லை; விட்ட பட்டம் எதுவும் வானில் பறந்ததுமில்லை. பட்டத்தை பிடித்துக்காண்டு மூச்சிரைக்க ஓடினால்தான் ஆறடி உயரத்துக்காவது பறக்க ஆரம்பிக்கும்.

Image hosted by Photobucket.com

சொக்க வைக்கும் அழகுடன் புவனேஸ்வரி. அந்த சுகந்த வாசம் மூக்கை துளைக்க வலம் வரும்போதெல்லாம் மனசில் நிம்மதி+பரவசம். அந்த கெண்டை முடி தாடி சாமியார் வானின்று வாழ்த்த ஆரம்பித்துவிட்டார். போன வருஷம்தான் கோயிலை முற்றிலுமாக மாற்றி கட்டியிருக்கிறார்கள். பத்ரகாளியும், தட்சிணாமூர்த்தியும் புதிதாக தரிசனம் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.

Image hosted by Photobucket.com

முப்பது அடி ஆழமிருந்த வாரி இன்று மூன்று அடிக்குக் கூட இல்லை. பட்டம் விட்டு விளையாடிய இடங்களெல்லாம் முட்புதர்களாகியிருக்கின்றன. 'தம்பிக்கு எந்த ஊரு' பார்த்த சரவணா தியேட்டர் இப்போது ஊர் விட்டு ஊர் செல்லும் தூரத்திலெல்லாம் இல்லை. புதுக்கோட்டைக்கு மட்டும் நான் அடிக்கடி போவதே இல்லை. இருபது வருஷத்துக்கு முந்தைய ஞாபகங்களால் நான் கட்டியிருக்கும் மனக்கோட்டை சரிந்துவிடும் என்பதுதான் முக்கியமான காரணமாக இருக்க முடியும்.