Monday, March 29, 2004

நகை அணிவதுதான் அழகா?

"பெண்கள் முன்னேற்றம் என்றால், ஆண்களைப் போன்ற எல்லா உரிமைகளும் வசதிகளும் பெற்றிருப்பதுதான். “நள்ளிரவில் அழகான ஒரு சிறு பெண் தன்னந்தனியே சில மைல்கள் நடந்து செல்லக்கூடிய சமூக அமைப்பு ஏற்பட்டாலொழிய நம் நாட்டில் நாகரிகம் வளர்ந்திருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.”என்று காந்தியார் எழுதியிருப்பதாக நமக்கு நினைவிருக்கிறது. இன்று படிப்பும் நாகரிகமும் வளர வளர, பெண்களின் ஒரிமை குறைந்து கொண்டு தானிருக்கிறது. இதற்கு ஆண்களின் தீய நடத்தை மட்டுமே காரணமல்ல. பெண்களின் தவறான வாழ்க்கை இலட்சியமும் ஒரு காரணமாகும்.

“படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணம் படைத்தவர் வீட்டுப் பெண்களும் மனித சமுதாயத்துக்காகப் பணியாற்றுவதே கிடையாது. மோட்டார்கார், நகை நட்டுகள், உயர்தர உடைகள், உல்லாசப் பொழுது போக்கு, (சினிமா, நாடகம், இசைவிழா, அரட்டைக்கச்சேரி போன்றவை) ஆகிய ஆசைகளைத் தவிர இவர்களுக்கு வாழ்க்கை இலட்சியம் என்பதே பெரும் பாலும் இருப்பதில்லை.”

கொத்துக் கொத்தாக நகை அணியும் பித்து நம்குலப் பெண்களை அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அளவுக்கு மிஞ்சி நகையணிவதைத்தான் நான் இங்குக் குறிப்பிடு கிறேன். ஓரளவு நகைகளுக்குமேல் அணிகிறவர் களுக்குத் தண்டனை அல்லது வரி விதிக்கச் சட்டமியற்றும் சர்க்காரை நான் வரவேற் கிறேன். நகை அணிவதால் உயிருக்கே ஆபத்து நேரிடுவதும் உண்டு.... ஆடைகளுக்கென்று அபரிமிதமாகப் பணத்தை அள்ளி இறைத்து வாழ்க்கையில் அல்லலுறும் நம் குலத்தவரை எண்ணியும் இரங்குகிறேன். கைத்தறித் துணி களை நாம் கட்டிக் கொண்டால், கைத்தறி நெசவாளரின் துயரத்தைப் போக்குவதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் குறைக்க முடியும் என்று சென்னையில் நடை பெற்ற நாடார் மகாசன சங்க 23-ஆவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய உயர் திருவாளர் நாகர்கோவில் டாக்டர் ஜான் ஹிலக்கையா அவர்கள் எடுத்துக்காட்டி யிருப்பதை வரவேற்கிறோம். அறிவுரையைப் பாராட்டுகிறோம்.

நாடார் குலப் பெண்களைக் குறித்துக் காட்டும் இவர் இப்படிக் கூறியுள்ளா ரெனினும், செல்வர் வீட்டுப் பெண்களுக்கும் இக்கூற்றுப் பொருந்தியதாகும்.

இத்துறையில் கடந்த 30 ஆண்டு களாகப் பிரச்சாரம் செய்து வரு கின்ற சுயமரியாதை இயக்கம் ஓரளவு உணர்ச்சியூட்டியிருக் கிறது. காந்தியார் அவர்களின் பிரச்சாரமும் ஓரளவு வெற்றி தந்திருக்கிறது.

என்றாலும் இந்த நகைப் பித்தும் உயர் தரமான உடைப்பித்தும் பணம் படைத்த வீட்டுப் பெண்களைக் கடுமையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.

இவள் இன்னார் மகள் அல்லது இன்னார் மனைவி, இவ்வளவு சொத் துக்குச் சொந்தக்காரி என்று பிறர் கூறிப் புகழ வேண்டும் என்பதற்காகவே அலங்காரப்பதுமைகளைப் போல் 5,000, 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட உடைகளைச் சுமந்துகொண்டு திரி கின்றார்களேயல்லாது, இவள் இன்ன தொழில் நிபுணத்துவம் பெற்றவள்! இவள் இந்தத் துறையில் திறமைசாலி என்ற பெயர் வாங்கவேண்டுமென்ற எண்ணமோ இத்தகைய பெண் களுக்கிருப்பதில்லை.

பணத்தைச் சேமித்துப் பத்திரப் படுத்த முடியாத பழங்காலத்தில் நம் பெண்கள் நடமாடும் பாங்குகளாகவும், இரும்புப் பெட்டிகளாகவும் பயன்படுத் தப்பட்டனர். ஆனால், பணத்தைச் சேமிக்கக்கூடிய பல நூறு துறைகள் பெருகிக் கிடக்கின்ற இந்தக் காலத்தில் இது அவசியமா என்பதைப் பணம் படைத்த வீட்டுப் பெண்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நகையணிவதுதான்அழகு என்றால், நகையணியாத ஆண்கள் அழகாயில் லையா? நகை என்பது பெண்களின் உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பவுன்விலங்கு என்பதைப் பெண் இனம் மறக்கக் கூடாது. நகைகளிலும், உயர்தரமான உடைகளிலும் பாழாக்கப்படுகின்ற பணம், குடும்பத் துக்கோ, சமுதாயத்துக்கோ பயன் படாமல் வீணாகிறது.

இதை எப்படித் தடுக்க முடியும்? திரு. ஹிலக்கையா அவர்கள் கூறியிருப் பதுபோல் தண்டனையோ வரியோ விதித்தாக முடியாது. தண்டனையை அனுபவித்து விடுவார்கள், குடிவெறி யர்கள். இன்று துணிந்திருப்பதுபோல வரியையும் கொடுத்து விடுவார்கள், பணம் படைத்தவர்களாதலால்.

ஒருக்கால் நகையைப் பறிமுதல் செய்வது என்ற மாதிரியான சர்வாதிகார உத்தரவு பிறப்பிக்கப்பட்டால்தான் முடியும். ஜனநாயக முறைகளால் இப் பேர்ப்பட்ட சமுதாய வெறிக் குணங் களை ஒழிக்க முடியாது. “அளவுக்கு மீறிய நகை” என்ற பாதுகாப்பு இருக்கக்கூடாது.

மக்களிடையே அறிவு பரவுவதன் மூலமேதான் இந்த மனப்பான்மை அடி யோடு மாறவேண்டும். நெற்றியில் நாம மோ விபூதியோ அடித்துக் கொண்டு வருகின்ற பள்ளிச் சிறுவனைக் கண் டால், உற்ற பள்ளிச் சிறுவர்கள் எவ் வாறு கைதட்டி நகைத்துக் கேலி செய்கிறார்களோ அதுபோல, நட மாடும் நகை அலமாரிகளாகக் காட்சி யளிக்கின்ற பெண்களைக் கண்டு (பைத் தியக்காரரைச் செய்வதுபோல்) மற்ற பெண்கள் கைதட்டிக் கேலி செய்யக் கூடிய நிலைமை தமிழர் சமுதாயத்தில் ஏற்பட வேண்டும்.

படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணக்காரர் வீட்டுப் பெண்களுமே இத்துறையில் மற்ற நகைப்பித்துப் பெண்களுக்கு நல்வழி காட்டக்கூடியவர்களாக விளங்க வேண்டும்.

எந்த நாட்டையும் பீடிக்காத இந்த நகைப் பித்துப் பீடை தமிழ் நாட்டைப் பிடித்திருக்கிறது. பணம் படைத்த ஒரு சிலரைப் பார்த்து, நடுத்தரக் குடும்பப் பெண்களும் நகைப்பித்துப் பிடித்தவர் களாகி விடுகிறார்கள். இதனால் சச்சரவும், திருமணத் தடைகளும் பெண் இனம் துணையில்லாது வெளிச்செல்ல முடியாத வேதனை நிலையும் ஏற்பட்டி ருப்பதைத் தவிர நன்மை ஏதாவது உண்டா? பெற்றோர்களும் பெண்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்"

- தந்தை பெரியார்

நகைகள் அணிவது தமிழர்களுக்கு மட்டுமே உரிய பழக்கம் என்கிற தொனி தெரிந்தாலும் பெரியார் அன்னிக்கு சொன்னது இன்னிக்கும் பொருத்தமா இருக்குதே!

Monday, March 22, 2004



தமிழோவியத்தில் வந்திருக்கும் டூரிஸம் பத்தின என்னோட கட்டுரையையும் படிச்சுட்டு அப்படியே வலைப்பூக்களுக்கு வந்து என்னோட வாத்தியார் வேலையையும் கொஞ்சம் பார்த்து ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க அப்பு!

Wednesday, March 17, 2004

புரட்சிப்புயல் தேர்தல் கரையை கடக்குமா?

வைகோவின் ஒன்றரை ஆண்டு சிறைவாசம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நட்சத்திர பிரச்சாரகர் என்கிற அந்தஸ்தை கொடுக்கலாம். ஆனால் விடுதலைப்புலிகளுக்கு கொடுக்கப்படும் ஆதரவு பற்றிய விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லையென்பதை உணர்ந்து கொள்ளும் யதார்த்த அரசியல்வாதியாக அவர் இருக்கிறாரா என்பதுதான் கேள்வி. இலங்கை தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படும் ஆதரவு என்பது வேறு; விடுதலைப்புலிகளுக்கு தரப்படும் ஆதரவு என்பதில் கலைஞரே தெளிவாக இருக்கிறார். மேடைப் பேச்சில் கலைஞரின் உண்மையான வாரிசாக இருக்கும் வைகோ, திமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு தலைவராக இருப்பார் என்று நிச்சயம் நம்பலாம். இந்த தேர்தலில் வலுவான பிரச்சார பீரங்கியாக பரிணமித்திருக்கும் வைகோவை திராவிட பாராம்பரியத்தின் அடுத்த வாரிசாக அடையாளம் காட்டுவதுதான் கலைஞரின் முக்கியமான அரசியல் பணியாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுகவுக்கும் காங்கிரஸ¥க்கும் இருக்கும் பரஸ்பர புரிதல் மற்ற கூட்டணிக் கட்சிளுடன் முக்கியமாக மதிமுகவுடன் காங்கிரஸ¥க்கு இல்லையென்பது வெளிப்படை. தமிழக கட்சிகள், ஜெயலலிதாவின் ஆணவப் போக்கை எதிர்த்து அணி சேர்த்து ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் ஜெயலலிதா பற்றி சமீபத்திய சென்னை விசிட்டில் சோனியா கருத்து எதுவும் தெரிவிக்காததும் வினோதம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, சமீபத்திய பேட்டியில் காங்கிரஸ் திமுகவுடன் மட்டும்தான் உறவு கொண்டுள்ளது; மதிமுகவுடன் அல்ல என்கிறார் (அது என்ன புதுமாதிரியான கூட்டணியோ?!) எனவே, எந்த வகையிலும் மதிமுக - காங்கிரஸ் இடையேயான சுமூகமான உறவு நிலவ வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

கருணாநிதி மீதும் ஜெயலலிதாவின் மீதும் வைத்திருந்ததை விட தான் பல மடங்கு நம்பிக்கை வைத்திருந்த வாஜ்பாயையும் கனத்த இதயத்துடன் கடுமையாக தாக்குவேன் என்னும் வைகோவின் ஆவேசத்தில் நியாயமிருக்கிறது. வாஜ்பாய் தமிழத்தின் நம்பகமான கூட்டாளியை இழந்திருக்கிறார். நாளை பாஜகவுடனான அதிமுகவின் தேனிலவு முறியும் பட்சத்தில் இந்த அதிரடி அரசியல்வாதி வாஜ்பாய்க்கு தோள் கொடுக்கும் நிலையும் வரக்கூடும். அப்போ பொடா நாயகனின் பேச்சை கேட்டு உணர்ச்சிப்பட்ட தொண்டர்களின் நிலைமை...? பாராவின் 'டாலர் தேச'த்தில் வந்த குருஜி கவுண்டமணியாரின் டயலாக்தான்! "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!"

Monday, March 15, 2004

49ஓ!

'வாக்காளர்களிடம் விழிப்பு ஏற்படுவதற்காக உந்துநர் அறக்கட்டளை நடத்தி வரும் குடீமக்கள் முரசு இதழில் ஆசிரியர் முன்னாள் ஜ.ஏ.எஸ் அதிகாரி அ.கி. வேங்கடசுப்ரமணியன், எந்த வேட்பாளரையும் பிடிக்காவிட்டால் அதையும் வாக்குச்சாவடியில் பதிவு செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். அது 49ஓ பிரிவின்படி வாக்களிப்பதில்லை என்று வாக்காளர் முடிவு செய்வதுதான்.

ஒரு வாக்காளர், படிவம் 17 ஏவில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவரது வாக்காளர் எண் முறையாக பதிவு செய்யப்பட்டு அவரும் தமது கையெழுத்தையோ பெரு விரல் ரேகையையோ விதி 49 Lபடி வைத்த பிறகு, வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தால், அந்த முடிவுக்கு ஏற்ப படிவம் 17Aவில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி ஒரு குறிப்பைச் செய்து வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையையும் அந்த குறிப்புக்கு எதிரே பெறவேண்டும் (தேர்தல் நடைமுறை விதிகள் 1961) வாக்குப்பதிவு முடிந்தபிறகு இவ்வாறு எத்தனை பேர் வாக்களிக்க மறுத்து பதிவு செய்தார்கள் என்ற எண்ணிக்கை விவரத்தையும் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

1999ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 4.75 கோடி வாக்காளர்களில் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கவில்லை. சென்ற தேர்தலில் வட சென்னை எம்பி தொகுதியில் மொத்தம் 70 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. இதனால் ஒரு தொகுதியின் மொத்த வாக்குகளில் சுமார் 15 சதவிகித வாக்கு பெற்றாலே ஒருவர் எம்பியாகிவிடமுடியும் என்பது தெரிகிறது. சென்னை மாநகராட்சி தேர்தலின்போது பெசண்ட் நகர், கலாசேத்திரா காலனி, திருவான்மியூர் போன்ற 'மெத்த' படித்தவர்கள் உள்ள டிவிஷன்களில் 75 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. இவர்களில் பாதி பேர் வந்து 49 ஓவைப் பயன்படுத்தியிருந்தால், பல தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளரை விட அதிக ஓட்டாக இருந்திருக்கும்.

இந்த நிலைமையை பல தொகுதிகளில் வாக்களர்களாகிய நம்மால் ஏற்படுத்த முடியும். அது அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தும். அதை தீர்க்க தேர்தல் முறைகளில் மாற்றங்கள் வந்தே தீரும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை ஏற்பட்டால் எந்த கட்சியும் தன்னுடைய அசல் பலத்துக்கு மீறிய சீட்டுகளை பெற முடியாது. பிஜேபி, பாமக போன்ற கட்சிகள் தங்கள் அசல் பலத்துக்கு பொருத்தமில்லாத வகையில் ஆட்சியை அதிகாரத்தை பிடிக்க உதவி செய்யும் தேர்தல் முறையை மாற்றும் நிரந்தர தீர்வுக்கு இது வழி வகுக்கும்.'

நன்றி தீம்தரிகிட

நல்ல ஜடியாதான்! ஆனா, தேர்தல் நாளன்று 'மெத்த' படித்த மக்கள் மெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு வரணுமே! இதைவிட நல்ல ஜடியா, ஓட்டுப் போடதவனுக்கு அரசியல் பத்தி பேச தகுதியில்லைன்னு நம்ம அரசியல் பெருந்தலைகளை விட்டு சொல்ல வைக்கணும். நடக்கிற காரியமா அது...?!

Friday, March 12, 2004

'மக்கள் மனசு' ஒரு தினுசு!

சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவின்னு எல்லா டிவிக்களும் பத்தரை மணிக்கு அப்புறம் வரும் ஸ்லாட்டை காமெடிக்கு ஒதுக்கியதை பார்த்து ஜெயா டிவியும் தன் பங்குக்கு எல்லாரையும் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறது, பதினோரு மணிக்கு 'மக்கள் மனசு' நிகழ்ச்சியின் முலம்!

தேர்தல் நிலவரத்தை ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் சென்று 'நடுநிலையுடன்' அலசுகிறார் ரவி •பெர்னார்ட். (எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!) இதில் நேத்து ராத்திரி அரக்கோணமும் மயிலாடுதுறையும்!

அரக்கோணத்தை பத்தி எது சொன்னாலும் வம்புதான். விசிலடிச்சான் குஞ்சான்னா அதாவது ரஜினியோட ரசிகன்னா இப்படித்தான் பேசுவாங்கன்னு நாம என்ன சொன்னாலும் காதுல வாங்கமாட்டாங்க!

மயிலாடுதுறைக்கு வருவோம்!

பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு தொகுதிகளிலும் அம்மாவை ஆதரித்து அலையே அடிக்குதுன்னு சொன்னபோது அடக்க முடியாமல் சிரிச்சுட்டேன்!

'பொங்கல், தீபாவளிக்கு அம்மாதான் அரிசி, சேலை, வேஷ்டி கொடுத்தாங்க. அதனால அம்மாவுக்குதான் ஓட்டு!'

'வாஜ்பாய்க்குதான் ஓட்டு!' (வாஜ்பாய்க்கு, மயிலாடுதுறை எங்கே இருக்குன்னு தெரியுமா?)

'தாமரைக்கு என் ஓட்டு' (தொகுதியை அம்மா பாஜகவுக்கு ஒதுக்கலைங்கிறதை கேள்வி கேட்டவராவது
ஞாபகப்படுத்தியிருக்க கூடாதோ?)

அம்மா ஆட்சியில ரோடு போட்டிருக்காங்கங்கிறதில ஆரம்பிச்சு எல்லாமே அபத்தமான காரணங்கள். பெரும்பாலும் கிராமப்பகுதியை சேர்ந்த மக்கள்தான் கருத்து சொல்வதிலும் முன்னுக்கு நின்றார்கள்?!

சீர்காழி பகுதியை சேர்ந்த ஒரு டாக்டர் மழை நீர் சேகரிப்பு திட்டம் பற்றி புகழ்ந்தது மட்டும்தான் இயல்பாக இருந்துச்சு!

நிகழ்ச்சியின் முடிவில் வழக்கம் போல 'மக்கள் தீர்ப்பு' அம்மாவுக்கு வெற்றிமுகம்னு சொன்னது.

அட போங்கப்பா!

சரி, நிஜமாவே மயிலாடுதுறையில் என்னதான் நிலைமை?

அதிமுகவின் ஓ.எஸ் மணியனை கட்சிக்காரங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனா மணிசங்கர் அய்யரை மக்களுக்கும் தெரியும் என்ற குமுதம் ரிப்போர்ட்டரின் குறிப்புதான் ஞாபகத்துக்கு வருது!

எந்தக்கூட்டணியிலும் இல்லாமல் 1996 தேர்தலில் சுயேச்சையாக நின்றே 60,000 ஓட்டு வாங்கிய மணிசங்கர் அய்யருக்கு சகல கட்சிகளின் ஆதரவோடு ஓட்டு வாங்கி ஜெயிப்பதில் பெரிய கஷ்டமில்லை. இம்முறை 'அம்மா ஆட்கள்' அடிச்சுட்டாங்கங்கிற அனுதாப அலை வேறு!

திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயமாக ஜெயிக்க வாய்ப்புள்ள ஒரே தொகுதியாக பலராலும் அடையாளம் காட்டப்படுவது மயிலாடுதுறை மட்டுமே.
தப்பித் தவறி காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைப் பிடித்தால் மணிசங்கருக்கு மினிஸ்டர் பிரமோஷன் நிச்சயம் என்றும் சொல்லப்படுகிறது. ஊர் முழுக்க தேர்தல் விளம்பரங்களில் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் மணிசங்கர் அய்யருக்கு விளம்பரம் எதுவும் தேவையில்லை.

பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் 'மணி' குரல் ஒலிக்க வாய்ப்பு அதிகம். அதற்காக அய்யர் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம்.... திரும்பவும் மயிலாடுதுறையை துபாயாக மாற்றுவேன்னு அச்சுப்பிச்சு மாதிரி உளறாம இருக்கிறதுதான்!

Saturday, March 06, 2004

மகாமக தரிசனம்

''கும்ப மேளாவில் நிறைந்திருந்த கூட்டத்தின் அளவையும் அமர்க்களத்தையும் பார்த்து நான் பிரமித்து விட்டேன். சுற்றும் முற்றும் தேடியும் எந்த மகானுடைய ஒளி பொருந்திய முகமும் எனக்கு தென்படவில்லை. இந்த திருவிழா இரைச்சலும், பிச்சைக்காரர்களும் நிறைந்த பெருங்குழப்பமே தவிர வேறொன்றுமில்லை என்று நினைத்திருந்தேன்.

பாபாஜி, மரத்தடியில் அவர் அருகில் இருந்த ஆசனத்தில் அமருமாறு சைகை செய்தவர், நான் இயல்பாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்பியதும் எனக்கு வெளிப்படையாக தெரிந்தது.

'கும்ப மேளாவை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?'

'நான் மிகவும் ஏமாற்றமடைந்துவிட்டேன் ஸ்வாமி! என்னவோ, மகான்களையும் இந்த அமர்க்களத்தையும் சம்பந்தப்படுத்தி பார்க்க முடியவில்லை'

'குழந்தாய்! மணலும் சர்க்கரையும் கலந்த கலைவையைப் போல இந்த உலகத்தில் அனைத்தும் கலப்படமானவையே! சர்க்கரையை மட்டும் எடுத்துக் கொண்டு மணலைத் தொடாமலே விட்டு விடும் எறும்புவின் புத்திசாலித்தனம் நமக்கு இருக்க வேண்டும். இங்கு சாதுக்களில் பலர் இன்னும் மாயையில் உழன்றாலும், இந்த கும்ப மேளா கடவுளை உணர்ந்த சில மகான்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது'

- பாபாஜி தரிசனம் பற்றி யோகானந்தர் தனது 'ஒரு யோகியின் சுயசரிதை' நு¡லில்...

********************************************************************************************

பிருஹ்ம விஷ்ணு சதாசிவ ஜானத அவிவேகா
ப்ரணவாக்ஷர கே மத்யே யஹ் தீனோம் ஏகா

உதடுகள் உச்சரித்துக் கொண்டே கலங்கலான குளோரின் தண்ணீரை கையில் ஏந்தி கிழக்கு பார்த்து சங்கல்பம் செய்து முழங்கால் மட்டுமே தண்ணீர் இருந்தாலும் முட்டிக்கால் போட்டு ஒரு முழுக்கு. பாதி து¡க்கம் கெட்டு பஸ்ஸில் நின்றுகொண்டே பயணம் செய்து வந்ததால் பாதிக்கப்பட்ட கண்களை சூரிய பகவானும் பதம் பார்த்துக் கொண்டிருந்தார். குளக்கரையின் ஊடே நடந்து இருபது தீர்த்தங்களில் ஏறக்குறைய பெரும்பாலான தீர்த்தங்களை தலையில் தெளித்துக் கொண்டே கரையேறும் போதுதான் கவனித்தேன். கரையெல்லாம் காக்கிப்பூக்கள்!

முன்று வருஷமாவே காக்கிச்சட்டையை பார்த்தாலே மிரண்டிருந்தவனுக்கு கனிவான முகமும் அக்கறையான அதட்டல்களும் புதிதாக தெரிந்தன. பத்தடிக்கு ஒரு போலீசார் வீதம் கும்ப மேளா காக்கி மயமாய் தெரிந்தது. மதுரை, நெல்லை, விருதுநகர், கோவை என்று விதவிதமான தமிழ் காக்கிச்சட்டைகளின் வார்த்தைகளில் விளையாடிக் கொண்டிருந்தது. விதவிதமான போஸ்டர்களில் பக்தர்களுக்கு வரவேற்பையும் எச்சரிக்கையையும் கொடுத்திருந்தது நகர காவல்துறை!

மகம் என்பது வருஷாவருஷம் மாசி மாதத்தில் வரும் வழக்கமான சங்கதிதான். அதுவே பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்போதுதான் மகாமகம் என்று விசேஷமான சங்கதியாகிவிடுகிறது. காவிரிக்கரையோர சிவத்தலங்களில் ஜப்பசி மாத தீர்த்தவாரி மிகவும் விசேஷமானது. வருஷாவருஷம் ஜப்பசி மாத கடைசி நாளன்று வரும் தீர்ததவாரி மாயவரத்தில் 'கடை முகம்' என்று கொண்டாடப்படும். பொதுவாக பல நதிகளும் தீர்த்தவாரி நேரத்தில் சங்கமிப்பதாக ஒரு ஜதீகம். திராவிடக்கட்சிகளின் எழுச்சியால் 1968க்கு பின்னர் வந்த மகாகமகங்களில் சுரத்து குறைந்தே இருந்திருக்கிறது. 1992 மகாமகமோ தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவமாக அமைந்துவிட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். போன மகாமகத்தால் மிரண்டு போயிருந்த கும்பகோணத்து மக்களை பத்து நாட்களும் குளத்தில் நீராடலாம் என்று காஞ்சி சங்கரச்சாரியார் புதுவிதி செய்ததிருந்ததால் நிறைய பேருக்கு நிம்மதி.

மகாமகக் குளத்திலிருந்து பொற்றாமரைக்குளம் நோக்கி ஒரு இரண்டு கிமீ பயணம். மகாமகக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே அரசு தத்தெடுத்திருப்பது பொற்றாமரைக் குளத்துக்கு வந்தபின்புதான் தெரிந்தது. முழுங்காலுக்கும் குறைவான தண்ணீர் இருந்த குளத்தில் இறங்கி மண்டபத்தை சுற்றி வந்து முழுக்கு போட்டுவிட்டு திரும்பவும் ஒரு இரண்டு கி.மீ பயணம் காவிரியை நோக்கி!

ஏறக்குறைய பதினைஞ்சு வருஷம் கழிச்சு காவிரி அன்னையின் மடியில் நான்! சின்ன வயசில் மாயவரம் துலாக்கட்டத்தில் அம்மாவின் கண்காணிப்பில் முழுக்கு போட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. திரும்பவும் இந்த வாய்ப்பு கிடைக்குமோ என்கிற ஏக்கமும் சில்லென்ற காவிரிநீரும் ஓரளவு சுத்தமான சக்கரப்படித்துறையின் தோற்றமும் ஆற்றில் ரொம்ப நேரம் நீராட வைத்தது.

மகாமகக்குளத்திலிருந்து காவிரி ஆற்றுப்படுகை வரை பக்தர்கள் வந்து சேர உதவும் காவல்துறைக்கு கோயிலுக்கும் பஸ் ஸ்டாண்டுகளை நோக்கி திரும்பும் மக்களை முறைப்படுத்தி அனுப்பத்தான் முடியவில்லை. ஆதி கும்பேஸ்வரர், ராமசாமி, சாரங்கபாணி என்று பெரும்பாலான கோயில்களில் தரிசன வரிசை வீதி வரை நீண்டிருந்தது. 'ஏண்டா, லோக்கல் ஆளு நீ! பொறுமையா வந்து என்னை தரிசனம் பண்ணக்கூடாதான்னு எல்லா கடவுள்களும் என்னை கேட்ட மாதிரி ஒரு ·பீலிங் மனசில் வந்து மணியடித்ததால் நேரே ஸ்டேஷனை நோக்கி ஜீட்!

கம்மிங் பேக் டு த பாயிண்ட்

பாபாஜி சொல்ற மாதிரி எறும்பு மாதிரி நடந்துக்கணும்னு நினைச்சாலும் நம்ம தமிழ்நாட்டு ஆளுங்களால முடியாது போலிருக்கிறது!

மகாமக குளக்கரைக்கு பக்கத்திலேயே அலங்கரமான மண்டபத்துடன் அண்ணா கம்பீரமாக கைநீட்டிக் கொண்டிருந்தார். அமைப்பு நகர திமுகவாம்! அண்ணாமலையாரை கும்பிடுவதுதான் முடநம்பிக்கை. அதுவே அண்ணாவாக இருந்தால் பகுத்தறிவு போலிருக்கிறது. குளத்தை சுற்றியிருந்த பெரிய கட்டிடங்களில் மெகா சைஸ் கட்அவுட்டுகளில் திராவிட பாராம்பரியத்தில் வந்த அம்மா சிரித்துக் கொண்டிருந்தார். காவிப்படைகளையும் காவிக் கொள்கைளில் அணுசரணையாக இருப்பவர்களையும் குறிவைக்கும் பிரச்சாரம் மாதிரி! அந்த வகையில் இது (அம்)மாகாமகம்தான்!

- கும்பகோணத்திலிருந்து ஜெ. ரஜினி ராம்கி.

Wednesday, March 03, 2004

உண்மைக்கு தெரியாதா உண்மை?

கல்யாண சந்தையில் செலவழிப்பதுதான் கெளரவம் என்கிற விதியை யாரும் மாற்றமுடியவில்லை என்று 'சிந்திக்க ஒரு நொடி'யில் ஸ்ரீரங்கம் சொன்ன செய்தியாக 'இந்தியா டுடே'வில் வருத்தப்பட்டிருந்தார் வாஸந்தி. சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட திருமணங்களை ஆடம்பரமாக நடத்துவதும் வயதானாலும் வரதட்சணை வாங்குவதற்கு தடையில்லை என்பதும் கல்யாணம் என்கிற புனிதமான சங்கதியை கேலிக்கூத்தாக்குகின்றன. வீடியோ எடுப்பது போன்ற ஆடம்பரங்களே வேண்டாமே என்ற வாஸந்தியின் ஆதங்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாவிட்டாலும் ஒரளவு பின்பற்ற முயற்சி செய்வதில் தப்பில்லை.
சரி விஷயத்துக்கு வருவோம். அக்னி வளர்ப்பது, தாலி கட்டுவது போன்றவற்றையும் தவிர்க்கலாமே என்று பிராமண வகுப்பை சேர்ந்த வாஸந்தியால் சொல்ல முடியாது என்று கருப்புச்சட்டைக்காரர்களின் 'உண்மை' இதழ் கிண்டலடித்திருக்கிறது. எனக்கு தெரிந்து பலமுறை வாஸந்தி இந்தியா டுடேவில் மதத்தின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனங்களை கண்டித்திருக்கிறார். அப்பொதெல்லாம் வாஸந்தியை பாராட்டி ஒரு வார்த்தை எழுதியது கிடையாது 'உண்மை'. தமிழ்நாட்டில் பிராமண வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு முடநம்பிக்கைகளை பற்றி எழுதவும் பேசவும் தகுதியில்லை என்கிற முடநம்பிக்கை ரொம்ப காலமாகவே இருந்து வருகிறது. எனக்கு 'பிராமண வகுப்பைச் சேர்ந்தவள்' என்கிற அடையாளம் ஒரு சிலுவை மாதிரின்னு ஒரு பேட்டியில் வாஸந்தி சொல்லியிருந்ததில் மறைந்திருக்கும் சோகத்தை இப்போதுதான் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.

- ஜெ. ரஜினி ராம்கி