Tuesday, August 31, 2004

காலச்சுவடும் காமாலை வியாதியும்

எந்தப் பத்திரிக்கையில் பெண்களின் கழுத்துக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட சமாச்சாரம் பற்றி அதிகமான கதைகள் வரும் என்று போட்டி வைத்தால் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறப்போவது காலச்சுவடுதான். முலைவரி கட்டாத பெண்களின் மேற்படி சமாச்சரத்தை அகற்றிவிட கட்டளையிட்ட அந்தக்காலத்து மன்னர்கள் பற்றிய கதைகள்தான் இருந்துவிட்டு போகட்டுமே....அதைப்பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வதால் சொஸைட்டிக்கு என்ன பிரயோசனம் என்றெல்லாம் அப்பாவியாக கேள்வி கேட்டுவிடாதீர்கள். நாம் படிப்பது இலக்கியம். சரோஜாதேவி டைப் கதையல்ல என்கிற உணர்வு உள்ளுக்குள்ளே இருந்தாதான் உண்மையான இலக்கிய ஆர்வலராக இருக்கமுடியும். படிக்கும்போது மனசுக்குள் மஜாவா இருந்தாலும் முகத்துல ஒரு சீரியஸ்னஸ் கொண்டுவரணும்.

முலைவரி வந்த (இன்ப) அதிர்ச்சி போதாது என்று நம்மூர் மகளிர் அணி வேறு படையெடுத்து பெண்குறியை பத்தியெல்லாம் சுதந்திரமாக எழுதி, பிறாண்டிவிட்டு போனது. அதையெல்லாம் எதிர்ப்பது பின்னாளில் ஆணாதிக்கமாகவும் மாறிப்போனது. அப்போது நமக்கேன் வம்பு என்று வாய்மூடிக்கொண்ட இலக்கியவாதிகள்தான் அதிகம். போன வருஷம் நடந்த இளைய தலைமுறையினருக்கான கதைப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆராய்ந்த பின்னர் முதல் பரிசை ஜே.பி. சாணக்கியாவின் படித்துறைக்கு கொடுத்துவிட்டு குஜால் பத்திரிக்கை என்கிற பெயரை தனக்கென்று பத்திரப்படுத்திக்கொண்டது காலச்சுவடு. அதற்கப்புறம் அவ்வப்போது காலச்சுவடு படிக்கும்போதெல்லாம் காமாலை வியாதி வந்துபோகிறது.

இப்போது ஒரு ஸ்டோரியின் கதை. எழுதியவர், இலக்கிய உலகில் பெரிய பிஸ்தாவான சுந்தர ராமசாமி. கதை ரொம்ப சிம்பிள். தெருமுனையில் ஒரு ஸ்தூபி வெடித்து அழகான ஒரு மங்கையின் சிலை வெளிப்படுகிறது. ஈகிள் பத்திரிக்கையின் நிருபர் அதையெல்லாம் கவர் செய்து போட்டோ எடுத்து பிரிண்ட் போடும்போதுதான் ஒரு விஷயத்தை கவனிக்கிறார். எல்லா போட்டோவிலும் மேற்படி சமாச்சாரம் இல்லையாம்! சுந்தர ராமசாமி, கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பது என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு புரியவில்லை என்றாலும் ஜிகுஜிகுவென்று வரும் வர்ணணைகள் மட்டும் நன்றாகவே புரிகிறது. சாம்பிளுக்கு சில. வாடாமல்லியையொத்த....

இந்த இடத்தில்தான் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் ஜே.ஜே. சில குறிப்புகள் எழுதிய ஆசாமிக்கும் வித்தியாசம் தெரியாமலே போய்விடுகிறது... ஒருவேளை என்னை மாதிரியான சில்லுண்டிகளுக்கு மட்டுமோ?!

Thursday, August 26, 2004

கம்பனும் கருப்புச்சட்டைகளும்

தமிழினக் காவலர் டாக்டர் வீரமணி, கம்பனுக்கும் கம்பன் விழாவுக்கும் நோ சொல்கிறார். காரணம்? கம்பன், இராவணன் என்கிற திராவிடனை வில்லனாக காண்பித்ததுதானாம்! பகுத்தறிவு அய்யா, ராமன் ஆரியன் என்றும் கைபர் கணவாய் கிராஸ் பண்ணி வந்தவன் என்றெல்லாம் ஏற்கனவே பிதற்றியவர்தான். இப்போது கம்பன் மீது பாய்ந்திருக்கிறார். (நன்றி - உண்மை மாத இதழ்)

கம்பன் என்ற புலவனைப் புகழ்வது, பாராட்டுவது, பெருமைப்படுத்துவது, அவனுக்கு விழா எடுப்பது என்பது, தமிழர், திராவிடப் பண்பாட்டையும், நாகரீகத்தையும் இழிவுபடுத்தும் மிகப்பெரிய பண்பாட்டுச் சீரழிவு ஆகும்!
கம்பன் அடிப்பொடிகளும், கம்பனைத் தூக்கி நிறுத்த முயலும் கொம்பன்களும் சிந்திக்க வேண்டும்.


காப்பி அடித்த கம்பனின் இராமன்- கடவுள் அவதாரம்!

“ஆரிய இராமனை உயர்த்தவே, இராவணன் அரக்கனாக்கப்பட்டான் - எதனால்? இராமன் தெய்வமாக்கப்படல் வேண்டும் என்பதற்காக” (‘இராவண காவிய’, மதிப்புரை) தந்தை பெரியார் அவர்கள் கம்பன் செய்த இனத் துரோகம்பற்றி ‘குடிஅரசு’ வார ஏட்டில் 1946-இல் எழுதினார்!

“வசிஷ்டர் இராமனிடம் சென்று கீழ்க்கண்டபடி (மனு) நீதி உரைக்கின்றார் - ‘எப்படி ஆட்சி நடத்த வேண்டும்’ என்று?”

“கரிய மாலினும் கண்ணுதல் ஆனினும்
உரிய தாமரை மேலுறை வானிலும்
விரியும் பூதமோர், அய்ந்தினும் மெய்யினும்
பெரியார் அந்தணர் பேணுதி உள்ளத்தால்!”

இதன் பொருள் (துளசிதாசர் இராமாயணத்திலும் இது உள்ளது) “திருமால், சிவன், பிரம்மா, அய்ம்பூதங்கள் இவை எல்லாவற்றிற்கும் மேல் ஒன்று உண்டு என்று சொன்னால் ‘உண்மை’ என்று தத்துவம் சொல்வார்கள். அந்த உண்மையை விட உலகில் உயர்ந்தவர் யார் என்றால் அவர் பார்ப்பனரே!
எனவே அவர்களை பார்ப்பனரை வணங்கி அனுதினமும் ஆட்சி நடத்து” என்று கம்பர் எழுதுகிறார் என்றால்.. இதைவிடக் கொடுமை - பச்சைப் பார்ப்பனீய வர்ணாசிரம உயர்வு பிரச்சாரம் வேறு உண்டா?

இந்தக் கம்பனை மானங்கெட்ட தமிழர்கள் தலையில் வைத்து விழாக் கொண்டாடுவதை விட இந்த இனத்தின் எழுச்சியைத் தடுத்து, மீட்சிக் கிடைக்காவண்ணம் வீழ்ச்சியுறச் செய்தல் வேறு உண்டா?


அட தேவுடா!

Monday, August 23, 2004

பெண் பெரியார்

பெண்களைப் பற்றிப் பேசுகிற எந்த இந்திய வரலாறும் தேவதாசிகளைப் பற்றிப் பேசாமல் இருந்துவிட முடியாது. தேவதாசி முறையை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த முன்னோடிகளில் முக்கியமானவர் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார். ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த போது வறுமையின் காரணமாக பத்து ரூபாய்க்கும் ஒரு பழம் புடவைக்கும் ஒரு தாசிப் பெண்ணிடம் விற்கப்பட்டவர். அவர் ஒரு இளம் பெண்ணாக வளர்ச்சி அடைந்த போது அவரை தாசித் தொழிலில் ஈடுபடுத்த மற்றவர்கள் முனைந்த போது சீறியெழிந்து பொட்டுக் கட்டும் வழக்கத்தை எதிர்த்துப் போராடியவர். சுய முயற்சியால் தமிழும் சமஸ்கிருதமும் படித்தவர். தமிழ் எழுத்தாளர். 'தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்' (1936) 'தமயந்தி' (1945) ஆகிய நாவல்களை எழுதியவர். புரோகிதர் மறுப்புக் கல்யாணங்களில் திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரங்களைச் சொல்லிக் காட்டி அதன் பொருள் என்ன என்று விளக்கும் அளவிற்கு சமஸ்கிருத அறிவு பெற்றிருந்தார். காங்கிரஸ் கொடியைப் பொது இடங்களுக்கு எடுத்துக் கொண்டுவரத் தடையிருந்த போது கொடியையே சேலையாக உடுத்திக் கொண்டு மேடையேறிப் பேசியவர். பெரியாரின் சீடர். இவரே ஒரு பெண் பெரியார்.

அது 1987ம் வருஷம் என்று ஞாபகம். கலைஞரை முதல் முறையாக அப்போதுதான் நேரில் பார்க்கிறேன். நகராட்சிப் பூங்காவில் புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை திறந்து வைக்க மயிலாடுதுறைக்கு வந்திருந்தார். மேடையில் உள்ளூர் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே உதவியாளர் கொண்டுவந்த ஒரு பொருளன்றை பிரித்து வாயில் போட்டுக் கொள்கிறார். 'பாருப்பா... சாக்லேட் சாப்பிடுறாரு...' ஆச்சரியமாய் நானும் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அது சாக்லேட் அல்ல விக்ஸ் என்பது ரொம்ப வருஷம் கழித்துதான் தெரிய வந்தது. கலைஞர் திறந்து வைத்த கட்டிடமும் பழசாகிப் போய் போன வாரம் மயிலாடுதுறை நகராட்சியினர் இடித்து இம்சித்துக் கொண்டிருந்தார்கள். சொல்ல மறந்து விட்டேன். அந்த விக்ஸ் மாதிரியே நான் மிஸ் பண்ணிய இன்னொரு விஷயம், அந்த கட்டிடத்திற்கு கலைஞர் சூட்டியிருந்த பெயர்! மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வணிக வளாகம்.
யார் இந்த மூவலூர் அம்மையார்? இப்படித்தான் பெரியாரும் ஆரம்பத்தில் கேட்டிருப்பார். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் பெண் பேச்சாளராக இருந்தவர் ராமாமிர்தம் அம்மையார். மயிலாடுதுறைக்கு அருகில் மூவலூர் கிராமத்தில் பிறந்து வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை பெரியாரின் உண்மையான சீடராகவே இருந்தவர் என்பதை விட இன்னொரு ஆச்சரியமான விஷயமிருக்கிறது. ராமாமிர்தம் அம்மையார் அடிப்படையில் தாசி குலத்தை சேர்ந்தவர். தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக விரட்டியடிக்க தீவிரமாக இருந்தவர்.
சோழர்களுக்கு பிந்தைய காலத்தில் தஞ்சை மாவட்டம் அந்நியர்களின் வருகையால் கலாச்சார பண்பாட்டு சிதைவுக்கு உள்ளாகி அடிமைப்பட்டு அடங்கி கிடந்த நேரம்தான் தேவதாசி முறை உச்சத்தில் இருந்த நேரம் என்று சொல்கிறார்கள். உள்ளூர் நிலவுடைமை பண்ணையார்களின் ஆளுகை பல விபரீதங்களை ஏற்படுத்தி வைத்திருந்தது. நல்ல தலைவர்களெல்லாம் அந்நிய சக்திகளின் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரண்ட குரல் கொடுத்துக் கொண்டிருந்தபோது சமூகத்தில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளை கண்டும் ஒரு கூட்டம் பொங்கியெழுந்தது. அவர்களுக்கு சுயமரியாதை பிரச்சாரங்கள்தான் துணை நின்றன. தேவதாசி குடும்பத்தில் பிறந்து குலத் தொழிலை வெறுத்து ஒதுக்கி அப்படிப்பட்ட பெண்களின் நிலையை சமூகத்தில் உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் ராமாமிர்தம் அம்மையாருக்கு தீவிரமாக எழுந்தது. டாக்டர் முத்து லெட்சுமியின் துணையும் அவருக்கு கிடைத்தது. தேவதாசிகள் முன்னேற்ற சங்கமும் உருவாகி முழுமூச்சாக களமிறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மேடையேறிப் பேசவே மக்கள் தயங்கிக் கொண்டிருந்த காலத்தில் முதன் முதலில் மேடையேறி சுயமரியாதை பிரசங்கம் செய்த முதல் பெண் இவராகத்தான் இருக்கமுடியும். தாசி குலத்தொழிலாக தொடர உள்ளூர் ஆதிக்க சக்திகளான பண்ணையார்களும், செல்வந்தர்களும்தான் காரணம் என்பதை ராமார்மிதம் அம்மையார் தனது எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ஜோதிடம், மந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை எதிர்த்து மேடையேறி முழுங்கி பெரியாரின் முழுமையான சிஷ்யையாகவும் இருந்திருக்கிறார். தாசிகளே இல்லாத தமிழகத்தை உருவாக்குவதில் திராவிட இயக்கத்திற்குதான் முக்கிய பங்கு இருந்திருக்கிறது.
தேவதாசிகளை ஒழிப்பதில் தேசிய அளவில் காந்திஜியுடன் முன்நின்றவர்களில் பெரியார் ராஜாஜி, திரு.வி.க. டாக்டர் முத்துலெட்சுமி, வரதராஜுலு நாயுடு என்கிற தலைவர்களின் பெரிய லிஸ்ட்டில் திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போன்ற கலைஞர்களையும் நாம் சேர்த்தாக வேண்டும். அவற்றில் கடவுளுக்கு தாலி கட்டி விட்டு பக்தர்களிடம் போவது என்று தாசிகளையும் விமர்சித்துவிட்டு எத்தனை புருஷரோடு சல்லாபித்தாலும் விபசார தோஷமில்லை என்று தாசிகளை ஊக்குவிக்கும் சமூகத்தையும் விமர்சித்து நடுநிலையான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் ஒருவர் ராமாமிர்தம் அம்மையார்.
தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ குற்றம் என்பதிலிருந்து தேவதாசி முறையை ஒழித்து விடுவது புராதான இசைக்கலையான பரதநாட்டியத்துக்கு இழுக்கு என்றெல்லாம் பேசியவர்கள் பிற்பாடு ராமாமிர்தம் அம்மையாரின் மேடைப் பேச்சுக்கு பயந்தார்கள். பெண்கள், தெய்வங்களாக போற்றப்படுகிறார்கள் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. தாசிகளும் பெண்கள்தானே....அவர்களுக்கு சமூகத்தில் ஏன் சம அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்று ராமாமிர்தம் அம்மையார் முன்வைத்த கேள்விகள்தான் இன்று தேவதாசி முறை முற்றிலுமாக ஓழிவதற்கு காரணம். தேவதாசிகளின் அலங்கோலமான வாழ்க்கைமுறையை வெளிப்படையாக மக்களுக்கு சொன்னதும் இவர்தான். இருந்தும் சமூகத்தில் தாசிகள் கீழ்த்தரமான மக்களாகவே நடத்தப்பட்டார்கள். ஐம்பதுகளின் இறுதிவரை தமிழ் சினிமாவின் வில்லன் பாத்திரம் பெரும்பாலும் தாசிகளாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
ராமாமிர்தம் அம்மையாரின் கருத்துப்படி திருமணம் என்பது சுயம்வரம் நடத்தி மணமகள், மணமகனை தேர்ந்தெடுப்பதுதான். நமது கலாச்சாரம், காதலை அடிப்படையாக கொண்டது என்கிறார் அவர். கட்டாய திருமணங்கள்தான் தாசிகள் என்கிற அமைப்பையும் விபச்சாரத்தையும் நமது கலாச்சாரத்துக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது என்பது அவரது நம்பிக்கை. தாசிகளுடன் சேர்ந்து இருந்ததன் காரணமாக அவர்களைப் பற்றிய உளவியல் ரீதியிலான புரிதல்களும் அவருக்கு இருந்தது.
தாசித் தொழில் ஒரு வியாபார முறை. தாசியிடம்போதுமான அளவு பணம் சேர்ந்தாலும் தொழிலை விட முடியாது. என்கிற யதார்த்ததையெல்லாம் அறிந்து வைத்திருந்தார் அவர். காம உணர்ச்சியை எழுப்பும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்கிற அவரது கருத்து தாசித் தொழில் ஊக்குவிக்கப்படக்கூடாது என்கிற ஆதங்கத்தால் விளைந்தது என்றுதான் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தேவதாசிகள் என்கிற கருத்தியலே ஆரியர்களின் வருகைக்கு அப்புறம்தான் என்றெல்லாம் திராவிட இயக்க ரீதியிலான கொள்கைகளையே இவரும் முன்வைக்கிறார். தேவதாசி, பரத்தை என்கிற நடைமுறைகளெல்லாம் ஆரியர்களின் படையெடுப்புக்கு முன்னாலே இருந்திருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
ஆனால் தாசிகள் கோயில்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளூர் பெரியவர்களுக்கு விருந்தாக்கப்பட்டது மேல் சாதியினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில்தான். கோயில் குருக்களிலிருந்து செல்வந்தர்கள் வரை ஆண்டவனின் பெயராலும் கலையின் பெயராலும் பெண் சமூகத்தை விபசாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டிருந்தது. தமிழகத்தின் கலாசார நடனமான பரதநாட்டியத்திற்கும் இழுக்கு வந்ததற்கு சில சுயநல சக்திகளின் பெண் பித்துதான் காரணம்.
தனக்கு கடவுள் நம்பிக்கையில்லாமல் போனதற்கு ராமாமிர்தம் அம்மையார்சொல்லும் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது. தேவதாசி முறையை பண்டைக்கால சித்தர்களும் சாமியார்களும் கண்டிப்பதை விட சுயமாரியாதைக்காரர்கள்தான் கண்டித்துவிட்டார்கள். அதானால்தான் தான் கடவுளை மறுத்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து கொண்டதாக சொல்கிறார். கடவுள் உண்டா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாத ஒன்றை பற்றி நாம் ஏன் பேசவேண்டும்? கண்ணுக்கு தெரிந்த விஷயங்களையும் பிரச்சினைகளையும் மட்டுமே பேசுவோம் என்கிற அவரது கருத்தும் நியாயமான விஷயம்தான்.
ராமாமிர்தம் அம்மையாரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. அவரது போட்டோவை கூட மயிலாடுதுறை திமுக கட்சி அலுவலகத்தில் பார்த்த மாதிரி ஞாபகம். ஆணுக்கும் பெண்ணும் அறிவு போன்றவற்றில் வித்தியாசமில்லை என்பது மாதிரி சம்சாரிக்கும் தாசிக்கும் வாழ்க்கையில் எவ்வித வித்தியாசமில்லை என்கிற அம்மையாரின் கருத்தை படிக்கும்போது பாரதி கண்ட புதுமைப்பெண்ணாகத்தான் அவரை பார்க்கத் தோன்றுகிறது.

Courtesy : www.thisaigal.com

Monday, August 16, 2004

ஓசாகாவில் உறையும் தமிழ்



டெட்சுனொசுகெ - பெயரைச் சரியாக சொல்ல மட்டுமல்ல இவரிடம் பேசவும் கஷ்டப்படவேண்டும். ஒரு ஐப்பான்காரரிடம் ஜப்பானிஸ், இங்கிலீஷில் பேசுவதற்கு அல்ல. தமிழில் பேசுவதற்குத்தான்! உரைநடை தமிழில் வெளுத்து வாங்குகிறார். டெட்சுனொசுகெ, ஜப்பானின் ஓசாகா நகரில் சொந்தமாக கடை வைத்திருக்கிறார். எங்களது வலைத்தளத்தின் (www.rajinifans.com) உறுப்பினர். இணையத்தின் மூலம் ஓரளவு பரிச்சயம் இருந்தாலும் நேரில் பார்த்தபோதுதான் தமிழ் மீதும் ரஜினி மீதும் டெட்சுனொசுகெ வைத்திருக்கும் பிரியத்தை புரிந்து கொள்ள முடிந்தது. http://www.osaka-rajni.net/

ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தவனை இடைமறித்து தனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது என்று இலக்கிய சுத்தமாக தமிழில் பேச ஆரம்பித்தார். கூடவே ·பாலோ அப் பண்ணி சரளமாக உரை நடை தமிழில் பேச என்னால் முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை. நம்மூர் சேட்டுகள் மாதிரி தமிழ் பேசுவார்கள் என்று நான் நினைத்திருந்ததை தவிடு பொடியாக்கினார்கள். தமிழில் பேசுவதோடு எழுத படிக்கவும் தெரிந்திருக்கிறது.

டெட்சுனொசுகெ, கூட வந்திருந்த மனைவியையும் மற்ற உறவினர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். எல்லோருமே ஓரளாவது தடுமாறியாவது தமிழில் பேசுகிறார்கள். 'எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும்' என்கிற வாசகத்தோடு ரஜினி படம் போட்ட டீஷர்ட்டில் குறுக்கும் நெடுக்குமாக அலைவதை பார்த்து அருணாச்சலா இன் ஹோட்டல் ஊழியர்கள் அதிசியமாகத்தான் பார்க்கிறார்கள். வைரமுத்து, செந்தில், மீனா, ஜனகராஜ் என்று தமிழ் கலைஞர்களை ரொம்பவும் ரசிக்கிறார்கள். காலையில் வைரமுத்துவை சந்தித்துவிட்டு மதியம் ஜனகராஜை பார்த்துவிட்டு சாயந்திரம் கில்லி படம் பார்த்துவிட்டு இப்போதுதான் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள் என்கிறார் அவர்களுடன் கூடவே இருக்கும் மதன்.

நிஐமாகவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவை முக்கியமாக ரஜினி படங்களை ஐப்பானில் எப்படி ரசிக்கிறார்கள் என்பது அல்ல. (இதே கேள்வியை பாரதிராஜா கேட்டு இவர்கள் சொல்லியிருக்கும் பதிலை கூடிய சீக்கிரம் செல்வமணியின் தமிழ் திரை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கலாம்!) ஆச்சரியப்பட வேண்டிய விஷயம், தமிழ்க் கலாசாரம் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஜப்பானியர்கள் காட்டும் ஈடுபாடு.

தமிழகத்தின் ஆன்மீக விஷயங்கள், உணவுவகை, பொழுதுபோக்கு, சினிமா மற்றும் தியேட்டர் கலாசாரம் எல்லாமே ஐப்பானியர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொள்வதற்காகவே மெனக்கெட்டு அங்கேயே தமிழ் கற்றுக்கொள்கிறார்கள். பரதநாட்டியத்தை ரொம்பவும் ரசிக்கிறார்கள். நல்லவேளை தமிழ்நாட்டின் அரசியல் இன்னும் அத்துப்படியாகவில்லை. அரசியலை பத்தி எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தையும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தரிசித்து வந்தது பற்றி பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். வலைத்தளமெல்லாம் தமிழில் இருந்தால் தங்களுக்கு படிக்க வசதியாக இருக்கும் என்கிறார்கள். வைரமுத்து ரஜினிக்காக எழுதிய பாடல்களை அட்சரம் பிசகாமல் பாட தெரிகிறது.

கிளம்பும்போது ரஜினி படம் போட்ட டீஷர்ட், ஸ்டிக்கர் என்று நம் கைகளில் திணித்து நன்றி சொல்கிறார்கள். அவர்கள் ஸ்டைலில் நாம் குனிந்து வணக்கம் சொல்ல முயல்வதற்கு முன்பாகவே நம்மூர் ஸ்டைலில் இருகரம் கூப்பி நன்றி சொல்கிறார்கள். கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி தன்னுடைய விசிடிங் கார்டை கொடுத்துவிட்டு செளந்தர்யாவை ரொம்பப் பிடிக்கும் என்கிறார். விசிடிங் கார்டில் கண்ணை மூடியபடி கலர்·புல்லாக செளந்தர்யா!

இன்னொரு வயதானவர் தன்னை ரஜினியின் ரசிகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். (ஆளைப் பார்த்தால் ஐம்பதுகளில் இருப்பவர் போல தெரிகிறது!) தனக்கு தமிழில் பேசவும் படிக்கவும் தெரியும் என்றாலும் சரளமாக பேச வராது என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன விஷயம் கேட்டு எனக்கு மயக்கம் வராத குறைதான்.
'ஜக்குபாய் ரீலிஸ்....அப்போது....எ(ன்)னால் நன்றா(க) தமிழ் பேச முடியும்!'

Wednesday, August 11, 2004

தமிழ்நாடு கமர்ஷியல் காம்பளக்ஸ்

அறிவாலயம் பூக்கடை

இங்கே சகலவிதமான உதிரிப் பூக்களும் கதம்ப மாலைகளும் கிடைக்கும். காவி நிறத்தில் இருக்கும் கனகாம்பரம் தற்சமயம் விற்பனைக்கு இல்லை. பூக்கடையாக இருந்தாலும் சைடில் கருவேப்பிலை வியாபாரமும் உண்டு. எலெக்ஷன் நேரத்தில் மட்டும் ரேட் எக்குத்தப்பாய் இருக்கும். அப்பா, பிள்ளை, மாமா, மச்சான் என் சகலரும் ஓரே கடையில் வேலை பார்ப்பதால் படு சுறுசுறுப்பான சர்வீஸ் உண்டு. பூமாலைகளில் ஜிகினா வேலைப்பாடு படு நேர்த்தியாக இருக்கும். கல்யாணமோ, இழவோ எதுவாக இருந்தாலும் எல்லோரும் கடைக்கு வந்துதான் ஆகவேண்டும்.

லாயிட்ஸ் ரோடு காய்கறி மார்க்கெட்

பச்சை காய்கறிகள் சகாய விலைக்கு கிடைக்கும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தவிர அனைவருக்கும் ஒரு கிலோ காய்கறி இலவசமாக வழங்கப்படும். பூக்கடை பக்கம் போகாத எவருக்கும் பிரியாணி பொட்டலம் கூப்பிட்டுக் கொடுக்கப்படும். சுண்டைக்காய், முந்திரி கொட்டை, கத்தரிக்காய் போன்றவை எப்போதும் விற்கப்பட மாட்டாது. தற்சமயம் மாம்பழம் விற்பனைக்கு இல்லை. காய்கறிக்காரரே நேரடியாக களத்திலிறங்கி விற்பனை செய்வார். கடைக்காரர் கொஞ்சம் முசுடு என்பதால் கத்தரிக்காயின் காம்பு மாதிரி புடலங்காய் கூட சுருண்டுதான் கிடக்கும்.

தைலாபுரம் மெடிக்கல்ஸ்

தவறான மாத்திரைகளாக இருந்து உயிரும் போய்விட்டால் தாராளமாக சவுக்கடி கொடுக்கலாம். சினிமாக்காரர்களுக்கு இலவசமாக பேதி மருந்து கொடுக்கப்படும். மரம் வெட்டும் தொழிலாளர்களுக்கும் இன மான காவலர்களுக்கும் இலவசமாக பேண்டேஜ் வழங்கப்படும். ஜாதியுணர்வு ரத்தத்தில் இருந்தால் மெடிக்கல் சீட் வாங்கித்தரப்படும். எலெக்ஷன் நேரத்தில் சூழ்நிலைக்கு தகுந்தபடி பூ வாங்கினாலோ காய்கறி வாங்கினாலோ கன்ஸஷன் தரப்படும். வியாபாரத்தை கெடுக்க வருபவர்களுக்கு கடை வாசலிலேயே எளிய முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

தேனாம்பேட்டை மளிகைக்கடை

இங்கு உப்பு, புளி, மிளகாய் போன்றவை டெல்லி ஆபிஸின் ஆர்டரின் பேரில் வழங்கப்படும். எலெக்ஷன் நேரம் தவிர எப்போதும் கடை மூடப்பட்டே இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து தேவையானதை எடுத்துக்கொள்ளும் வசதி உண்டு. கடையின் உண்மையான நிர்வாகி பற்றிய குழப்பம் நீடிப்பதால் தற்சமயம் கடையின் சாவி, பூக்கடைக்காரரின் கைவசம். கடையிலிருந்து வரும் கூச்சல், கதறல், கொடும்பாவி எரிப்பு சண்டைகளையெல்லாம் கஸ்டமர்கள் கண்டுக்காமல் இருப்பது நலம்.

மயிலாப்பூர் லேத் பட்டறை

இங்கு சகலவிதமான கத்தி, கடப்பாறை, கழி போன்றவைகளும் காக்கி டவுசர்களும் வாடகைக்கு கிடைக்கும். வார இறுதிகளில் கடையின் வாசலில் இலவச தியானம், யோகா வகுப்புகளும் உண்டு. அதே நேரத்தில் கடையின் உள்ளே மோடி மஸ்தான் வித்தைகளும் கற்றுத் தரப்படும். ஷைனிங் காட்டுபவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

கலிங்கப்பட்டி போட் சர்வீஸ்

இங்கே சகாய விலைக்கு படகுகளும் ஸ்பீக்கர்களும் வாடகைக்கு கிடைக்கும். ஏற்கனவே பூ கட்டுவதில் அனுபவமுள்ளவர்களால் படகுகள் கட்டப்படுவதால் வேலையில் நேர்த்தி ஜாஸ்தி. படகுகள் தண்ணீரில் விடப்பட்டதும் இலங்கையை நோக்கி செல்வதுபோல் வடிவமைக்கப்படுவது தனிச்சிறப்பு. திக்கு தெரியாமல் படகு ஓட்டவேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு டிரெயினிங் கொடுக்க நிறைய அனுபவஸ்தர்களும் உண்டு.

ஜக்குபாய் அடகுக்கடை

இங்கே சகல விதமான கோபங்களும் அரசியல் ஆசைகளும் அடகு வைக்கப்பட்டு ஆண்டவனுக்கு அனுப்பப்படும். அடகுப்பொருள் மூழ்கிப் போனாலும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

Monday, August 09, 2004

பத்திரிக்கை சுதந்திரமும் பாட்டாளி மக்கள் கட்சியும்

சென்ற வருடம் ஜனநாயகத்தின் தூண்களின் ஒன்றாகிய பத்திரிகையின் குரல்வளை நெரிக்கப்பட்டதற்க்காக நாடே அமளிப்பட்டது. காபி கிளப்பிலும் அனல் பறந்தது. தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும், கொதித்து எழுந்தன. நேற்று தமிழ்நாட்டில் ஒரு தினசரி தாக்கப்பட்டிருக்கிறது. அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இந்தமுறையும் ஆளும் கட்சியினாரால்தான் தாக்கப் பட்டிருக்கிறது, ஆனால் மத்தியில் உள்ளஆட்சியினரால். மாநிலத்து எதிர்க்கட்சியினரால். ஆனால் அதற்காக கண்டனம் தெரிவிப்பதற்கோ, அனுதாபம் தெரிவிப்பதற்கோதான் ஆளில்லாமல் போய் விட்டது. என்னஇருந்தாலும் தினமலர், கேவலம், ஒருசாரார் நடத்தப்படும் தமிழ் நாளிதழ்தானே?

சென்ற முறை பத்திரிகை சுதந்திரம் பறி போனபோது, ஜனநாயகக் காவலன், பத்திரிகைகளின் காவலன், தமிழ்நாட்டின் தானைத்தலைவன் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தினார். மனிதச் சங்கிலிகள் என்ன, ஊர்வலங்கள் என்ன, டெல்லிக்குப்படையெடுப்பென்ன என்று பத்திரிகைச் சுதந்திரத்தைக் காக்க தனது தள்ளாத வயதிலும்போராட்டம் நடத்தியதைக் கண்டு நாடே புல்லரித்துக் கிடந்தது. ஆனால் இன்று ஒருமுணுமுணுப்பைக் கூடக் காணோம். ஒரு வேளை, கடலூர் பதிப்பகம் ஒன்றுமட்டும்தானே தாக்கப்பட்டுள்ளது, மற்ற கிளைகளையெல்லாம் கொளுத்தாமல் விட்டு விட்டார்களே என்ற வருத்தத்தில் உள்ளாரோ என்னவோ இந்த பத்திரிகை உலகக்காவலர்? அல்லது அவரது கண்டனச் செய்திகள் என் கண்ணுக்குத்தான் படவில்லையோஎன்னவோ?

நாளைக்கு, உடன் பிறப்பே, நயவஞ்சகர்கள் போடும் நாடகத்தினைநம்பி, மீண்டும் அந்தப் பாழாய்ப்போன பத்திரிகையைப் படிக்கத் துணிந்திடாதே, அருமை நண்பர் ராமதாஸ் தமிழர் மானம் காக்கப் புறப்பட்டிருக்கிறார், அதற்குத் தோள் கொடு,எனக்குத்தான் வயதாகிவிட்டது அந்த நாட்களில் குமுதத்தையும், துக்ளக்கையும், நவசக்தியையும் நாங்கள் அடித்து நொறுக்கிய அளவிற்கு, ராமதாஸின் தொண்டர்கள் செயல்படவில்லையெனினும், எதோ தமிழர்கள் மானம் காக்க தன்னால் ஆன தொண்டினைசெய்துள்ளார்கள், அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லையெனினும், கனவில் கூட கண்டித்துவிடாதே என்று தம்பிகளுக்கு கடிதம் எழுதினாலும் எழுதுவார். ஏற்கனவே தினமலரைப்படித்திடாதே என்றும் வாங்கிக் கொளுத்து என்றும் சனநாயக முறைப்படி கட்டளையிட்டகலைஞர்தான் அவர். அவர் மொளனத்திலும் எனக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை.

முதலைமைச்சரைப் பொருத்தவரை ஒன்றும் பெரிதாகக் குற்றம் சொல்லிவிடமுடியாது. 'நமது எம்ஜியார்' தவிர வேறு எந்தப் பத்திரிகை தாக்கப் பட்டாலும் அவருக்குமகிழ்ச்சியே. ஆக அவரைப் பொருத்தவரை இரட்டை நிலை எல்லாம் கிடையாது. என்றுஒரே நிலையே. மேலும் ராமதாஸ் அடுத்த தேர்தலின் பொழுது மீண்டும் உடன் பிறவாசகோதரராக மாற மாட்டார் என்று என்ன நிச்சயம்? அதனால் அம்மாவும் அடக்கி வாசிக்கிறார். புரிகிறது.

'ஹிந்து' பிரச்சினையின் போது எமர்ஜென்ஸி என்று ஒன்றே நடவாதது போல் இந்தகாங்கிரஸ்காரர்கள் குதித்த குதி இருக்கிறதே. அடடா, சும்மா சொல்லக்கூடாது. அந்தஇளங்கோவனும், வாசனும், சோ பாவும் இன்றைக்கு எங்கு காணாமல் போய் விட்டார்களோ தெரியவில்லை. அடித்தது அம்மையார் அல்லவே, எங்கள் கூட்டணிக் கட்சிதானே, இதற்கெல்லாம் போயா கண்டனம் தெரிவிப்பார்கள். அட போங்கப்ப்பாஎங்களுக்கு, கிழிஞ்ச வேட்டிகளை தைக்கவே நேரத்தைக் காணோம் என்றுகூறி, அன்னையைத் தரிசிக்க டெல்லிக்குப் போய் விட்டார்கள் போலும்.

ஆக, மிஞ்சி உள்ள வை கோ,கணேசன், நல்லக்கண்ணு, மற்றும் பல லெட்டர் பேடுகட்சியினர், ஒப்புக்கு ஒரு கண்டனம் தெரிவித்து விட்டுத் தன் ஜனநாயகக் கடமையைமுடித்துக் கொண்டு விட்டர்கள், அவர்களும் மருந்துக்குக்கூட மருத்துவரைக் கண்டிக்கவில்லை. ராமதாஸின் அட்டூழியங்களையும், ரவுடித்தனத்தையும், அரஜாகங்களையும்,கண்டிப்பதற்கு இந்தியாவில் நாதியே இல்லாமல் போய் விட்டது.

ஒரு வேளை இதெல்லாம் பெரிது படுத்தக்கூடிய ஒரு விஷயமே இல்லையோ? தமிழகசட்டசபையின் சர்வாதிகாரத் தீர்ப்பின் மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப் பட்டபொழுதுமட்டும்தான், எல்லோரும் சேர்ந்து எதிர்ப்பார்களோ என்னவோ? அல்லது ஜெயலலிதாசெய்தால் மட்டும்தான், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கப் புறப்பட வேண்டுமோஎன்னவோ? மற்றபடி பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டாலோ, நிருபர்கள்கொல்லப்பட்டாலோ, கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டுமோ என்னவோ? ஒருவேளை நான்தான் விவரம் தெரியாமல் எழுதுகிறேனோ என்று பலத்த சந்தேகத்துக்கிடையில் இதை எழுதுகிறேன். பத்திரிகைக் குரல் வளையை நெரிக்கும் கையைப்பொறுத்துதான் எதிர்க்க வேண்டுமா அல்லது கண்டு கொள்ளாமல் விட வேண்டுமாஎன்பது முடிவு செய்யப்படும் போலிருக்கிறது.

ஜெயலலிதா சட்டசபையில் உள்ள தன் பலத்தை துர்ப்பிரயோகம் செய்து ஹிந்துப் பத்திரிகை மீது நடவடிக்கை எடுத்தற்கு சந்றும் குறைந்ததல்ல இந்த அராஜகம். மத்தியில்ஆளுவதாலும், இவர் கட்சியின் தயவு மத்திய அரசுக்கு தேவை என்பதாலும், ராமதாஸின்இந்த ரவுடித்தனமும், அதிகாரத்திலுள்ள மமதையின் வெளிப்பாடே. என்னைப் பொருத்தவரை, ஹிந்து பிரச்சினையில் ஜெயின் எதோச்சதிகாரம் கண்டிக்கப் பட்டது போன்றே,ராமதாஸின் இந்த அராஜகமும் கண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். அன்று மாநில அரசு,இன்று மறைமுகமாக மத்திய அரசு பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குகிறது.

ஐயாவை எதிர்ப்பவர்கள் யாராயினும் அடி, உதை, வெட்டுக் குத்துதான். அப்படி அடிஉதை விழுமளவிற்கு என்ன எழுதி விட்டது தினமலர்? இவரது அன்பின் மணியான வாரிசு, மத்திய அரசில் கேபினட் மந்திரி. அதுவும் சுகாதரத்துறை மந்திரி. அதுவும் முறையாகமருத்துவருக்குப் படித்த மந்திரி (இவர் நிஜமாகவே எதுவும் மருத்துவக் கல்லூரியில்படித்தாரா அல்லது சோனியா, ராகுல், தயாநிதி வரிசையில் எதுவும் டுபாக்கூர் டிகிரியாஎன்று பலத்த சந்தேகம் எனக்கு உள்ளது). அப்படிப் பட்ட மாண்புமிகு மருத்துவம்படித்த மந்திரி, தொழுநோய் ஒரு தொற்று நோய் என்று மேல்சபையில் அறிவித்து விட்டார், அதுவும் ஒரு முறை அல்ல இரு முறை. மருத்துவம் படிக்காத ஜோஷியும், சுஷ்மாவும் திருத்த வேண்டி வந்தது. இந்த உண்மையை தினமலர் செய்தியாக வெளியிட்டு அன்பு மணியின் தகுதியையை வெட்ட வெளிச்சமாக்கியதற்குத்தான் இந்தத் தாக்குதல்.என்னதான் செயலாலர்கள் எழுதிக் கொடுத்ததை இவர் படித்ததாக வைத்துக்கொண்டாலும், முறையாக மருத்துவம் படித்த ஒரு மந்திரி திருத்திப் படித்திருக்கவேண்டுமல்லவா? அட அப்படியே ஒரு டென்ஷனில் படித்திருந்தாலும், இரண்டாம் முறைதிருத்தியிருக்க வேண்டுமா அல்லவா? அதே தவறை மீண்டும், மீண்டும் செய்ததிலிருந்தும் இவரது அடிப்படைக் கல்வி மற்றும் அறிவு குறித்தே கேள்வி எழுகின்றது.

இதேதவறை முந்தய சுகாதார மந்திரியாகிய சத்ருகன் செய்திருந்தாலாவது மன்னித்து விடலாம். அவர் ஒரு நடிகர் மட்டும்தான், டாக்க்ட்ட்டர் சத்ருகன் சின்கா அல்ல. அன்புமணிபுரிந்த தவறை தினமலர் வெளியிடுகிறது. இந்தச் செய்தியில் உண்மையில்லாதிருந்திருக்கும்பட்சத்தில், ராமதாஸ் முறையாக வழக்குத் தொடர்ந்திருக்கலாம். அல்லது அன்புமணி தன்தவறை பெருந்தன்மையாக, அது ஒரு தகவல் பிழை, பின் நான் சரி செய்து விட்டேன்என்று பதிலளித்திருக்கலாம்.

பா மா க வின் அரஜாகம் தொடர்ந்து அத்து மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மரம்வெட்டினார்கள், மனிதனை வெட்டினார்கள், படப்பெட்டியைக் கொளுத்தினார்கள், பத்திரிகைகளைக் கொளுத்தினார்கள், எல்லாவற்றையும் சுயநலம் பிடித்த பிற அரசியல்வாதிகளும், யாருக்கு வந்தால் எனக்கென்ன என்று மக்களும், கண்டிக்காமலும்,கண்டுகொள்ளாமலும் செல்கிறார்கள். இந்த விஷ வித்தை முளையிலேயே கிள்ளி எறியாததன் விளைவு எதில் முடியப்போகிறதோ? வன்னியர்களின் பாதையில் நாளைதேவர்களும், நாடார்களும், கவுண்டர்களும் சென்றால் தமிழ்நாடு தாங்குமா?

எனக்கும் கூட தினமலரின் ஒரு சில செய்தி வெளியிடுமும் முறைகளில் ஒப்புதல் கிடையாது. இன்று ஒரு அநாதைப் பத்திரிகை போல் பரிதாபமாக நிற்கிறது. இன்று தமிழகப்பத்திரிகைகளிலேயே அதிகம் தாக்கப் பட்ட, பாதிக்கப் பட்ட நாளிதழ் தினமலராகத்தான்இருக்கும் என நினைக்கிறேன். ஒரு முறை சக நாளிதழ் ஒன்றின் ஊழியர்களேகுண்டர்களாக மாறித் தாக்கினார்கள். ஒரு முறை குண்டு வைக்கப் பட்டது.இதையெல்லாம் யாராவது கண்டிக்கலாம் என்று பார்த்தால், பாவம் அது ஒரு ஆங்கிலநாளிதழாக இல்லாமல் போய்விட்டது, மேலும் இந்த அரஜாகத்தைப் புரிந்தவர் ஜெயாகவேறு இல்லாமல் போய் விட்டார். அப்படி இருக்கும் பொழுது, யாருக்குத்தான் இந்த அநியாயத்தைக் கண்டிக்க மனசு வரும்? எப்படி இந்த அநியாயத்தைக் கண்டிக்கமுடியும்? அனைவரும் சேர்ந்து கண்டிப்பதற்கும் ஒரு தராதரம் வேண்டாமா? பாவம்,நமது அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும், ஜனநாயகக் காவலர்களும் வேறுஎன்னதான் செய்வார்கள்? ஹிந்து பத்திரிகையில் இது குறித்தான ஒரு சிறு செய்தியைக்கூட நான் இதுவரைக் கண்டிலேன். வாழ்க பத்திரிகை தர்மம். வாழ்க பத்திரிகை சுதந்திரம். இப்பொழுது ஓய்வுவெடுத்துக் கொண்டிருக்கும் இவர்கள் யாவரும் அடுத்த முறை ஜெபத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் பொழுது பொங்கி எழுவார்கள் என்பதில் எனக்குஎந்தவொரு ஐயமுமில்லை. என்ன இருந்தாலும் ஜனநாயகத்தின் ஒரு தூண் அல்லவா பத்திரிகை?

மற்றவர்கள் அனைவரும் ஓய்வெடுத்துவிட்டதால், இந்த முறை, எனக்கு என்னவோஇதைக் கண்டிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆகவே அரசியல்வாதிகளின், குறிப்பாக ராமதாஸின் வன்முறைப் போக்குகளின் மீதான எனது கடுமையான கண்டனத்தைஇங்கு பதிவு செய்திருக்கிறேன், அவ்வளவுதான். வேற என்ன செய்ய முடியும்?

நன்றி - நண்பர் திரு. ச.திருமலை

Friday, August 06, 2004

காந்தீய விழுமியங்கள்

ஒரு காலத்தில் முஸ்லீம் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரிய நண்பனாக வாழ்த்தப்பட்ட காந்திஜியை பகைவனாக உருதுப் பத்திரிக்கைகளில் சித்திரித்து எழுதிய காலம் பின்னாளில் வந்தது. அகில இந்திய முஸ்லீம் லீக் அமைப்பை முஸ்லீம்களின் அதிகாரமுள்ள ஒரே பிரதிநிதியாக காங்கிரஸ் அங்கீகரிக்க மறுத்த காரணம்தான் பிரச்சினையின் அடிப்படையான சங்கதி. இந்திய யூனியனில் அங்கம் வகிக்க வேண்டியது இந்துக்களா அல்லது முஸ்லீம்களா என்கிற கேள்வி கழுத்தை பிடித்த நேரத்தில் இரு தரப்பினரும் சண்டைபோடாமல் இருந்தால்தான் பிரிட்டிஷாரின் ஆட்சி முடிவுக்கு வரும் என்றெல்லாம் சொல்லி காந்திஜி அமைதிப்படுத்தியதை இந்திய முஸ்லீம் லீக் தவறாக புரிந்து கொண்டது. முஸ்லீம் லீக்கிற்கு ஆதரவான ஒரு ஆங்கில வாரப் பத்திரிக்கை இந்து மதத்தை சாபத்தீ என்று வர்ணித்ததை கண்டு வெகுண்டு முதல் ஆளாக காந்திஜிதான் குரல் கொடுத்தார்.

http://www.tamiloviam.com/unicode/secondpage.asp?fname=08050406&week=aug0504


தமிழக அரசு முழு சுகாதார திட்டம் என்கிற பெயரில் ஒரு திட்டத்தை இரண்டு வருஷங்களாக நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னும் அரசியலாக்கப்படாமல் இருக்கும் அருமையான திட்டமாக இதைச் சொல்லலாம். இதன்படி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இரண்டரை லட்சம் மதிப்பிலான கழிப்பறை வளாகம் கட்டப்படுகிறது. இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஆறு கழிப்பறைகளும் நான்கு குளியறைகளும் இருக்கும். இது மட்டுமல்லாமல் துணி துவைக்க தனியாக இட வசதியும் அதற்கென்று பிரத்யேகமாக தண்ணீர் தொட்டியும் உண்டு. வளாகத்தின் மேற்பகுதியில் பெரிய அளவில் தண்ணீர் வசதிக்காக தொட்டி கட்டப்பட்டு மோட்டார் வசதியும் இணைக்கப்பட்டிருக்கும். கழிப்பறை வளாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த பகுதி மகளிர் சுய உதவி குழுக்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாதந்தோறும் அதற்கான செலவாக
குறிப்பிட்ட தொகையை சுய உதவிக் குழுக்களுக்கு அரசே வழங்கி வருகிறது.

http://www.thinnai.com/pl0805049.html

Thursday, August 05, 2004

நீங்கள் டி.வி பார்ப்பவரா?

திங்கள், செவ்வாய் கிழமைகளில் 'சஹாரா'வில் நடுநடுவே தமிழ் டயலாக்குடன் ஒரு பின்ணணியில் எலோரும் சிரிக்கும் ஒரு இந்தி சீரியல். நம்மூரு ஸ்ரீதேவி அதே 'சால்பாஸ்' ·பார்மில் கலக்கியெடுக்கிறார். http://www.saharamanoranjan.com/serial/maliniiyer.htm

ஒரு நாளைக்கு 'மெட்டி ஓலி'யை மறந்து விட்டு சஹாராவுக்கு விசிட் அடித்துப் பாருங்கள்!

பொதிகையில் காலை எட்டுமணிக்கு நம்ம யுகபாரதி தமிழ் திரைப்படப் பாடல்களை பற்றி பேசுகிறார். அதையெல்லாம் அசுவராசியமாய் ஒரு லேடி உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். பொதிகையில் பாருங்கள்!

தினமும் விஜய் டிவியில் ஏதாவதொரு பெயரில் கலக்கியெடுக்கிறார்கள். சகலை துணையில்லாமல் ஒன்பது மணிக்கு 'ரகளை' செய்யும் ரகளை, 'சூப்பர் டென்' ஜோடிகளை மிஞ்சுகிறார். ஆனால், வியாழக்கிழமை மட்டும் சரளா கிட்டே மாட்டிக்காதீங்க!

ஜெயா டிவியின் செய்திகள் நடுவே காலச்சுவடுகள் என்கிற பெயரில் இடிந்து போன, பழைய கோயில்களை பற்றியெல்லாம் நிறைய விஷயங்களை சொல்கிறார்கள். காமெடிக்கு நடுவே..ஸாரி...செய்திகளுக்கு நடுவே வரும் சீரியஸ் மேட்டர் உருப்படியாகவே இருக்கிறது. கிருபாஷங்கர்கள் கவனிப்பார்களாக!

ஒரே மாதிரியான காமெடி ஸீன்களை பார்த்து அலுத்துப் போய்விட்டதா? ராஜ் டிவியில் ராத்திரி பத்தரை மணிக்கு கிளாஸிக் காமெடி பாருங்கள். அந்த காலத்து நாகேஷ், சோ, தங்கவேலு கூட்டாளிகளின் தங்கமான காமெடிகள்.

கொஞ்சம் சீரியஸான காமெடி வேண்டுமென்றால் எப்போது வேண்டுமானாலும் தமிழன் டி.வி பாருங்கள். தமிழ் நாட்டிலிருக்கும் ஜாதிகளையெல்லாம் ஒன்று படுத்தி தமிழனின் உரிமையை மீட்டெடுத்து பச்சைத் தமிழர்கள் ஆட்சிக் கட்டிலில் ஏற பிரசங்கம் நடக்கிறது. சங்கே முழங்குன்னு இவங்க சொல்லி சொல்லி ஓரேயடியா சங்கு ஊதிடுவாங்காளோன்னு பயப்படாம டென்ஷன் ஆகாம ரிலாக்ஸா பார்த்தா நிச்சயம் சுவராசியமா படு காமெடியா இருக்கும்.