Wednesday, June 22, 2005

தென்னாடுடைய சிவன்

சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு போகும் வழியில் பிளாட்பாரம் ஓரமாய் ஆறுக்கு நாலு இடத்தில் குடிகொண்டிருக்கும் அந்த பிள்ளையாருக்கு எந்நாளும் விசேஷ நாள்தான். பளிச் டிரஸ்ஸில் பூமாலை சகிதம் எப்போதும் ஜிகுஜிகு என்றுதான் கண்ணில்படுவார். பிள்ளையார் சதுர்த்திக்கு பக்தர்கள் கொடுக்கும் அங்கவஸ்திரம் மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்குமாம்! அந்த குருக்கள் சொல்லி முடிப்பதற்குள் பூம்புகார் போகும் வழியில் கஞ்சா நகரம் பக்கம் விழுந்து கிடந்தேன்.

Image hosted by Photobucket.com

காலேஜ் படிக்கிற காலத்தில்தான் அந்தக்கோயில் பழக்கம். 'இந்த சாயந்திர நேரத்துல மேலையூர் பக்கம் போய் என்ன பண்ணப்போறே... காலை ஷோ மட்டும்தானே'ன்னு நண்பர்கள் அடிக்கும் கிண்டலையும் பொருட்படுத்தாமல் வேகு வேகுவென்று சைக்கிளை மிதித்து கொண்டு செம்பொன்னார் கோயில் சந்து வழியாகக போன இடம். (புரியாதவர்களுக்கு, மேலையூர் மாஸ் தியேட்டர், நம்ம பரங்கிமலை ஜோதி மாதிரி!) கம்மிங் பேக் டு த பாயிண்ட். பூம்புகார் போகும் மெயின் ரோட்டிலேயே குடிகொண்டிருக்கிறார் நம்மவர் பசுபதீஸ்வரர். நினைவு தெரிந்த நாள் முதல் அதே மொட்டை கோபுரம், விரிசலான சுவர், இடிந்து கிடக்கும் சுற்றுப்புறச் சுவர், வற்றிப்போன தண்ணீரோடு குளம் சகிதம் கோயில் அப்படியேதான் இருக்கிறது.

Image hosted by Photobucket.com

இப்போதெல்லாம் ஆறு மாசத்துக்கு ஒரு முறைதான் கோயில் பக்கம் போகமுடிகிறது. எப்போது போனாலும் வெளவால், புல் பூண்டுகள் சகிதம் கோயிலின் வலதுகோடியில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரின் கெட்அப்பில் எந்த வித்தியாசமும் இருக்காது. தூசு தட்டிவிட்டு காரை பெயர்ந்து போன தூணில் சாய்ந்து வாசலிலேயே உட்காரும்போது பிள்ளையாரும் பேச ஆரம்பிப்பார். 'நீ வராத இந்த அஞ்சு மாசத்துல என்னை 22 பேரு பார்க்க வந்தாங்க தெரியுமா...'

Image hosted by Photobucket.com

செருப்பு போட்டுக்கொண்டு சுற்ற வேண்டிய பிரகாரம். காற்று, மழையில் நைந்து போய் அழுக்கேறிய துண்டை சுற்றிக்கொண்டு பெருமிதமாய் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை பார்க்கவேண்டுமானால் காலில் நெருஞ்சி முள் குத்துவதை கண்டுகொள்ளாமல் நடக்கவேண்டியிருக்கும். விஸ்தாரமான பிரகாரங்கள். ஆடு, மாடுகளின் புண்ணியத்தால் புதர் அண்டாமல் இருக்கிறது. சுற்றுப்புற சுவர்களின் செங்கல் அரித்து, சிதைந்து... மனதின் பாரம் இறங்கவேண்டிய கோயில், மனதை இன்னும் கொஞ்சம் பாரமாக்கிறது.

Image hosted by Photobucket.com

இடிந்து போன முன்மண்டபம், குழந்தைகளின் விளையாட்டு மைதானமாகியிருக்கிறது. நந்திகள் குழந்தைகள் விளையாடும் குதிரைகளாகியிருக்கின்றன. அரைமணிக்கொரு தரம் மினி பஸ் சர்வீஸ். மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயரை தரிசிக்கும் பக்தர்களால் நிறைகிறது. பூம்புகார் பக்கம் வந்து செல்பவர்கள் கண்ணை விரித்து வைத்தால் கட்டாயம் சிக்கும் தூரத்தில் கோயில் ரோட்டை தொட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ பேர் பாதையை கடந்து செல்கிறார்கள். யாருக்கும் இறங்கி பார்க்கவேண்டும் என்கிற நினைப்பு வருவதில்லை. ப்ரியா கல்யாணராமன்கள் எழுதிவைத்தாலோ அல்லது ஸ்ரீகாந்த், கோபிகா வகையறாக்கள் ஈஷிக்கொண்டு டூயட் பாடினாலோ இந்த தென்னாடுடைய சிவனுக்கு ஒரு நல்ல காலம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்!

Monday, June 20, 2005

டிவியோபியா

டி.வி பார்ப்பது ஒரு பொழுது போக்கு விஷயமாக இருந்த காலம் போய் பொழுது போக்கே டி.வி பார்ப்பதுதான் என்கிற காலமும் வந்தது. அப்போதும் டி.வியில் வரும் நல்ல சங்கதிகளே கண்ணில் பட்டதேயில்லை. சன், ராஜ் செய்திகள், தூர்தர்ஷன் செய்திகளையெல்லாம் சேனல் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு குறை கண்டுபிடிப்பதே வேலையாக இருந்தது. இன்றும் டி.வியில் ரசித்து பார்ப்பது காமெடி காட்சிகள் மட்டும்தான். இல்லாவிட்டால் என்டிடிவி. 'அரட்டை அரங்கம்' ரொம்ப காலம் வரை பிரியமான புரோகிராமாக இருந்து வந்தது. வெள்ளிக்கிழமை இரவுகளில் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சிக்காக டி.வி முன் தவம் கிடந்த சம்பவங்களெல்லாம் இப்போது காமெடியாகியிருக்கின்றன.

நினைவு தெரிந்து பார்த்த மெகா தொடர், 'இவளா என் மனைவி ?!' சீரியலை பத்தி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அதற்கு பின்னர் படிப்புக்காலம் (பத்தாவது முதல் பிளஸ் டு வரை) வந்துவிட்டது. அப்போது டி.வி கிட்டதட்ட எங்கள் வீட்டின் பரணில் இருந்தது. காலேஜ் வாசலை மிதித்த பின்னர் ரசித்து பார்த்த இன்னொரு தொடர், 'மேல் மாடி காலி'. மத்தியான நேரத்தில் யார் இதையெல்லாம் பார்க்கப்போகிறார்கள் என்று என்னால் அலட்சியப்படுத்தப்பட்ட 'விழுதுகள்' செம ஹிட். அவ்வப்போது பார்த்து விட்டு எழுதவும் செய்திருக்கிறேன். நியூஸ் முதல் சீரியல் வரை சகலமும் உண்டு.தினமலர் டிவிமலர், தினமணி ஞாயிறுமணி என எதையும் விட்டுவைத்ததில்லை. அப்போதெல்லாம் பாராட்டை விட கிண்டல்தான் அதிகமாக வந்து விழும். கையை பின்னுக்கு தூக்கி வடிவேலு சொல்லும் பஞ்ச் டயலாக் மாதிரி... 'வாலிப வயசு!'

Image hosted by Photobucket.com

மெகா சீரியல் காலத்தில் தொழில்நுட்ப சங்கதிகள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. எதிர்பார்த்த முடிவு மட்டுமல்ல எதிர்பார்த்த வசனங்களும் பேசப்பட்டாலும் 'மெட்டி ஓலி'யின் கிளைமாக்ஸ், ஓரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருந்த விஷயம் ரசிக்க வைத்தது. எல்லா கேரக்டர்களும் கிளைமாக்ஸில் வரவேண்டும் என்பதற்காகவே பின்னணி காட்சிகளில் மற்ற கேரக்டர்களை உலாவ விட்டிருந்தார்கள். 'சித்தி' போல கிளைமாக்ஸில் சொதப்பவில்லை என்பதே 'மெட்டி ஓலி'யின் பெரிய வெற்றிதான். மெகா சீரியல்களை ஓரேயடியாக ஒதுக்கி தள்ளும் விமர்சனங்களை நான் கண்டு கொள்வதில்லை. சினிமாவில் சொல்வது போல கமர்ஷியல் கட்டாயங்களுக்காக, சில வட்டங்களை போட்டுக்கொண்டு உருண்டு வந்தாலும் மெகா சீரியல்களை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டியதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'கெட்டி மேளம்' பார்க்கிறேன். யாராவது அழ ஆரம்பித்தால் விஜய் டி.விக்கு மாற்றிவிடலாம். ரிமோட் பகவான் வாழ்க!

பின் குறிப்பு - திடீர்னு டி.வி பத்தி எழுதுனதுக்கும் அர்த்தமுண்டு. சும்மா தலைகாட்டிட்டு போற கருத்த மச்சான் கேரக்டருக்கு கூட என்னை கமிட் பண்ணாத டி.வி சீரியல் டைரக்டர்களை கண்டிக்கும் வகையில் ஒரு மாசமா டி.வி விமர்சனம் எழுத ஆரம்பித்திருக்கிறேன், தமிழோவியத்தில்!

Monday, June 13, 2005

லகலக ஜோதிலக்கா

உதயம் தியேட்டர். அலுங்காமல் குலுங்காமல் கியூவில் நிற்காமல் டிக்கெட் வாங்கி இன்னொரு தடவை சந்திரமுகி தரிசனம். சென்னை தியேட்டர்களில் படம் பார்ப்பது ஒரு சந்தோஷமான தருணம் என்பதை நான்கு வருஷ சென்னை வாழ்க்கைக்கு பின்னர் ஒரு சாதாரண வெள்ளிக்கிழமை ராத்திரியில்தான் உணர்ந்து கொள்ள முடிந்தது. தேவுடா பாட்டின் ஆரம்பத்தில் வரும் அகிலா கிரேன் ஷாட், ராட்டினத்தில் இறங்குவது மாதிரியான ·பீலிங்கை வரவழைத்து வயிற்றை கலக்கியிருந்தது. 'உதயத்துக்கே இப்படியா? சத்யம், தேவி தியேட்டர் பக்கம் போய் பாரு' என்ற நண்பரின் ஆலோசனையை தீவிரமாக பரிசீலிக்கவேண்டும்!

இரண்டாவது முறை பார்க்கும்போதுதான் லகலக ஜோதிலக்காவை ஆரம்பத்திலிருந்தே கவனிக்க முடிந்தது. (எங்க ஊரு பக்கம் 'தடவை'ன்னு சொன்னாத்தான் பேச்சுத்தமிழ். படத்துல ஏகப்பட்ட இடத்தில் 'முறை'ங்கிற வந்து இம்சைப்படுத்தியது!) ஆரம்பத்தில் சந்திரமுகி தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு படமாகிவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். தென்னிந்திய சினிமாவிலேயே முக்கியமான படமாகிவிட்டது. ஜோதிகா சாதாரணமாய் பார்த்தால் கூட ஏதோ பயமுறுத்தும் சங்கதியை கண்ணில் பார்க்கமுடிந்தது. டாக்டர் ராமதாஸ் கூட படம் பார்த்துவிட்டு ரொம்பவே பயந்துவிட்டாராம்! எதைப்பார்த்து பயந்தார் என்பதை பற்றி எல்லோரும் கொஞ்ச நாள் விவாதாம் நடத்தலாம். படத்தில் கமிட் ஆன இரண்டாவது நாளே தான் நடித்து தள்ளிய காட்சியாக பிரபுவிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியை ஜோதிகா தனது ஜெமினி டிவி இன்டர்வியூவில் சொன்னார். கங்கா, சந்திரமுகியாக மாறி பின்னர் திரும்பவும் கங்காவாக மாறும் சவலான காட்சிதான். ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழ் சினிமாவுக்கு திறமையான நடிகை கிடைத்திருக்கிறார் என்று கே.பாலசந்தர் பாராட்டினாராம். குருநாதரின் குருநாதர் சொன்னதில் தப்பு லேது?

Image hosted by Photobucket.com

படம் ஆரம்பித்து சில நிமிஷங்களில் தட்டுத்தடுமாறி வந்தார் அந்த முன்சீட்டு ஆசாமி. வந்தவுடனேயே 'எப்போ போட்டான் படத்தை?' விசாரிப்பு. பார்ட்டி முதல்முறையா படம்பார்க்குதோங்கிற அக்கறையில் பக்கத்து சீட்டு ஆசாமியும் விலாவாரியாக விளக்க, எல்லாவற்றையும் கேட்டுவிட்டு 'அப்ப இனிமேதான் டைட்டில் போட்டு போடுவாங்க'ன்னு ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அந்த பக்கத்து சீட்டு ஆசாமிக்கு எட்டுல சனி. வந்தவர், படம் முடியறவரைக்கும் ஜோதிகா அடுத்து நடிக்கப்போற படத்துலேர்ந்து சந்திரமுகி செஞ்சிருக்கும் சாதனை வரை எல்லாத்தையும் குமுதத்தின் சினிமா ஸ்பெஷல் பிட் நியூஸ் கணக்காய் அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார். எங்க வேணும்னாலும் போய் உட்கார்ந்துக்கலாங்கிற எங்க ஊரு தியேட்டர் சங்கதியின் அருமை அப்போதுதான் எனக்கு புரிந்தது. 'எப்போ படம் போட்டான்?' 'மழை வருமா?', '23சி போயிடுச்சான்னு ஆரம்பிச்சு அருவா, பிளேடு, கத்தின்னு விதவிதமாய் பிரயோகிக்கும் ஆசாமிகள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது உண்மைதான். இப்போதெல்லாம் மனசாட்சி அடிக்கடி என்னுடன் மாட்லாடுகிறது.

'உனக்கென்ன... ஜோதிகா பத்தி கமெண்ட் அடிக்கணும்னு நாலு வரி தட்டு பிளாக்குல போட்டுடலாம்...நாள் பூரா வேலை செஞ்சுட்டு வூட்டுக்கு போறவன், மெட்டிஒலி மாமா போன சோகத்துல இருக்கும் வூட்டுக்காரியிடம் ஜோதிகா பத்தி கமெண்ட் அடிச்சா உடம்பு என்னாவறது?'

Friday, June 10, 2005

இனி குமுதம்?

ஒரு ஹாட் மேட்டர்

எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது. முப்பது வருஷங்களாக தக்கவைத்திருந்த நம்பர் ஓன் இடத்தை சில மாதங்களுக்கு முன் கோட்டை விட்டதிலிருந்தே குமுதம் வட்டாரம் இரும்புக்கோட்டையாகிவிட்டது. அடிக்கடி சினிமா ஸ்பெஷல். விஜயகாந்தோ, விஜயோ தொடர் எழுதினார்கள். மும்பையிலிருந்து கூரியரில் வந்த ஆல்பங்களில் இருந்த சப்பாத்தி சுந்தரிகள் குமுதத்தின் பக்கங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்யப்பட்டன. விகடனாருக்கு பதிலடி கொடுக்க ஜெயமோகன்களும் முத்துக்குமார்களும் இயன்றதை செய்தார்கள். எரிகிற கொள்ளியில் எசகுபிசகாய் விழுந்த வெண்ணெய் மாதிரி குறுக்கே வந்த குங்குமம், தேசிய அளவில் டாப் 4க்கு போனது நிலைமையை இன்னும் இறுக்கியது. சின்ன சின்ன மாற்றங்கள் செய்தும் பெரிதாக ரிசல்ட் ஏதும் வராததால் இப்போது குமுதம் அதிரடியாய் களமிறங்குகிறது. கடந்த வாரத்திலிருந்து குமுதம் வட்டாரத்தில் புரட்சிகர மாற்றங்கள் ஆரம்பமாகிவிட்டதாக புரசைவாக்கம் பட்சிகள் தெரிவிக்கின்றன.

Image hosted by Photobucket.com

சம்மர் லீவிற்கும், ரஜினியை பேட்டி காணவும் இந்தியாவுக்கு வந்த எஸ்.ஏ.பி ஜவஹர் முன்னிலையில் நடந்த பஞ்சாயத்துகளின் முடிவில் சில அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. முதல் கட்டமாக குமுதத்தின் பொறுப்பாசிரியராக இருந்த ராவ், தனது ராஜினாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்ததாக சொல்லப்படுகிறது. இனி குமுதத்தின் ஆசிரியர்களாக ப்ரியா கல்யாணராமனும் கிருஷ்ணா டாவின்ஸியும் பொறுப்பேற்க இருக்கிறார்களாம். மூன்று மாதங்கள் ப்ரியா கல்யாணராமனும் அடுத்து வரும் மூன்று மாதங்கள் கிருஷ்ணா டாவின்ஸியும் சுழற்சி முறையில் ஆசிரியர்களாக இருந்து குமுதத்தை வழிநடத்தப்போகிறார்களாம். பத்திரிக்கை வட்டாரங்களில் அதிகமாக கவனிக்கப்பட்டு வரும் இந்த இரட்டையர்களின் கையில்தான் குமுதத்தின் எதிர்காலம் இருக்கிறது. இனியாவது நயன்தாராவின் வாட்ச் பெரிதாக இருப்பது பற்றி யார் கவலைப்பட்டாலும் குமுதம் கவலைப்படாமல் இருக்கும் என்று நம்புவோமாக!

Wednesday, June 08, 2005

புஸ்தக வெளையாட்டு

எளக்கிய வெளையாட்டுக்கு கூப்பிட்ட இன்போசிஸ் தம்பிக்கு நன்றி.

கைவசமுள்ள புத்தகங்கள் :

கிட்டதட்ட 60. இதில் கடனாக வாங்கியதை திருப்பிக்கொடுக்க மறந்தவையும் உள்ளடக்கம்.

கடைசியாகப் படித்த புத்தகம்:

பி.ஏ கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை

தற்போது படித்துக்கொண்டிருப்பது:

சுதாங்கனின் சுட்டாச்சு...சுட்டாச்சு

படித்ததில் பிடித்தவை:

1. உபபாண்டவம்
2. புலிநகக்கொன்றை
3. பொன்னியின் செல்வன்
4. 9/11
5. ஜனகணமன

படிக்க நினைப்பது:

1. தண்ணீர்
2. விஷ்ணுபுரம்
3. அரசூர் வம்சம்
4. நெடுங்குருதி

பிடித்த இங்கிலீஷ் புத்தகங்கள்:

Julius Caesar
The Fifth Discipline
Who says Elephants can't dance?

பிடிக்காத சமாச்சாரங்கள்:

வட்டார மொழி கதைகள்
பாக்கெட் நாவல்கள்
இங்கிலீஷ் நாவல்கள்

கட்டுரை வடிவங்களும், சிறுகதைகள் படிப்பதில் மட்டுமே ஆர்வம். மொத்தமாக ஒரு 300 பக்கத்து சமாச்சாரத்தை வைத்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்து படிக்க முடியாததால் மட்டுமே இன்னபிற சங்கதிகளில் ஆர்வம் வந்தது.

இன்வைட் பண்ணும் நண்பர்கள் குழாம்...

கிருபா ஷங்கர் - சிரிக்காம அடுத்தவங்களை சிரிக்க வைக்கிற வித்தையை எங்கேர்ந்து புடிச்சீங்க?

மாயவரத்தான் - அரசியல் இல்லாம ஒரு மேட்டர் எழுதியே ஆகணும் அண்ணாச்சி!

தேசிகன் - சுஜாதா, சுஜாதா, சுஜாதா... அப்புறம்?

பிரசன்னா - பெரிய தம்பி! ஒரு போஸ்ட்க்குள்ள முடிச்சுக்கிட்டா நல்லா இருக்கும்!

என்¦ன்றும் அன்புடன் பாலாஜி - முகத்தைதான் காட்டலை; பின்னால இருக்குற ஒளிவட்டத்தையாவது தெரிஞ்சுக்கலாமேன்னுதான்!


சொந்தக் கதை சோகக்கதையா எடுத்து வுடறாங்களேன்னு பீல் பண்றவங்களுக்காக ஒரு ஜில் போட்டோ!

இடம் - திருநள்ளாறு - நல்லாடை மெயின் ரோடு

Image hosted by Photobucket.com

Friday, June 03, 2005

பச்சைத்தமிழனும் பலான சங்கதிகளும்

'உங்கள் மனதில் புதைந்திருக்கும் ஆழமான சோகம் எது?'

'இன்னும் தூங்குகிறானே எங்கள் தமிழன்!'

82 வயதை நெருங்கும் கலைஞரிடம் 82 கேள்வி கேட்ட குமுதத்திற்கு கிடைத்த பதில் இது. தமிழன் பற்றி கலைஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது இருபது வருஷங்களாய் யாருக்கும் புரிவதில்லை. தமிழன் தூங்குவது போலவும் தோன்றவில்லை. தமிழ்நாட்டிலிருந்து தப்பித்து ஓடி டாலர்களை எண்ணிக்கொண்டிருக்கிறான். உள்ளூர் தமிழனும் அப்படியொன்றும் தூங்கிக்கொண்டிருப்பதாக தெரியவில்லை. பனகல் பார்க் பக்கம் ரோட்டோரமாய் ரவுண்டு வரும் பிச்சைக்காரனால் கூட ஒரு நாளைக்கு 200 ரூபாய் தேற்ற முடிகிறது. அப்படியே தூங்கிக்கொண்டிருந்தாலும் எழுந்தவுடன் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி கலைஞர் என்றும் சொல்வதில்லை. உண்மையான தமிழன் என்பவன் தமிழ்நாட்டு தமிழனா, இலங்கைத் தமிழனா, வெளிநாடு வாழ் தமிழனா என்பது பற்றியும் யாரும் ஆராய்வதில்லை. தமிழ்நாட்டில் அவல் கிடைக்காத அரசியல்வாதிகளுக்கு 'தமிழன்' என்கிற வார்த்தைப் பிரயோகம்தான் பெரிய வரப்பிரசாதம். எதிரி இல்லாத இருட்டு அறையில் குருட்டாம்போக்கில் வாளை சுழற்றுவது போலத்தான் தமிழனை பற்றி வருத்தப்படுவதும்.

Image hosted by Photobucket.com


பச்சை (புல்வெளியில்) தமிழனும் சில பலான சங்கதிகளும்
இடம் - மகாபலிபுரம் பீச்சாங்கரை கோயில் பீச்சாங்கை பக்கம்

உடன்பிறவா சகோதரர்களான ராமதாசு, திருமாவளவனின் தமிழ்ப் பித்து, எலெக்ஷன் வரைதான் என்பது ஊரறிந்த உண்மை. சம்பந்தப்பட்டவர்களின் தமிழ்ப்பற்றை விமர்சித்தால் சிலருக்கு ஜாதிப்பற்று பொங்கிவழியும் அபாயமிருப்பதால் விட்டுவிடலாம். தமிழன் என்றாலே கலைஞர் தவிர ஞாபகத்திற்கு வருவது வைகோவும், விஜயகாந்தும்தான். இரண்டு பேருமே காமெடியன்கள் என்றாலும் மதுரைக்கார தமிழனிடம் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். சாம்பிளுக்கு ஒன்று. 'எம்.ஜி.ஆர், அம்மாவை கொள்கை பரப்புச் செயலாளராக ஆக்கினார். அதற்கு அப்புறம் மேலே வந்தது எல்லாம் அம்மாவோட திறமைதான். ஆரம்பத்தில் ஆட்சியில் செய்த சிறுசிறு குற்றங்களை விட்டுவிடுங்கள். இன்றைக்கும் அவரது வழிமுறைகள் பெண்களால் பின்பற்றப்படவேண்டியவை'. புரட்சி அம்மா பத்தி இந்த புரட்சி தமிழன் சொல்லியிருப்பது. பத்து வருஷத்துக்கு முந்தி நடந்ததையெல்லாம் மறக்க தமிழனுக்கு தேவை செலக்டியா அம்னீஷியா!

கரை வேஷ்டி, பவுடர் பார்ட்டிங்கதான் இப்படி இருக்குதே... பேனாவும் கையுமாக அலையும் தமிழன் எப்படியிருக்கிறான்னு கேட்குறீங்களா? அப்போ 'அரசியல் ஞானி' ஞாநி என்ன சொல்றார்னு பார்க்கலாம். ஞாநியின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு, அரசியலுக்கு வரவிருக்கும் விஜயகாந்தை தன் கூட்டணி பக்கம் இழக்க முடியுமா என்று கலைஞர் முயற்சி செய்வதாக சொல்வதுதான். இராம. நாராயணன் மூலமாக விஜயகாந்தை சந்தித்து கூட்டணிக்கு இழுக்கிறாராம். நீங்கள் இல்லாவிட்டால், வேறு கவர்ச்சியான ஆள் என்னுடன் வரத்தயாராக இருக்கிறார் என்கிற செய்தியை பா.ம.கவுக்கு சொல்வதும் கலைஞரின் நோக்கமாம்.

நீதி - உலகம் கோயிந்தசாமிக்களால் ஆனது.