Sunday, November 27, 2005

மாஜிக் - 26

நான்காவது நாளாக துண்டிக்கப்பட்டு கிடக்கிறது சிதம்பரம். கொள்ளிடத்தின் அக்கரையிலிருக்கும் பல கிராமங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. 1977 நவம்பர் மாதத்திற்கு பின்னர் இப்படியொரு வெள்ள ஆபத்து கொள்ளிடத்தில் ஏற்பட்டதில்லை என்கிறார்கள். இக்கரையில் கொள்ளிடக்கரையோரமாய் இருக்கும் மகேந்திரப்பள்ளி, ஆச்சாள்புரம், அனுமந்தபுரம் கிராமங்களில் முழங்கால் வரை தண்ணீர். கொள்ளிடத்தில் நேற்று தண்ணீர் வரத்து குறைந்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா பகுதி தப்பியது. நாகை மாவட்டத்தில் இப்போது நிலைமை பரவாயில்லை. சிதம்பரத்தை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தின் நிலைமைதான் மோசம். கடலூரையும் சிதம்பரத்தையும் இணைக்கும் பாதையில் உள்ள ஆலப்பாக்கத்தில் ரோடு இருக்கும் தடயமே தெரியவில்லை. மேடான பகுதிகளான கிள்ளை, பரங்கிப்பேட்டை போன்றவை வெள்ள ஆபத்திலிருந்து தப்பித்திருக்கின்றன. சிதம்பரத்தை நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்து தெப்பக்குளத்தை ஞாபகப்படுத்துகின்றன. நிஜமாகவே உணவு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

Image hosted by Photobucket.com

நிகழ்ந்திருப்பது சுனாமியை விட மோசமான சம்பவம். சுனாமி வந்த அரை மணிநேரத்திற்குள்ளாகவே மீட்பு படை களமிறங்க முடிந்தது. இரண்டாவது நாளே இயல்பு வாழ்க்கையும் திரும்பியது. இப்போதோ நான்கு நாட்களாகியும் பல கிராமங்களை நெருங்கவே முடியவில்லை. உயிர் பலிகள் அதிகமாக இல்லை என்பது ஆறுதலான விஷயம். ஞாயிற்றுக்கிழமை இரவு கிடைத்த தகவலின்படி மீட்பு நடவடிக்கைகள் சிதம்பரம், கடலூர் பகுதிகளில் முடிந்துவிட்டன. எல்லா மக்களுக்கும் உணவு, தங்க இடம் கொடுப்பதற்கான நடவடிக்கைகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன. நாளை முதல் நாகை, தஞ்சை, விழுப்புரம் பகுதிகளிலிருந்து உணவுப் பொட்டலங்களை ஹெலிகாப்டர் மூலம் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதோ எல்லாம் விளையாட்டாக நடந்து முடிந்தது போலத்தான் இருக்கிறது. வியாழன் இரவு மழை பெய்ய ஆரம்பித்தவுடனேயே சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று நாகை மற்றும் கடலூர் பகுதி கலெக்டர்கள் கெஞ்சித்தான் மக்களை வெளியேற்ற வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் விபரீதம் புரியாமல் வெளியேற மறுத்த மக்கள் தற்போது திகைத்து நிற்கிறார்கள். திருச்சி - விழுப்புரம், கும்பகோணம் - விக்ரவாண்டி, சீர்காழி - கடலூர் பாதைகள் என மூன்று பாதைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பது கடந்த நூறு வருஷங்களில் நடந்திராத விஷயம்.

Image hosted by Photobucket.com

வழக்கம் போல் மீடியா யுத்தம் தொடர்கிறது. மிரண்டு நிற்கும் மக்களின் முகத்தை காட்டி எரிகள், குளங்கள் நிறைந்துவிட்டதால் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதாக ஜெயா டிவி படம் காட்டுகிறது. சன் டிவியோ பிஸ்கெட் விலை முப்பது ரூபாய் என்று பீதியை கிளப்புகிறது. தேர்தல் பயத்தில் மினி விசிட் வந்த திராவிட கட்சித்தலைவர்களை பார்க்க யாருக்கும் ஆர்வமில்லை. ஜாதி கட்சித்தலைவர்களால் மட்டுமே மக்களை எளிதாக அணுக முடியும் என்று விதாண்டவாதம் பேசிய நண்பரை காணவில்லை. நடிகர்கள் கூடிய சீக்கிரம் பெருந்தொகையை முதலமைச்சர் நலநிதிக்கு கொடுப்பார்கள். ஆனால் இயல்பு நிலை திரும்ப நிச்சயம் மாதக்கணக்கில் நாளாகும். வெள்ளிக்கிழமை வரை வெள்ள நீர் ஒழுங்காக கடலில் சென்று சேர்ந்துகொண்டிருந்தாலும் சனிக்கிழமை அன்று மட்டும் கடல் மிரண்டுபிடித்தாக சொல்கிறார்கள். சுனாமி வந்தது, பருவமழை ஆரம்பித்தது, செப்டம்பர் மாதம் முதல் தடவையாக கொள்ளிடத்தில் பயமுறுத்தியது, வெள்ளநீரை உள்வாங்கிக்கொள்ளாமல் கடல் மிரண்டு பிடித்தது எல்லாமே அந்த மாஜிக் 26 ஆம் தேதிதான். இப்போது பிரச்னை சாப்பாடு மட்டுமல்ல; பீதியும்தான்.

Thursday, November 24, 2005

வேண்டாம் கமல்!

ஆஸ்திரேலிய புல்வெளியில் சிவாஜி நடை போடும் குறுந்தாடி கமலை விடாப்பிடியாக தொடர்ந்து கொண்டே சிம்ரன் பாடும் பாட்டுதான் எனக்கு இன்றைக்கு சுப்ரபாதம். பெரும்பாலும் எல்லா நாட்களிலும் கே டிவியின் முகத்தில்தான் கண்விழிக்க வேண்டியிருக்கும். விடிந்தும் விடியாத நேரத்திலேயே ரொமாண்டிக் பாட்டுதான் ரூம்மேட்டின் பேவரைட். அலுத்துக்கொண்டே எழுந்தபோதுதான் செல்பேசி சிணுங்கியது. பெங்களூரிலிருந்து அந்த குறுந்தகவல் (நன்றி - நக்கீரன் கோபால்!) வரவில்லையென்றால் ரிமோட்டுக்கும் வேலை இருந்திருக்காது. 'வணக்கம் தமிழக'த்தில் நம்ம கமலக்கண்ணன்!


Image hosted by Photobucket.com

கமலக்கண்ணன் கொஞ்ச மாதங்களாகத்தான் பழக்கம். அறிமுகப்படுத்தி வைத்தது நம்ம பேட்டை வாத்தியார்தான். (அய்யாவுக்கு உடம்பு சரியில்லை. மஞ்சள் காமாலை! வீட்டில் ஒரு மாதமாய் மோட்டுவளை ஆராய்ச்சிதான்!) பொன்னியன் செல்வன் குழும யாத்திரைகளுக்கு கமல்தான் கேப்டன். ஒல்லிக்குச்சி உடம்புக்காரன் என்று சொன்னால் சத்தியமாக அது பொய்தான். மேட்டுப்பாளையத்தில் பிறந்து பெங்களூரில் பொழைப்பை பார்த்துக் கொண்டிருந்தாலும் தஞ்சாவூர் பக்கம்தான் அடிக்கடி தலைவைத்து படுக்கிறார். சோழ, பல்லவ காலத்து கோயில் அமைப்புகளையும் அதிலிருக்கும் உள்குத்தையும் அவசரம் காட்டாமல் டாப் டூ பாட்டம் அலசுவதில் ஆர்வமுண்டு. எப்போதும் கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருப்பவர். போரடித்தால் பொன்னியின் செல்வனை படிப்பார். வரலாற்றை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் அந்த நால்வர் அணியில் ஒருவர். ஆதித்த கரிகாலன்தான் புனைப்பெயர். நந்தினி உண்டா இல்லையா என்பது பரம ரகசியம். காரணம், ஆசாமிக்கு கால்கட்டு போட்டு ரொம்ப நாளாகுது!

இரண்டு மாதத்திற்கு முன்னர்தான் மூன்றாம் யாத்திரைக்கு போயிருந்தோம். பொன்னியின் செல்வன் உறுப்பினர்களோடு பேசிக்கொண்டே வருவதற்காகவே பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து தஞ்சாவூர் போக எங்களோடு இணைந்து கொண்டார். பேச்சில் சோழர், கல்கி வாடை ஜாஸ்தி. இந்த சின்ன வயதிலேயே ஹிஸ்டரி ஸ்காலர் ஆகியிருப்பதில் எனக்கு மட்டுமல்ல வரலாற்று துறையில் இருப்பவர்களுக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வரலாறு தவிர ஜப்பானிய மொழியில் ஆர்வமுண்டு. தமிழ்நாட்டின் கலாசாரத்தை ஒத்த ஒசாகாவில் (அதே இடம்தானுங்கோ!) செட்டிலாவதுதான் லட்சியமாம். இங்கே புல் முளைத்து, புதரில் சிக்கி கலாசார பொக்கிஷங்களெல்லாம் கவனிப்பாரின்றி கிடக்கும்போது அதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டு ஓசாகா போகவேண்டும் என்று அவர் நினைத்தால்...'வேண்டாம் கமல்...அது உங்களால் முடியவே முடியாது'ன்னுதான் சொல்லத் தோன்றுகிறது.

Tuesday, November 22, 2005

துடைப்பக்கட்டை

Image hosted by Photobucket.com

சென்னை: துடைப்பக்கட்டை என்பது தமிழ் கலாசாரத்தின் ஒரு அடையாளம் என்று தமிழ் கலாசார பாதுகாப்பு காவலர் திருமாவளவன் தெரிவித்தார்.

நேற்று கூடிய தமிழ் கலாசார அறிஞர்களின் கூட்டத்தில் குஷ்பு, சுஹாசினி போன்ற நடிகைகளின் முறைகெட்ட செயலை கண்டிக்க கூடிய கூட்டத்தில் திருமாவளவன் இச்செய்தியை தெரிவித்தார். துடைப்பக்கட்டை காட்டி எதிர்ப்பு கூட்டம் நடத்துவது என்பது தமிழ் கலாசாரத்தின் அருமை பெருமைகளை விளக்கும் ஒரு அம்சமாக கொள்ளலாம் என்றும் கூறினார். அப்படிப்பட்ட எதிர்ப்பு கூட்டத்தை நடத்தியது விடுதலைச் சிறுத்தைகளோ அல்லது பாமகவோ அல்ல என்பதையும் உறுதிபட தெரிவித்தார். மேலும் சுஹாசினியின் கருத்தை கருணாநிதிக்கு கொம்பு முளைத்திருக்கிறதா என்று கேட்டதாகவும் பொருள் கொள்ளலாம் என்றும் கூறினார்.


இதைத்தொடர்ந்து பேசிய தி.மு.க எம்பி சரத்குமார், சுஹாசினி தன்னுடைய பிரச்னையை கோர்ட்டில் சந்தித்துக்கொள்வதாக கூறி தன்னை எஸ்எம்எஸ்ஸில் மிரட்டியதாக வருத்தப்பட்டு பேசினார். அதற்கு முன்னதாக எஸ்எம்எஸ்ஸை தமிழில் எப்படி சொல்வது என்பது பற்றிய சுவையான விவாதங்கள் நடந்தன. பின்னர் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி, சுஹாசினி தன்னுடைய கருத்தை பெங்களூரில் சொல்லியிருந்தால் பிரச்னை வந்திருக்காது என்று கருத்து தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய கரு. பழனியப்பன் சாலமன் ருஷ்டி என்றொரு எழுத்தாளர் இருப்பதாக ஒரு கூடுதல் தகவலையும் பகிர்ந்துகொண்டார். ஒரு முழு நீள நகைச்சுவை நிகழ்ச்சியை சன் நியூஸ் சானல் ஏற்பாடு செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, November 19, 2005

ஓரங்கட்டேய் - 6

Image hosted by Photobucket.com

'தங்க மகனை சொன்னாலும் பரவாயில்லே... நம்ம மன்னனை பத்தி தப்பா சொல்லிட்டாங்கப்பா...'

'இன்னாபா பெருசு மாதிரி புலம்புறே... என்னாச்சு இப்போ?'

'ஆட்டம் போட்ட அம்மாவை வூட்ல உட்கார வெச்சுட்டு... கம்பெனி கீயை யாரு கையில குடுக்கிறாரு தெரியுமா?'

'எதைச் சொல்றே.... கிளைமாக்ஸை சொல்றியா? ஆமா...யாரு கையில?'

'குஷ்பு கையில...'

'குஷ்பூவா.....அய்யய்யோ.....பாருங்க தம்பீ... பீதிய கிளப்புறானுங்கோ'

Thursday, November 17, 2005

ஓரங்கட்டேய் - 5

சிறுத்தையை முறத்தால் விரட்டி அடித்த...
தமிழச்சிகளின் ஆவேசம்

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

அழுகிய முட்டை, தக்காளி அடிக்க செல்லடா!
கலாசாரத்தை வாழ வைக்க கல்கடுக்க நில்லடா!
தமிழா... தமிழா நாளை உன் நாளே...
தமிழா... தமிழா நாளும் உன் நாளே!

Saturday, November 12, 2005

ஓரங்கட்டேய் - 4

Image hosted by Photobucket.com

பரமக்குடி பச்சை தமிழச்சி. எங்கேயும் ஓடுன்னு சொல்ல முடியாது!

கவர்ச்சி காட்டாத நடிகை. மீக்கு தெலுகு தெலிதுகாதா?

அறிவுஜீவிகளுக்கு நெருங்கிய உறவு. லா பாயிண்ட் குடும்பம்!

கலைப்பட அனுபவம் ஜாஸ்தி. ஹாலிவுட் ரேஞ்சுக்கு சிந்தனைக்கு உத்திரவாதம்.

நிறைய பேசி தெளிவா குழப்பும் திறமை உண்டு. ஆழ்வார்ப்பேட்டை வாசனை இன்னும் போகவில்லை.

அடிக்கடி சிரிப்பார். அழுதால் நல்லா இருக்காது என்பதால் நிச்சயம் ஜகா வாங்கமாட்டார்!

இமேஜ் டேமேஜாயிடும்னு பயந்து குஷ்பு ஆட்டத்தை எட்ட நின்னு பார்த்த கணவான்களே! உங்களுக்காக இதோ ஒரு ஸ்பெஷல் ஆட்டம். வாங்கப்பா... வாங்க.. வந்து ஆடுங்க!

Friday, November 04, 2005

கொள்ளிடத்தில் தீபாவளி

கலெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு சர்க்கரை போடாத டீதான் இஷ்டம். சூடாக இருக்கவேண்டும். சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் எல்லோருக்கும் டீ வந்தாகணும். 'வேணவே வேணாம்' என்றால் மட்டுமே விடுவார். கொள்ளிடத்துக்கு ரவுண்ட் அப் போய் ஒரு மூணு மணி நேரம் பக்கத்தில் நின்று கலெக்டரை பார்த்து தெரிந்து கொண்ட விஷயங்கள் சிலது. கலெக்டரின் காஸ்ட்யூம் மட்டும்தான் ராமராஜன் ஸ்டைல்; ஆக்ஷனெல்லாம் விஜயகாந்துதான்! அடிக்கடி தலையை சிலுப்பி மோட்டுவளையை பார்த்து யோசித்துக்கொண்டே இருக்கிறார். முதலைமேடு என்னாச்சு, அனுமந்தபுரம் என்னாச்சு... ஏதாவது மெசேஜ் வந்திருக்கா? அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்.

Image hosted by Photobucket.com

ஆள் அரவமற்று அழுது வடியும் அந்த பஞ்சாயத்து ஆபிஸ் இப்போது பரபரப்பாய் இருக்கிறது. கக்கூஸில் டியூப் லைட், வாசலில் ஜெனரேட்டர், ஹாலில் டிவி, மேஜையில் ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் வகையறாக்கள். கொள்ளிடம் பஞ்சாயத்து ஆபிசுக்கு ஒரு கல்யாணக்களை சே... ஒரு கருமாதி களை வந்திருக்கிறது. இந்த வருஷம் கலெக்டருக்கு தீபாவளி கொள்ளிடத்தில்தான். பத்துமணிக்கு சித்தமல்லிக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு மதியம் நாகப்பட்டினத்தில் சாப்பாடு. மதியம் மூணு மணிக்கு வேளாங்கண்ணியில் ஒரு விசிட். திரும்பவும் சாயந்திரம் ஆறரைக்கு கொள்ளிடம் திரும்பிவிடுகிறார். காலையில் பத்தடி, பதினோரு மணிக்கு பதிமூணு; சாயந்திரம் பதினேழு. திரும்பவும் ராத்திரி பதினோரு அடி என தண்ணீர் ஷேர் மார்க்கெட்டாய் கொள்ளிடத்தில் விளையாடுகிறது. அரசு எந்திரம் பரபரப்பாய்த்தான் இருக்கிறது. கல்யாண மண்டபம், ஸ்கூல் எந்நேரம் மக்களுக்காக திறந்திருக்கிறது. ஒரு பக்கம் பெரிய பெரிய பானைகளில் சமையல் வேலைகள் பிஸி. ஆம்புலன்ஸ், ·பயர் என்ஜின் எல்லாம் ரெடி. ஊர் பரபரப்பு எதுவுமில்லாமல் அமைதியாக இருக்கிறது. மிஸ்டர் பொதுஜனம் கொள்ளிடம் கடைத்தெருவில் தீபாவளி ஷாப்பிங்கில் பிஸி.

'செவ்வாய் கிழமை ராத்திரியில் ஆரம்பிச்சது, இன்னிக்கு ஞாயித்துக்கிழமை ஆவுது... ராத்திரி பகல் பாராம வேலை நடந்துட்டிருக்கு...ராத்திரி இரண்டரை மணிக்கு ரவுண்ட்ஸ்க்கு போறாரு. நம்மளை டிஸ்டர்ப் பண்றதில்லை. கிட்டதட்ட ஒரு குட்டி கலெக்டரேட்டே இங்கேதான் போயிட்டிருக்கு' ஒரு பியூனின் புலம்பல் புராணம்.

'இப்படி மாஞ்சு மாஞ்சு வேலை செஞ்சாலும் சன் நியூஸ்ல போட்டு தாளிக்கிறாங்களே... ஜெயா டிவியிலாவது கொஞ்சம் விவரமா எடுத்து சொல்லலாம் இல்லியா...'

'அட நீங்க வேற... கலெக்டருக்கு மவுசு ஜாஸ்தியாயிடுமே... கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பாங்க'

தேவுடா, தேவுடா எங்க கலெக்டரை கொஞ்சம் காப்பாத்துடா!