Thursday, April 29, 2004

மரபுக்கவிதையும் மனுஷ்யபுத்திரனும்!

நேத்து ராஜ் டிவியில் "டேக் இட் ஈஸி" ஊர்வசி, நம்ம மனுஷ்யபுத்திரனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். மரபுக் கவிதைக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் அப்படியென்ன அலர்ஜியோ தெரியலை... இந்த காலத்துல மரபுக் கவிதையெல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு சொல்லிட்டிருந்தார். அந்த காலத்துல மக்களெல்லாம் சந்தோஷமா இருந்தாங்க அதனால யாப்பு, அணி மாதிரியான இன்னபிற இலக்கிய சங்கதிங்க தப்புத் தாளம் போடாம முறையா எழுதிட்டிருந்தாங்க. ஆனா இப்போ யாருக்கு டயமிருக்குன்னு யதார்த்ததை சொன்னார். அது மட்டுமல்ல, இப்போ மரபுக்கவிதையால தற்காலத்து சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்க முடியாம வெற்று அலங்கார சங்கதியா படு செயற்கையா இருக்கும்னார். இந்த சின்ன வயசுல எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு எப்படி உங்களால செய்யமுடியுதுன்னு ஊர்வசி கேட்ட கேள்விக்கு படு டீடெய்லா சொன்ன பதில் அசத்தல். என்னதான் பிஸியா இருந்தாலும் நமக்கு உண்மையிலேயே ஒரு விஷயத்துல இன்ட்ரெஸ்ட் இருந்தா அதைத்தான் முதல்ல செஞ்சி முடிப்போம். அது மாதிரிதான் இதுன்னார். இன்னொருத்தர் எழுதி தனக்கு பிடிச்ச கவிதையா ஒண்ணு சொன்னார். எழுதினது யாருங்கிறதுதான் சைக்கிள் கேப்புல மிஸ்ஸாயிடுச்சு!

கடவுளை சந்தித்தேன்
அவரிடம் எதுவும்
கேட்க தோன்றவில்லை;
அவரும் என்னிடம்
எதுவும் சொல்லவில்லை;
இருந்தாலும் மனசுக்குள்
ஏதோ நிம்மதி!

மனுஷ்யபுத்திரனை சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் நேரில் பார்த்தேன். மெனக்கெட்டு பேர், ஊரெல்லாம் ஆர்வமா கேட்டுக்கொண்டார். உயிர்மையில் புதுசா ஏதாவது செய்யுங்க, அப்படியே காலச்சுவடு பார்த்து காப்பியடிச்ச மாதிரி இருக்குன்னு தைரியமா சொன்னேன். சுவராசியமா கேட்டுக்கொண்டு தொடர்ந்து படிச்சுட்டு வாங்கன்னு சொன்னார். அதுக்கப்புறம் ஏனோ படிக்க முடியலை. ஆனா அவரை நேர்ல பார்க்கிறதுக்கு முந்தி அவர் ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த உடல் ஊனமுற்ற, மற்ற இலக்கியவாதிகளை விட வயதில் சின்னவருங்கறது எனக்கு தெரியாது. அவரோட கவிதைகளை விட என்னை அதிகமாக பாதித்த விஷயம் அது!

Tuesday, April 27, 2004

காந்தீய விழுமியங்கள்



மகாத்மா காந்திஜி - பாரத தேசத்தின் கலாசார அடையாளமான அகிம்சையை மீட்டெடுத்து ஒரு புது உலகம் படைத்தவர். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை அரங்கேற்றி இந்தியாவை அடிமைத்தளையிலிருந்து அகற்றியவர். முதுபெரும் அரசியல் தலைவராகவும், உண்மையான ஆன்மீகவாதியாகவும், சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்படும் காந்திஜியின் பல்துறை பங்களிப்பை பற்றியக் கருத்துக்களை திரும்பவும் மக்கள் முன்வைக்க ஒரு சிறு முயற்சியை செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆயுதக்குறைப்பு, இந்தியக் கலாசாரம், இலக்கியம், அறிவியல் வளர்ச்சி, உலகமயமாகும் பொருளாதார சிந்தாந்தங்கள் என பல்வேறு தளங்களில் மகாத்மாவின் பதிவுகளையும் அதன் பின்விளைவுகளை பற்றிய ஒரு சிறு பார்வையே காந்தீய விழுமியங்கள். மகாத்மா காந்திஜியின் கருத்துக்களை முழுவதுமாக ஆராய்ந்து விமர்சிக்கும் தகுதியும், திறமையும், அனுபவமும் எனக்கு இல்லாவிட்டாலும் அவரது கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைப்பதில் அதீத ஆர்வமுண்டு. காந்தீய சிந்தனைகள் பற்றி விவாதிப்பதற்காக தனியாக ஒரு யாகூ குழுமத்தையும் ஆரம்பித்திருந்தேன். அதைப் பற்றின எனது முந்தைய பதிவு.

காந்தீய சிந்தனைகளை எல்லோருக்கும் புரிகிற எளிய வடிவத்தில் தமிழோவியத்தில் இனி வாராவாரம் எழுதலாம் என்றிருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் தமிழோவியம் கணேஷ¥க்கும், பாரா ஸாருக்கும் எனது நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும்.

"சாந்தி நிலவட்டும்;
சமுதாயம் சிறக்கட்டும்
நதிகள் இணையட்டும்,
நல்வாழ்வு மலரட்டும்;
இந்தியா ஒளிரட்டும்!"

- ஜெ. ரஜினி ராம்கி

Tuesday, April 20, 2004

Monday வந்து மனம் திறக்கிறேன்!

எல்லோரும் ஜாகையை மாத்திட்டிருக்காங்க. நிறைய பேர் எழுதுற மேட்டரு, ரூட்டு எல்லாத்தையுமே மாத்திட்டாங்க. நான் ஜாஸ்தியா பாலிடிக்ஸ் பத்தி எழுதுறதா நலம் விரும்பிகள் நினைக்கிறாங்க! ராயப்பேட்டை ஆஸ்பிடலிலிருந்துன்னு போட்டவுடனே பல பேர் பதறியடிச்சு போன வாரம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு காரணம் அடிக்கடி காமெடியாவும் சீரியஸாவும் மாத்தி மாத்தி எழுதறதுல எல்லோரும் மண்டை காய்ஞ்சு போயிடுறாங்கிறதுதான்! சரி என்னதான் எழுதறது? ஏகப்பட்ட குழப்பம்.

எதைப்பத்தியாவது ஒழுங்கா உருப்படியா தொடர்ந்து ஏழுதி தொலைச்சா என்ன? (பாரா ஸார்!)

அரசியல் பத்தி ஜாஸ்தியா எழுதி வாங்கி கட்டிக்காதீங்க (பூனை சங்கர்!)

டயலாக்கெல்லாம் மனசுல வந்து டாலடிக்குது!

கிருபா ஷங்கர் சொல்றதை பார்த்தா சப்டொமைன் போட்டு சொந்தக்கடை போடலாமேன்னு ஒரு யோசனை. நடுவுல அருள் வேற மல்டி மீடியா டெமோ காமிச்சு அவரோட பக்கத்தை பத்தி சொன்னதும் வித்தியாசமா ·பிளாஷ் போட்டு கலக்கலாமான்னு ஒரு ஆசை!

ஒரு நாலு நாள் யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம்னு இருக்கேன். அது வரைக்கும் இங்கிருந்து ஜூட்!

Friday, April 16, 2004

அன்னிக்கே சொன்னது! இன்னிக்கும் சொல்ல வேண்டியது!

வலைப்பூக்கள் பூக்கும் ஓசை - ஆப்பு

அடிக்கடி அரசியலை பத்தி மட்டுமே எழுதி அலுத்துப் போச்சு! ஓரு சேஞ்ச்சுக்கு வேற ஏதாவது கிறுக்கலாம்னு நினைக்கிறேன். வலைப்பூக்கள் உள்ளே போய் ஆற அமர படிச்சு கமெண்ட் அடிக்கலாம்னு ரொம்ப நாளா நினைச்சிருந்தேன். ஆனா, நாட்டாமை முந்திக்கிட்டார். எல்லாத்தையும் அவர் ஷார்ட்டா முடிச்சிடுறார். நாம கொஞ்சம் டீடெய்லா பார்க்கலாம்னு நினைக்கிறேன். மொதல்ல ஆப்புலேர்ந்து ஆரம்பிச்சுடலாம்!

சுயபுராண சிந்து பாடுவோர்களுக்கும், இலக்கிய இறுமாப்பிலிருப்பவர்களுக்கும், பிலிம் காட்டுபவர்களுக்கும், முற்போக்கு பேசும் பிற்போக்குவாதிக்கும் ஆப்பு வைச்சே ஆகணுங்கிற வைராக்கியத்தோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் ஆப்பு. தமிழ் மீடியாவில் இதெல்லாம் ரொம்ப புதுசு. அடுத்தவங்களை எப்போதும் திட்டறவங்களை யாரும் என்கரேஜ் பண்ணமாட்டாங்க. ஆனாலும் கிண்டலுக்கும் ஒரு பவுண்டரி இருக்கே! ஆப்பு, டீஜெண்டா ஆப்பு வைக்கிறவரைக்கும் ஜே போடலாம்!

தந்தை பெரியார் மொளியிலும் அவரோட வளியிலும் ஆப்பு வெச்சிட்டிருக்கறதா சொல்றாரு! நல்லவேளை பகுத்தறிவுன்னு சொல்லி அட்வைஸ் பண்ணாம இருக்காரே!

பெருமாள் பேரை சொல்லி அனுமாரு சாப்பிடுதுங்கோங்கன்னு யாருக்கோ ஆப்பு வெச்சாரு. பிரச்சினை இன்னான்னா.... எல்லாத்துக்கும் ஆப்பு வைக்கிறதுனால யாருக்கு எப்போ வெச்சாருங்கிறதைதான் ஞாபகத்துல வெச்சுக்க முடியலே!

நீ இண்டர்நெட்டில் கவியெழுதி இருப்பை தக்க வைத்துக்கொள்னு அப்பப்ப ஆப்புங்கிற பேர்ல கவிதையெல்லாம் எழுதி தள்ளிடுறியே ராசா!

ரஜினி ரசிகர்களுக்கு ஆப்பு வெச்சா மாஸ் கிடைக்குங்கிற சங்கதி தெரிஞ்ச சமத்துப் பையன் ஆப்பு. ஆமா, சினிமா பார்க்குற பழக்கமெல்லாம் கிடையாதா? அப்ப டிவி?

குடும்ப பத்திரிக்கைன்னு போட்டு குஜால் மேட்டரை அவுத்துவுடும் ராணிக்கு ஆப்பு நியாயம்தான். ஆனா மத்ததெல்லாம் கண்ணுல படலியா?

சினிமா பத்தியும் டிவி பத்தியும் ஆப்பு வைக்காததுக்கு காரணம் பெரியார் வளியிலே வந்தவருங்கிறதனாலயா? ராணி, சன் டிவி, அரசியல், இலக்கியம்னு சின்ன சர்க்கிள்ல வர்றத பாத்தா அப்பு இருக்குற இடம் அயல்நாடு மாதிரி தெரியுது!

இப்ப லேட்டஸ்டா விஷ் போட்டு, நிம்மதியாயிருக்குற மாலன் ஸாருக்கு எம்பி சீட்டு கொடுக்கணும்னு சொல்லி ஆப்பு வைக்கிறதல்லாம் நடக்காது ராசா!

பேரு போட்டு ஆப்பு வைக்கிற காம்பிடேஷன் ஜாஸ்தியிட்டிருக்கும்போது அடிக்கடி ஆப்பு இப்படி ஆப்செண்டானால் என்னாவறது?

Wednesday, April 14, 2004

யாருக்கு ஓட்டு?

இரண்டு நாளில் ஏகப்பட்ட விசாரிப்புகள். யாருக்கு ஓட்டு போடப்போறேன்னு! நம்ம ஒருத்தன் ஓட்டு மாத்தி போடறதனால என்ன பெரிய தலைகீழ் மாற்றம் வந்துடப்போவுதுன்னு நினைச்சாலும் நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமுமில்லை. மயிலாடுதுறையை பொறுத்தவரை இன்னமும் அரசியல் தெரியாத மணிசங்கருக்கே என் ஓட்டு! தொகுதியை துபாய் ஆக்குறேன்னு சொன்னது என்னாச்சுங்கிறார் என்னுடைய எம்சிஏ கிளாஸ்மேட் சுவாமிநாதன்! தொகுதியை துபாய் மாதிரி பாலைவனமா ஆக்கிடாம இருந்தாரே அதுக்குத்தான் என் ஓட்டு! எம்.பி தொகுதி நிதியின் மூலம் எங்க தெருவுக்கு வந்திருக்கும் தார் ரோட்டின் வாசனை கூட காற்றில் கரைந்து போகாத நிலையில், மனசாட்சிக்கு மதிப்பு கொடுத்து சிந்தித்து நான் எடுத்திருக்கும் முடிவு இது.

அடுத்த தேர்தலில் ரிசர்வ் தொகுதி அந்தஸ்து பெற்று ஜாதி மூலாம் பூசப் போகிற மயிலாடுதுறை தொகுதிக்கு அய்யர் எம்பியாக வருவதுதான் நல்லது என்று....நான் நினைக்கிறேன்! நதிநீர் பங்கீடு பிரச்சினையில் பிரதமரின் இயலாமைதான் காரணம்னு சமீபத்தில் சொல்லி ஜோக்கடித்தாலும் காவிரி பிரச்சினை பற்றி இரண்டு முறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இதே மற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் போயஸ் கார்டனுக்கோ அறிவாலயத்துக்கோ 'செல்'லடித்து பேசலாமா வேண்டாமான்னு பர்மிஷன் கேட்டுக்கொண்டிருப்பார்கள். கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பேசும் துணிச்சல் இல்லாவிட்டாலும் பிரச்சினையை நாசூக்காக இங்கிலீஷிலும் இந்தியிலும் பேச இவரைப் போல் ஒரு ஆசாமி காவிரி டெல்டா மாவட்டத்துக்கு தேவை. 1998ல் சுயேட்சையாக நிற்கும்போது காவிரி பிரச்சினையில் பேச்சு வார்த்தை ஒன்றுதான் வழி என்று வெளிப்படையாக பேசியது மட்டுமல்லாமல் பல உபயோகமான திட்டங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்திருக்கிறார். அதற்கு பிந்தைய தேர்தல்களில் 'கூட்டணி தர்மம்' பேச விடாமல் தடுத்தாலும் மனிதர் கட்சிசார்பற்ற தொலைநோக்கு பார்வை கொண்ட விஷயமுள்ள ஆசாமி.

எப்படியும் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது உறுதியாகிவிட்டது. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து ஆக்டிவ்வாக செயல்படும் திறமையுள்ள இவரை தேர்ந்தெடுப்பதுதான் சரியான முடிவாக இருக்கும். ஆகவே, மறுபடியும் என் ஒட்டு மணிக்குரலுக்கே!

சரி, மற்ற தொகுதிகளைச் சேர்ந்தவனாக நானிருந்தால் என்ன செய்வேன்?

முதலில் ஜாதி & வன்முறை அரசியல் என்று இரட்டைக் குதிரைகள் பூட்டி சவாரி நடத்தும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கிருஷ்ணசாமி கட்சிக்கு நோ சொல்லிவிடலாம்.

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் மத்தியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு முடிவுகள் இருக்கப் போவது உறுதி. மாநிலக் கட்சிகளுக்கு பதிலாக தேசியக் கட்சிகளை ஆதரிக்கும் பட்சத்தில் குழப்பமாவது கொஞ்சம் குறையும். எனவே பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நமது ஆதரவை கொடுத்து விடலாம்.

பாஜகவுடன் காங்கிரஸ் மோதும் நீலகிரி தொகுதியில் பாஜகவுக்கே ஆதரவு கொடுக்கலாம். (பிரபுவை விட மதன் குறுகிய காலத்தில் அதிகமாகவே சாதித்திருக்கிறார்!) பாஜகவுடன் கம்யூனிஸ்ட் மோதும் நாகர் கோயில் தொகுதியில் கம்யூனிஸ்ட் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மீது நல்ல அபிப்பிராயமில்லை. மதிமுக சார்பாக போட்டியிடும் நான்கு வேட்பாளர்களில் இரண்டு பேர் மட்டுமே நல்ல தேர்வு.

திமுகவோடு அதிமுக மோதும் 14 தொகுதிகளில்தான் உண்மையான குழப்பம். தஞ்சை பழனிமாணிக்கம், நாகை விஜயன், தென் சென்னை டி.ஆர். பாலு போன்றவர்களுக்கு டபுள் யெஸ் சொல்லலாம்! ஜாதி அரசியலின் நீட்சியான ராதிகா செல்விக்கும் வாரிசு அரசியலுக்கு வாரிசான தயாநிதி மாறனுக்கும் நோ சொல்லிவிடலாம். கட்சியை பார்க்காமல் வேட்பாளரின் தகுதியை பார்க்கும் முறை இந்த தேர்தலில் பரீட்சித்து பார்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. முக்கியமாக வேட்பாளர்களுக்கு குறைந்த பட்சம் ஆங்கிலம் அல்லது இந்தி பேச தெரிந்திருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம். 60 லட்சம் பணம் கட்டி போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு மத்தியில் எளிமையான அதிமுக வேட்பாளர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிமுக வேட்பாளரின் நம்பகத்தன்மையை விட திமுக வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையும் ஜாஸ்தி. கூட்டிக் கழித்து பார்க்கும்போது மக்கள் ஒரு முடிவுக்கு வருவது அப்படியன்றும் சிரமமான காரியமாக....எனக்கு தோன்றவில்லை!

Friday, April 09, 2004

பொம்மலாட்டம் நடக்குது!

'...நான் 13 வயதிலே அரசியலுக்கு வந்தேன் என்றாலும் சிறுவனாக இருந்தபோது, நீதிக்கட்சியின் தராசு கொடி ஒரு கையிலே இருக்கும். இன்னொரு கையிலே முஸ்லீம் லீக்கின் பச்சை பிறைக்கொடி இருக்கும்... அப்போதெல்லாம் பாகிஸ்தான் பிரச்சினை. ஒரு கையிலே திராவிடஸ்தான், திராவிட நாடு திராவிடர்க்கே என்கிற முழக்கம். இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கம். இந்த இரண்டு முழக்கங்களையும் ஒலித்த வாய்தான் இந்த கருணாநிதியின் வாய்.....'
- இஸ்லாமிய, கிறிஸ்துவ, தலித் அமைப்புகளின் எழுச்சி மாநாட்டில் கலைஞர் பேசியதாக முரசொலியில்....

மதச்சார்பின்மையை நிரூபிப்பதற்காக அரசியல்வாதிகள் மண்டையை உடைத்துக் கொண்டு யோசிப்பது தமிழ்நாட்டில்தான் அதிகம் மாதிரி எனக்கு தெரிகிறது. ஒரு ஆச்சரியமான சங்கதி என்னவென்றால் தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை தேசியக்கட்சிகளான பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நினைப்பதில்லை. இந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட தமிழகத்தின் பிரச்சினைகளை முன்வைத்துதான் பிரச்சாரங்கள் நடந்துவருகின்றன. காவிக் கொடியை கண்டாலே முகம் சுளிப்பவர்களுக்கு பச்சைக் கொடியின் மீது பாசம் வருவதற்கு ஓட்டு வங்கி என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

வேளாங்கண்ணி மாதா கோயிலையும் நாகூர் தர்காவையும் சிக்கல் சிங்காரவேலரையும் ஒரு சேர வலம் வரும் எங்கள் மாவட்டத்துக்காரர்கள் மதச்சார்பின்¨மை பற்றியெல்லாம் அதிகமாக யோசித்ததில்லை... கோவையில் குண்டுவெடிக்கும் வரை! ஆனால் தொடர் குண்டுவெடிப்பெல்லாம் ஒரேயடியாக இந்து-முஸ்லீம் உறவை தகர்த்தெறிந்துவிட்டன என்றெல்லாம் மிகைப்படுத்தி சொல்லி விட முடியாது. இன்றைக்கும் எங்கள் ஊரில் சில முஸ்லீம் வீடுகளில் வாசல்களில் சாணி தெளிக்கும் வழக்கமுண்டு. வாழ்க்கை முறைகளிலும் பெரிய வித்தியாசமெல்லாம் இருக்காது. பத்தாண்டுகளில் பார்வைகள் மாற வேண்டிய அவசியம் ஏன் வந்தது? விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் காரணத்தை கண்டுபிடிப்பதில் பெரிய கஷ்டமிருக்காது. அரசியல்!

தேர்தல் நேரத்தில், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அவர்களை தமிழகத்தில் வளரவிட்டதற்காக மன்னித்துவிடுங்கள் என்று மெரீனா கடற்கரையில் அம்மா சொன்னதற்கும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதற்காக இன்று கலைஞர் பெருமைப்படுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை. துக்ளக் சோ சொல்வது போல பாகிஸ்தானுடன் சேர்ந்து திராவிடஸ்தான் பெற்றுத் தரவேண்டும் என்று ஜின்னாவிடம் பெரியார் கோரிக்கை வைத்தது மாதிரியான 'வித்தியாசமான' விஷயங்கள் நம்மூரில் ஜாஸ்திதான். இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்வதால் இந்திய முஸ்லீம்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைப்பது இந்திய மக்களின் ஒரு பிரிவினரின் நாட்டுப்பற்றையே சந்தேகிப்பது மாதிரிதானே? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது!

Wednesday, April 07, 2004

'தலித்'துவம் எத்தனை நாளைக்கு?

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடனும் வந்த தலித் இலக்கிய எழுச்சி தலித் போராட்டங்களை முன்னிலைப்படுத்தியதைவிட சில தலித் எழுத்தாளர்களின் சுய பிரஸ்தாபங்களை முன்னிறுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். தலித்துகளின் சோகத்தையும் கோபத்தையும் மட்டும் எழுத்தில் வடிப்பதுதான் தலித் இலக்கியம் என்றால் வேட்கை குறைய ஆரம்பித்துவிட்டதாகத்தான் கொள்ள முடியும். தலித் சமூகத்திலிருந்து வந்து பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கான எந்த முயற்சியும் செய்வதில்லை. தீண்டாமைக் கொடுமையை நீக்க முயற்சிப்பதை மறந்துவிட்டு அது இந்து மதத்தின் சாபக்கேடு என்று சொல்லி தப்பித்துக் கொள்வது நியாயமான விஷயம்தானா? மகாத்மா காந்திஜி முன்மொழிந்த 'ஹரிஜன்' என்கிற சொல்லாக்கத்தையும் து¡ர எறிந்து விட்டு 'தலித்' என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசியலில் கூட தலித் கட்சிகளை சிலர் ஜாதிக் கட்சிகளாக கருதுவதில்லை. திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் தாழ்த்தப்பட்ட வர்க்கமான தலித்துகளுக்காக பாடுபடுகின்றார்களாம்! அவர்கள் ஜாதி என்கிற குறுகிய வட்டத்தில் வளைய வருவதில்லை என்று சர்ட்டிபிகேட் கொடுப்பவர்கள், பாமகவை ஜாதிக் கட்சி என்று சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது. சாதாரண மக்களை பொறுத்த வரை பாமகவும் சரி, திருமாவளவனின் கட்சியும் சரி, தென்மாவட்டங்களில் பரபரப்பை கிளப்பும் தேவர் இனத்து மக்களின் கட்சிகளும் சரி எல்லாமே குறுகிய ஜாதீய சிந்தனையுடைய அரசியல் அமைப்புகளாகவே பார்க்கப்பட்டுவருகின்றன. இத்தகைய கட்சிகளால் தங்கள் ஜாதி மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே கோலோச்ச முடியும். ஜாதி அரசியல் தமிழகத்தில் தற்போது உச்சத்திலிருக்கிறது. பெரிய கட்சிகளின் அரசியல் முடிவுகள் பெரும்பாலும் ஜாதி ஓட்டை பொறுத்தே அமைந்திருக்கின்றன. சமீபத்திய உதாரணம், திருச்செந்து¡ரில் ராதிகா செல்வியும் தர்மபுரியில் பு.தா. இளங்கோவனும் போட்டியிடுவது. ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று பாடிய பாரதியார் இன்றிருந்தால் தமிழ் நாட்டை என்ன இந்தியாவை விட்டே ஓடிப் போயிருப்பார்!

'தலித்' என்ற பெயரில் நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் இன்னும் எத்தனை நாளைக்கோ?!

Saturday, April 03, 2004

மயிலாடுதுறையின் மணிக்குரல்!



நேத்து NDTVயில் Follow the Leader நிகழ்ச்சியில் மணிசங்கர் ஜயரின் பிரச்சாரத்தை 'கவர்' செய்தார்கள். அதிகாலை நேரத்தில் சர்ச்சுக்கு விசிட்டி அடிச்சு மனுஷர் அசத்தலாக பிரே பண்ணி ஆசிர்வாதம் வாங்குவதிலிருந்து ஆர்ப்பட்டமா ஆரம்பித்தது அன்றைய நாள்.

'நான் இந்த மண்ணின் மைந்தன்' என்று பெருமையாக சொல்லிக்கொண்டார். பேட்டியாளரும் இதுவரை இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்பதை வசதியாக மறந்து விட்டார். 1998 தேர்தலில் தனித்து நின்றே அறுபதாயிரம் ஓட்டுக்கள் வாங்கிய ஜயர், தனது ஆபிஸின் வாசலில் கட்டப்பட்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் தோரணங்களை பார்த்து இவைதான் பலம் என்று பெருமிதப்பட்டுக் கொண்டார். தனது அரைகுறை தமிளில் தாய்க்குலங்களை 'அம்மா....ஓட் போட மர்ந்துடாதீங்க' என்று வழக்கம்போல கைகூப்பி, பொடி பையன்களுக்கும் மரியாதை செய்ய மறக்கவில்லை. வாண்டுகளுடன் கிரிக்கெட் விளையாடி விக்கெட் எடுத்தார். யாரை அவுட் பண்ணப்போறீங்கங்கிற கேள்விக்கு மதவாத கூட்டணியை என்று பளிச் பதில். நான் பாமக கட்சிக்காரன். ஜயருக்காக உயிரையும் கொடுப்பேன்னு உணர்ச்சிவசப்பட்டவரை தடுத்து, ஜயா, உயிர் வேணாம்; உங்க ஓட்டு போதும் என்றார். படு உஷார் பார்ட்டி! அவருக்கு தெரியும்...போன எலெக்ஷனில் கடைசி நேரத்தில் ஆப்பு வெச்சு பரிதவிக்க வெச்சது இதே பாமக ஆட்கள்தாங்கிறது!

மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற பெயரில் வலம் வரும் ஆளுங்கட்சியின் மகளிர் அணியை சமாளிக்க செம்பொன்னார் கோயிலில் அசத்தலான மகளிர் கூட்டத்தை கூட்டி பெண்களின் சிறப்பை பற்றி ஒரு லெக்சரர் கொடுத்தார். வழக்கம்போல பள்ளி வாசலில் தொழுதும், கோயிலுக்கு போய் பரிவட்டம் கட்டிக்கொண்டும் மதச்சார்பின்மை இமேஜை பில்டப் பண்ணிக்கொண்டார். காவிரிப் பிரச்சினை சிக்கலானதற்கு காரணமே காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் வாஜ்பாய் சரியாக செயல்படாததால்தான் என்றார். ஆஹா... சூப்பர் லாஜிக்!

என்னதான் சொன்னாலும் ஜயர், ஜயர் தான்! காங்கிரஸ் ஆட்சியை பிடிச்சா நிச்சயம் மணிசங்கர் அமைச்சராயிடுவாரு. அது நடக்காவிட்டாலும், குறைந்த பட்சம் ஆக்டிவ்வான, சுதந்திரமான எதிர்க்கட்சி எம்பியாக கலக்குவார். ( ஜெனிடிக் டெக்னாலஜி பற்றிய ஆராய்ச்சி கட்டுரை, பார்வைக்கு )படித்தவர். பண்பாளர். எளிதாக பழக முடியும். எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவர். கடுமையான வார்த்தை பிரயோகம் இல்லாத பணிவான அணுகுமுறை. எந்த கட்சியில், எந்த கூட்டணியிலிருந்தாலும் அய்யருக்குத்தான் மயிலாடுதுறை மக்களின் ஓட்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இம்முறை ஜயர் மோதுவதோ பாதாளம் வரை பாய வல்ல சமாச்சாரத்துடன்!

மக்கள், மணிசங்கரை கைவிட்டு விட்டால் மயிலாடுதுறையை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!

Friday, April 02, 2004

வாழ்க்கையே ஒரு முரண்பாடுதான்!

நாம் முரண்பாடுகளுடன்தான் வாழ்கிறோம். நமக்குள் ஒழுங்கு இல்லையென்பதே நாம் முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒழுங்கென்பது மனதால் சித்தரிக்கப்பட்ட ஒரு எண்ணமல்ல. ஒழுங்கு என்பது ஒவ்வொரு பொருளையும் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அதற்கு உரிய இடத்தில் வைக்கும் கலை. ஓழுக்க உணர்வு எந்தவொரு பழக்கவழக்கத்தின் கட்டுப்பாடோ, சாதரண செயல்முறையோ, சடங்கோ அல்ல. ஒரு பொருளை விரும்புகிறோம். ஆனால் விரும்புவதை பெரும்பாலும் மறுக்கிறோம். சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று.
வாழ்க்கையே முடிவில்லாத முரண்பாடுகளின் கோர்வையாக இருக்கிறது, முரண்பாடு இருக்குமிடத்தில் சண்டை, அபிப்பிராய பேதம் கட்டாயம் இருக்கும். ஓர் மனிதர் மேல், நாட்டின் மேல், கொள்கையின் மேல் ஏற்படும் பற்றாக இந்த சச்சரவு வளர்ச்சியடைகிறது. ஆனால் ஒருக்காலும் சாஸ்வதமான உண்மை வாழ்க்கையை நாம் வாழ்வதில்லை. ஆகவே நாம் அரசியல் ரீதியாக, சமய தீதியாக, குடும்ப வாழ்க்கையில், ஓழுங்கில்லாமல் வாழ்கிறோம்.

- ஜெ. கிருஷ்ணமூர்த்தி

சமீபத்தில்தான் சிறந்த ஆன்மீகவாதியும் தத்துவஞானியுமான ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வலைத்தளத்தை தேடிக் கண்டுபிடித்தேன். உண்மையை பற்றியும் வாழ்க்கை முறைகளை பற்றியும் கிருஷ்ணமூர்த்தி தந்திருக்கும் தெளிவான விளக்கங்கள் மகாத்மா காந்திஜியின் எழுத்துக்களை ஞாபகப்படுத்துகின்றன. எல்லோரும் விசிட் அடிக்க வேண்டிய வெப்சைட்!