Friday, January 16, 2004

கண்டேன் ரஜினியை!

இரண்டு நாட்களாக தேவதைககள் மாதிரி அந்தரத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் கடந்தது போன சந்தோஷமான தருணங்களை நினைத்து பார்ப்பது சுகம். என்னைப் பொறுத்துவரை அது போன்ற சந்தோஷ தருணங்களில் பெரும்பாலனவை ரஜினி சம்பந்தப்பட்டவை.

வள்ளி படம் பார்த்துவிட்டு நான் எழுதிய கருத்தை பாராட்டி மனிதன் பட போட்டோவில் கையெழுத்துடன் வந்த பதில் கடிதம்தான் பத்தாவது பரீட்சையில் வகுப்பில் முதலாவதாக வந்த சந்தோஷத்தை விட அதிகமாக நான் சந்தோஷப்பட்ட நேரங்கள்.

95ன் இறுதியில் தியானம் பற்றி நான் கேட்டிருந்த கேள்விக்கு தூர்தர்ஷனில் ரஜினி சொன்ன பதிலால் அன்றிரவு என் தூக்கம் போனது. சந்ததோஷத்தில் நான் பேச முடியாமல் திணறியதை இன்றும் என் நண்பர்கள் சொல்லி சிரிப்பார்கள். அடுத்த நாள் காலேஜில் புரஃபோசர் என்னை தட்டிக் கொடுத்த போது காலேஜூக்கே ஹிரோ ஆன மாதிரி நினைப்பு. அன்னிக்க ஆரம்பிச்ச கிறுக்கல்கள்தான் இன்னிக்கும் தொடருது....

இதே போகி தினம், 2001. படையப்பாவுக்காக விருதை வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ரஜினியை கலைஞருடன் சேர்த்து 4 அடி தூரத்தில் முதல் முதலாக நான் பார்த்த பிரமிப்பை ஊர் வந்து சேரும் வரை மறக்க முடியவில்லை. அதற்கப்புறம் எவ்வளவோ விழாக்கள், எவ்வளவோ சந்தர்ப்பங்கள், தலைவரின் தரிசனம் தாராளமாய் கிடைத்தது.

அதே போகி தினம், 2004. இம்முறை காந்தப்புயலின் உரசலில் சந்தோஷத்தின் உச்சிக்கே போனேன். ரொம்பவும் நெருக்கமாக பார்த்த பிரமிப்பில் நாக்கு பின்னிக் கொள்ள பேச்சு வரவில்லை. வெளியில் வரும்போது முதல் ஆளாய் கைகொடுத்துவிட்டு Happy pongal sir என்ற சுருதி குறைந்த குரலுக்கு 'ஹேப்பி பொங்கல்...எல்லார்க்கும்...எல்லார்க்கும்' தனக்கே உரிய ஸ்டைலில் மின்னல் வேகத்தில் ஒரு பதில். ஏற்கனவே ரெடியாக எடுத்து வைத்திருந்த விசிடிங் கார்டை (இந்த நேரம் பார்த்துதான் நம்ம கையில் ஒண்ணுமே இருக்காது) கொடுத்தவுடன் வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டார். அலைமோதிய கூட்டமும் ஆளுக்கொரு பொருளை கொடுத்தது. கூட்ட நெரிசல் தங்கமுடியாமல் என்னை உரசியபோது மனசில் சந்தோஷ மத்தாப்புகள். டக்கென்று அவரின் இடது கையை பற்றிக் கொண்டேன். கூட வந்த செக்யூரிட்டி பிரிக்கும் வரை கையை அவரும் உதறவில்லை. நானும் விடவில்லை. மின்னல் போல எல்லாமே சில வினாடிகளில்...

அவர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, என்னைத் தவிர. எப்போதுமில்லாமல் கூட்ட நெரிசலை தவிர்க்க பிரமாதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜந்து மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது. இரண்டு மணி நேரமும் ரஜினியை நின்று கொண்டே ரசிப்பதற்காக எனது சீட்டையே தியாகம் செய்திருந்தேன். சரியாக 6.30 மணிக்கு மனைவி மற்றும் மைத்துனர் சகிதம் உள்ளே நுழைந்தவர் பார்வையாளர்களுக்கு பொதுவாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு இல. கணேசனுக்கு கை கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டார். தமிழக அரசியலையே புரட்டி போட்ட கடந்த வருட சம்பவங்களோடு கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் குறை சொன்ன சோவின் பேச்சுக்கு எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் அதே சமயத்தில் சோ
பாராட்டியபோதெல்லாம் மறக்காமல் ஆடியன்ஸ§ட்ன் சேர்ந்து கைதட்டினார். அருகிலிருந்த யாரிடமும் பேசாமல் நிகழ்ச்சியை கூர்ந்து கவனித்தவர்,ரொம்பும் ரிலாக்ஸாகத்தான் இருந்தார். மேக்கப்பில்லாத முகத்தில் மெல்லிய திருநீறு. டை அடித்த மீசையுடன் அதே பழுப்பு கலர் குர்தாவில் பூசினாற் போல தெரிந்தார்.

பாபாவில் நல்ல அரசியில்வாதியாக வந்து கிளைமாக்ஸில் இறந்து போகிறமாதிரி நடித்தவரை இந்த கூட்டத்திலும் பார்க்க முடிந்தது. போன வாரம் தி.நகரில் நடந்த தமிழ் இலக்கியம் 2004 விழாவுக்கும் வந்திருந்து ரொம்ப நேரம் எனக்கு முன்வரிசையில்தான் அமர்ந்திருந்தார். பெயர் சரிவர தெரியாமல் பேசுவதற்கு தயக்கமாக இருந்ததால் ஒரு புன்னகையுடன் வந்துவிட்டேன்.

நிகழ்ச்சியின் நடுவே பார்வையாளர்கள் பக்கத்திலிருந்து நல்ல பூஸ்ட்டில் இருந்த ஒரு ஆசாமி திடீரென்று எழுந்து விஜபி வரிசைக்கு போய் இல.கணேசனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ரஜினியை பார்த்து பெரிய கும்பிடு போட்டார். பின்னர் கையை உயர்த்தி ஆகாயத்தை காட்டி ஏதோ சொல்ல, ஆடியன்ஸ் பக்கத்திலிருந்து பயங்கர எதிர்ப்புக்குரல்கள். அதை சோ டைமிங்காய் சமாளித்ததுதான் டாப்!

'போனா போறார் வுட்றோங்கோ... பாதிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்னு நினைக்கிறேன்'

Wednesday, January 14, 2004

சென்னை புத்தக கண்காட்சி - ஒரு ரவுண்ட் அப்

எதிர்பார்த்தது மாதிரியே போன வருஷத்தை விட இந்த வருஷம் கூட்டம் ஜாஸ்திதான். காலேஜ் பசங்களோட இல்லத்தரசிகளும் குழந்தைகளும் போட்டி போட்டுக் கொண்டு புத்தகம் வாங்கி தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

குமுதம், விகடன் ஸ்டால்களில் 'நோ ஸ்டாக்' போர்டு வைக்காததுதான் குறை. ஹிக்கின் பாதம்ஸையும் காலச்சுவடு பதிப்பகத்தையும் கடந்து போகவே எனக்கு ஒரு மணி நேரமாகியது. தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்ங்கிற மாதிரி எல்லா இடத்திலும் ஜெயமோகனின் காடு, ஒரு யோகியின் கதை, கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் (எல்லா தொகுதியும் ஒரே புக்கில் வர்ற மாதிரி பண்ணக்கூடாதா?) அப்புறம் சமையற்கலை குறிப்புகள், குழந்தைகளுக்கான புக்ஸ்....நிறைய.

இலக்கியவாதிகளில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும்தான் ஹாட் கேக். மத்தபடி எழுத்தாளர்களின் படைப்புகளை விட எழுத்தாளர்களை பற்றிய குறிப்புகளை கொண்ட புத்தகங்கள்தான் அதிகமாக இருந்தது.

கண்ணில் மாட்டிய ஒரே விஐபி நக்கீரன் கோபால். அதைப் பற்றிய எனது பதிவு.

நிறைய எழுதணும்னு நினைச்சேன். ஆனா டயம் தான் கிடைக்கலே. திரும்பவும் ஒரு ரவுண்டு போயிட்டு வந்தப்புறம் எழுதுறேன்.

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

- ஜெ. ரஜினி ராம்கி

Tuesday, January 13, 2004

இரும்பு பட்டறையில் இலக்கிய ஈ
பொதுவா 'தமிழ் இலக்கியம் 2004' மாதிரி எனக்கு சம்பந்தமில்லாத இடங்களுக்கெல்லாம் போகிறதுக்கு அவ்வளவா துணிச்சல் கிடையாது. போனா நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு பாட்டு உண்டுகின்றதனாலதான்! பாபா, உப பாண்ட புகழ் ராமகிருட்டிணனை நேரில் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை. போய் சேருவதற்குள் ரொம்ப லேட்டாயிடுச்சு! ஏமாற்றமாக இருந்தாலும் இதுவரை எழுத்தில் மட்டுமே நான் பார்த்த முகங்களை நேரில் பார்க்கமுடிந்தது.

சாவித்ரி கண்ணன்ங்கிறது துக்ளக்கில் இருந்த சுமதி கண்ணன் மாதிரி யாரோ லேடீஸ்னு நினைச்சிருந்தேன். ஆள் பார்க்க சீரியஸா இருந்தாலும் காமெடியா எழுதுபவர். இந்த வார துக்ளக்கில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் நடக்கும் குளறுபடிகளை சீரியஸாக தெளிவாக எழுதியிருக்கிறார்.

ஜெயந்தீசனின் விடுதலைப்புலிகள் பற்றிய புத்தகத்தை கவனமாக விமர்சித்து பாராட்டிய பா.ரவிக்குமாரின் பேச்சு என்னை மாதிரியான சாதாரண மக்களுக்கும் புரியறது மாதிரி இருந்துச்சு! நிகழ்ச்சியின் அமைப்பாளராக இருந்த காரணத்தால் நிறைய அமர்வுகளில் substitute வேலை பார்த்தார்.

எஸ். பொ பற்றி ஏற்கனவே காலச்சுவடில் ஒருமுறை படித்திருக்கிறேன். மைக்கை பிடித்ததும் அழகு இலங்கைத் தமிழில் பேசி அசத்திவிட்டார். நிகழ்ச்சியின் கடைசியாக நன்றியுரை பேச வந்த டைரக்டர் மகேந்திரன் கூட எஸ்.பொவின் தமிழை ரொம்பவும் சிலாகித்திருந்தார்.

சா. கந்தசாமியையும் அப்துல் ஜப்பாரையும் ஏற்கனவே மயிலாடுதுறையில் சந்தித்திருக்கிறேன். இன்குலாபையும் இந்திரா பார்த்தசாரதியையும் இப்போதுதான் பார்க்கிறேன். இன்குலாப் இரவு பத்துமணி வரை இருந்து எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்துவிட்டுதான் கிளம்பினார்.

அதுக்கப்புறம் ஒரு யதார்த்த நாடகம். நடித்தவர்கள் இலங்கைத் தமிழில் ஏதோ கத்தினார்கள். எல்லோரும் புரிந்த மாதிரி முகத்தை வைத்திருந்தார்கள். so, நானும் அப்படியே!

கவிதை, நாடக திறனாய்வில் வெப்பம் தெறித்தது. சிற்பி பாலசுப்ரமணியத்தின் பேச்சு போரடிக்கவில்லை. மரபுக்கவிதை புதுக்கவிதையாகவும் ஹைக்கூ முதலான வடிவங்களாக மாறும்போது நாடகமும் சினிமாவாகவும் டிவி நாடகமாகவும் மாறுவதில் தப்பில்லைன்னுதான் எனக்கு தோணியது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக பேசினார் பஞ்சாங்கம். எழுத்தாளார்களெல்லாம் நாவல் எழுதிவிட்டு போன் பண்ணி லாபி பண்ணுகிறார்கள்னு பெரிய குண்டை து¡க்கி போட்டார். ஏகப்பட்ட கைதட்டல். பா. ரவிக்குமார் ரொம்பும் வளவளவென்று பேசாமல் கூட்டத்தின் பல்ஸை புரிந்து வைத்திருப்பதை திரும்பவும் நிருபித்தார். சினிமா பிரபலங்கள் அரங்கிற்கு வர ஆரம்பித்ததும் மேடையிலிருப்பவர்களும் சினிமாவை தொட்டு பேச மறக்கவில்லை!

இறுதியாக ஒன்பதரை மணிக்கு மேல் மைக்கை பிடித்தனர் திரையுலக பிரபலங்கள். வழக்கம் போல உணர்ச்சிகரமாக பேசிய பாரதிராஜா, மகேந்திரனை பற்றி பேசுவது என்பதும் அவரது படைப்பை பற்றி பேசுவதும் ஒன்றுதான் என்றார். வாஸ்தவம்தான். உணர்ச்சி வேகத்தில் நம்ம பத்ரியையும் வையவனையும் போட்டு குழப்பிக் கொண்டார். மரபுப்படி புத்தகத்தை வாங்கிக் கொண்டவர்கள் பேசக்கூடாதாம். பத்ரியின் எண்ணங்களை பேசி கேட்க முடியவில்லை. வையவன் பேசியதையெல்லாம் பத்ரி பேசியதாக பாரதிராஜா நிறைய தடைவை சொன்னார். இலக்கியவாதிகள் எங்களை ஒதுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஆடு புலி ஆட்டத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்தான் இந்த மகேந்திரன் என்றார். ஏன் அவ்வளவு மட்டமான படமாக நினைக்கிறாரோ? ரெண்டு லீடிங் ஸ்டார்களை வைத்து போரடிக்காமல் ஒரு மசாலா படத்தை இயக்குவது மட்டமான ரசனைன்னு சொல்லிகிட்டாதான் நம்மளை பத்தி உயர்வா நினைப்பாங்கங்கிறது காலம் காலமாக இருந்து வரும் சடங்கு!

நம்ம கட்சி மாதிரி எதிலும் இருப்புக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த பாக்யராஜ், கடைசியில் மைக்கை பிடித்ததும் வெளுத்து வாங்கினார். 'கிழக்கே போகும் ரயிலில்' நிகழ்ந்த சம்பவங்களையும் 'புதிய வார்ப்புகள்' புது அவதாரம் தரித்த சங்கதியையும் கலோக்கியலாக பேசி கைதட்டல் வாங்கிக் கொண்டா¡. சம்பந்தமில்லாத விடயங்களை அடுக்கினாலும் பத்தரை மணிக்கு மேல் நம்முடைய பொறுமையை சோதிப்பது நல்லதல்லன்னு நல்லாவே தெரிஞ்சு வைச்சிருந்தார்.

கடைசியா நன்றியுரை சொல்ல வந்த மகேந்திரன் இலக்கியவாதிகளுக்கு பெரிய சவாலே விட்டார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ் திரையுலகத்தை தமிழ் இலக்கியவாதிகள் பாராட்டும் காலம் வரும் என்று ஆருடம் சொன்னார். திட்டம் போடாமல் எதையும் செய்யும் தனது பழக்கத்தை யாரும் பின்பற்ற வேண்டாம்னு கூட்டத்தை கேட்டுக் கொண்டார். காலையிலிருந்து எல்லா நிகழ்ச்சிகளையும் கவனித்து வருவதாக சொன்னவர், புத்தகத்தை இரண்டேமாதத்தில் எழுதி முடித்ததாக சொன்னார். இதே காலகட்டத்தில் இன்னொரு பதிப்பகத்துக்கும் ஒரு புத்தகம் எழுதியிருப்பதாக கூடுதல் தகவலையும் சொன்னார். இலக்கியவாதிகளெல்லாம் சினிமாவை ஒதுக்குவதாக குறைபட்டுக் கொண்டவர் கூடிய விரைவில் சிறப்பான இலக்கிய படைப்பை படைக்க வல்லவர்கள் சினிமாக்காரர்களா அல்லது எழுத்தாளர்களா என்கிற போட்டி வரும் என்றார். மகேந்திரன் பற்றியும் அவரது 'சினிமாவும் நானும்' பற்றியும் தனியாவே நிறைய எழதலாம்னு இருக்கேன். கூடிய விரைவில்!

நிகழ்ச்சி முடிந்ததும் நம்ம பத்ரியை பார்த்து பேசலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா, மகேந்திரன் மைக்கை பிடித்த உடனேயே எஸ்கேப்பாகிவிட்டார். என்னிடம் மாட்டாமல் தப்பித்தது அவரது நல்ல நேரம்!

பதினோரு மணிக்கு எல்லாம் முடிஞ்சு வெளியே வந்தபோது ஏனோ ஒரு சந்தோசம். இதையே வருடாவருடம் தொடர்ந்து நடத்தினால் எல்லா இலக்கியவாதிகளுக்கும் ஒரு அறிமுகம் கிடைக்கும். பல விசயங்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

ஏனோ புலம் பெயர்ந்து தமிழர்களால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம்னு நம்முரு ஆளுங்க நிருபிச்சிடுவாங்களோ? அப்படியெல்லாம் நடக்காது. அட, யாரா இருந்தா என்ன... தமிழ்... தமிழ்தான். ஆனாலும் இது மாதிரி நிகழ்ச்சி நடக்கும்போது சில பேச்சாளர்கள் உணர்ச்சி வேகத்தில் பேச ஆரம்பிக்கும்போது வாச¨லை பார்த்துகிட்டே இருக்கணும். இல்லாட்டி பொடா போலீசார் உள்ளே வந்து நம்மளையும் உள்ளே வெச்சிடுவாங்க!

- ஜெ. ரஜினி ராம்கி