Thursday, April 29, 2004

மரபுக்கவிதையும் மனுஷ்யபுத்திரனும்!

நேத்து ராஜ் டிவியில் "டேக் இட் ஈஸி" ஊர்வசி, நம்ம மனுஷ்யபுத்திரனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். மரபுக் கவிதைக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் அப்படியென்ன அலர்ஜியோ தெரியலை... இந்த காலத்துல மரபுக் கவிதையெல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு சொல்லிட்டிருந்தார். அந்த காலத்துல மக்களெல்லாம் சந்தோஷமா இருந்தாங்க அதனால யாப்பு, அணி மாதிரியான இன்னபிற இலக்கிய சங்கதிங்க தப்புத் தாளம் போடாம முறையா எழுதிட்டிருந்தாங்க. ஆனா இப்போ யாருக்கு டயமிருக்குன்னு யதார்த்ததை சொன்னார். அது மட்டுமல்ல, இப்போ மரபுக்கவிதையால தற்காலத்து சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்க முடியாம வெற்று அலங்கார சங்கதியா படு செயற்கையா இருக்கும்னார். இந்த சின்ன வயசுல எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு எப்படி உங்களால செய்யமுடியுதுன்னு ஊர்வசி கேட்ட கேள்விக்கு படு டீடெய்லா சொன்ன பதில் அசத்தல். என்னதான் பிஸியா இருந்தாலும் நமக்கு உண்மையிலேயே ஒரு விஷயத்துல இன்ட்ரெஸ்ட் இருந்தா அதைத்தான் முதல்ல செஞ்சி முடிப்போம். அது மாதிரிதான் இதுன்னார். இன்னொருத்தர் எழுதி தனக்கு பிடிச்ச கவிதையா ஒண்ணு சொன்னார். எழுதினது யாருங்கிறதுதான் சைக்கிள் கேப்புல மிஸ்ஸாயிடுச்சு!

கடவுளை சந்தித்தேன்
அவரிடம் எதுவும்
கேட்க தோன்றவில்லை;
அவரும் என்னிடம்
எதுவும் சொல்லவில்லை;
இருந்தாலும் மனசுக்குள்
ஏதோ நிம்மதி!

மனுஷ்யபுத்திரனை சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் நேரில் பார்த்தேன். மெனக்கெட்டு பேர், ஊரெல்லாம் ஆர்வமா கேட்டுக்கொண்டார். உயிர்மையில் புதுசா ஏதாவது செய்யுங்க, அப்படியே காலச்சுவடு பார்த்து காப்பியடிச்ச மாதிரி இருக்குன்னு தைரியமா சொன்னேன். சுவராசியமா கேட்டுக்கொண்டு தொடர்ந்து படிச்சுட்டு வாங்கன்னு சொன்னார். அதுக்கப்புறம் ஏனோ படிக்க முடியலை. ஆனா அவரை நேர்ல பார்க்கிறதுக்கு முந்தி அவர் ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த உடல் ஊனமுற்ற, மற்ற இலக்கியவாதிகளை விட வயதில் சின்னவருங்கறது எனக்கு தெரியாது. அவரோட கவிதைகளை விட என்னை அதிகமாக பாதித்த விஷயம் அது!

Tuesday, April 27, 2004

காந்தீய விழுமியங்கள்



மகாத்மா காந்திஜி - பாரத தேசத்தின் கலாசார அடையாளமான அகிம்சையை மீட்டெடுத்து ஒரு புது உலகம் படைத்தவர். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை அரங்கேற்றி இந்தியாவை அடிமைத்தளையிலிருந்து அகற்றியவர். முதுபெரும் அரசியல் தலைவராகவும், உண்மையான ஆன்மீகவாதியாகவும், சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்படும் காந்திஜியின் பல்துறை பங்களிப்பை பற்றியக் கருத்துக்களை திரும்பவும் மக்கள் முன்வைக்க ஒரு சிறு முயற்சியை செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆயுதக்குறைப்பு, இந்தியக் கலாசாரம், இலக்கியம், அறிவியல் வளர்ச்சி, உலகமயமாகும் பொருளாதார சிந்தாந்தங்கள் என பல்வேறு தளங்களில் மகாத்மாவின் பதிவுகளையும் அதன் பின்விளைவுகளை பற்றிய ஒரு சிறு பார்வையே காந்தீய விழுமியங்கள். மகாத்மா காந்திஜியின் கருத்துக்களை முழுவதுமாக ஆராய்ந்து விமர்சிக்கும் தகுதியும், திறமையும், அனுபவமும் எனக்கு இல்லாவிட்டாலும் அவரது கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைப்பதில் அதீத ஆர்வமுண்டு. காந்தீய சிந்தனைகள் பற்றி விவாதிப்பதற்காக தனியாக ஒரு யாகூ குழுமத்தையும் ஆரம்பித்திருந்தேன். அதைப் பற்றின எனது முந்தைய பதிவு.

காந்தீய சிந்தனைகளை எல்லோருக்கும் புரிகிற எளிய வடிவத்தில் தமிழோவியத்தில் இனி வாராவாரம் எழுதலாம் என்றிருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் தமிழோவியம் கணேஷ¥க்கும், பாரா ஸாருக்கும் எனது நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும்.

"சாந்தி நிலவட்டும்;
சமுதாயம் சிறக்கட்டும்
நதிகள் இணையட்டும்,
நல்வாழ்வு மலரட்டும்;
இந்தியா ஒளிரட்டும்!"

- ஜெ. ரஜினி ராம்கி