Saturday, March 27, 2021

டெல்டா 2021 : தேர்தல் Analysis

'டெல்டாவில் இழுபறியாம், நம்பவே முடியலை! திமுக கோட்டையாச்சே...' என்று ஆச்சர்யப்படுகிறார்கள். டெல்டாவின் முக்கிய நகரங்களில் திமுகவின் வாய்ப்பு எப்படி என்னும் ஒரே ஒரு சாம்பிள் மட்டும் பார்ப்போம். திருவாரூர், கும்பகோணம் இரண்டும் திமுகவின் இரும்புக் கோட்டை. இனி வரும் பத்தாண்டுகளுக்கு வேறு கட்சிகள் உள்ளே வரமுடியாது! 

நாகப்பட்டினம், மயிலாடுதுறை இரண்டிலும் திமுக போட்டியிடவே யோசிக்குமளவுக்கு படு வீக். தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் தள்ளி விடுவார்கள். தஞ்சாவூர் திமுகவில் கோஷ்டி பூசல் இருக்கும் வரை கடைசிவரை இழுபறிதான். ஆனாலும்,  தஞ்சாவூரில் ஜெயிக்கும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்பார்கள் 

டெல்டாவில் தங்களுடைய பலவீனமான தொகுதிகளில் கூட திமுகவும் அதிமுகவும் நேரடி போட்டிக்கு தயாராகியிருக்கின்றன (உ.ம் பேராவூரணி, பூம்புகார், நன்னிலம் தொகுதிகளில் திமுக & திருவிடைமருதுர், சீர்காழி, கும்பகோணம் தொகுதிகளில் அதிமுக). கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை தள்ளிவிடாமல் (விதிவிலக்கு, மயிலாடுதுறை & கீழ்வேளூர்) முடிந்தவரை நேரடியாக போட்டியிடவே இரு கட்சிகளும் விரும்பியிருக்கின்றன. 

'சனாதனம்' என்பது நிறைய பேருக்கு வாயில் நுழையவில்லை; 'வாழ்வாதாரம்' சர்வசாதாரணமாக வந்து விழுகிறது. பள்ளிகள் திறக்காததால் குழந்தைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அதிர வைத்தார், ஒருவர். தலை சுத்திப் போச்சு!

சமூக நீதி என்பது மோடி ஆட்சியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட வார்த்தையென்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அரசு வேலை என்றால் நாக்கில் ஊறுகிறது. வேலை என்பதை தவிர்த்துவிட்டு ஜாப் என்று சொல்வதையே விரும்புகிறார்கள். நாமதான் ஆளணும், ஆண்ட கட்சிகள் என்றெல்லாம் பேசும்போது மன்னராட்சி நெடியடிக்கிறது. 

3 நாள் ஊர் சுத்தலில் தெரிந்து கொண்டது இவ்வளவுதான். 'ரொம்ப கஷ்டப்படறோம், அரசாங்கம் பார்த்து, ஏதோ செஞ்சுக் குடுத்தா நல்லாயிருக்கும்' என்றுதான் பேச்சை முடிக்கிறார்கள். இதுதான் வேண்டும் என்பதை யாரும் தெளிவாக சொல்லவேயில்லை! #ரவுண்ட் அப் @ டெல்டா

நன்னிலம் கள நிலவரம் : திருவாரூர் திமுகவின் கோட்டையாக இருந்தாலும் சுற்றியுள்ள பேரளம், பூந்தோட்டம், வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் எப்போதும் இரட்டை இலைதான். கலைஞர் காலத்தில் கூட திமுக நிற்பதற்கு யோசித்த தொகுதி இது.

ஜாதி கணக்குகள் செல்லுபடியாகாத தொகுதி. இம்முறை காங்கிரஸ் போட்டியிடும் என்று நினைத்தபோது திமுகவே களமிறங்கியிருக்கிறது. திருவாரூரில் தனக்கு நிச்சயமான வெற்றி என்பதால் மா.செ பூண்டி கலைவாணன், நன்னிலத்தையே சுற்றி வருகிறார் என்கிறார்கள். 

நன்னிலத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் போட்டியிடுகிறார். பூண்டி கலைவாணன் vs காமராஜ் - இதுதான் மாவட்டத்தின் கள அரசியல். காமராஜ், எளிதில் அணுக முடிந்தவர். இரண்டு முறை தொடர்ந்து பதவியில் இருந்தும் பெரிய அளவில் அதிருப்தி இல்லை. கொரானா காலத்தில் அடிக்கடி வலம் வந்து, ஏகப்பட்ட விஷயங்களை செய்திருக்கிறார். 

சென்ற முறை 1.2 லட்சம் வாக்குகள் பெற்று திருவாரூரில் கலைஞர் ஜெயித்தபோது, திருவாரூருக்கு வெளியே 1 லட்சம் வாக்குகள் பெற்று ஜெயித்து, அமைச்சரானவர் இவர். கொரானாவின் பிடியில் சிக்கி, செத்துப் பிழைத்து வந்திருக்கிறார். நிச்சயம் ஹாட்டிரிக் அடிப்பார்! #TNElection2021

கலைஞர் பிறந்த திருக்குவளையை உள்ளடக்கிய தொகுதி. திமுக + கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே மிகக்குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி என்கிறார்கள். 

மயிலாடுதுறையைப் போலவே கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளிவிடப்பட்ட தொகுதி. சிபிஎம் சார்பாக தொகுதிக்கு பரிச்சயமான நாகை மாலி போட்டியிடுகிறார். எதிரணியில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத பாமகவின் வடிவேல் ராவணன். 2019ல் விழுப்புரத்தில் திமுகவின் ரவிக்குமாரை எதிர்த்து தோல்வியடைந்தவர், இவர். முதலில் பாமக சார்பாக வேறொரு வேட்பாளரை அறிவித்து, வாபஸ் பெற்று இப்போது வடிவேல் ராவணனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

நிஜத்தில் போட்டி என்பது முன்னாள் திமுக அமைச்சர் மதிவாணனுக்கும் இந்நாள் அதிமுக அமைச்சர் ஓ எஸ் மணியனுக்கும்தான். கீழ் வேளூரில் வேளாண்மை கல்லூரி என்பது 20 ஆண்டு கனவு. இரண்டு பேராலும் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை.

மறுபடியும் போட்டியிட சீட் மறுக்கப்பட்டிருப்பதால் மதிவாணன் அப்செட் என்கிறார்கள். எப்படியாவது பாமகவை ஜெயிக்க வைப்பது என்பதில் மணியன் மும்முரமாக இருக்கிறார். இரட்டை இலைதான் மாம்பழத்தை காப்பாற்றியாக வேண்டும். அதற்கு வாய்ப்புகள் குறைவு. 

கீழ்வேளூர்(தனி), சிபிஎம் வசம்! #டெல்டா நிலவரம்

உள்ளாட்சித் தேர்தல் கூட பரபரப்பாகத்தான் இருந்தது.  மாயவரத்தில் இம்முறை தேர்தல் திருவிழா ஏனோ திருதிருவிழா! எதிர்பார்த்தது போல் அதிமுக கூட்டணியில் பாமகவும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. தினகரன் கட்சி சார்பாக  பத்திரிக்கையாளர் கோமல் அன்பரசன் களத்தில் இருக்கிறார். சீமான் கட்சியில் போஸ்டர் புகழ் ஆசாமி இருக்கிறார். மய்யத்தைக் காணோம். 

இந்த தடவை  உதயசூரியனுக்குத்தான் ஓட்டு என்றார், ஒரு சாமானியர்.  உதய சூரியனும் இல்லை, இரட்டை இலையும் இம்முறை இல்லையே என்றதும் அப்படீன்னா மாம்பழம்தான் என்றார். கொள்கை, கூட்டணி என்றெல்லாம் களமாடுபவர்கள் மாயவரம் வந்தால் மனதளவில் நொறுங்கிவிடுவார்கள். 
காங்கிரஸ் கட்சி, இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் அலுவலகமோ மூடிக்கிடக்கிறது. மய்யம் அல்லது கேப்டன் கட்சி சார்பில் யாராவது தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தினால் கை கலகலத்துப் போய்விடும். 

திமுகவுக்கு இணையாக அதிமுகவில் ஏகப்பட்ட கோஷ்டிகள். ஆனாலும், ஓ.எஸ் மணியன் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். ஆக, எதிர் வீட்டு மாமரத்தை பார்க்கும்போது இம்முறை சீஸன் நிச்சயம்! #மயிலாடுதுறை #TNElection2021

திருவாரூர், கும்பகோணம், சீர்காழி நிலவரம் :  மூன்றிலும் திமுகவின் வெற்றி உறுதி. திமுக ஆட்சிக்கு வந்தால் எது அமைச்சர் தொகுதி என்பதை மட்டும்தான் கணிக்க வேண்டும். 

திருவாரூர் : பூண்டி கலைவாணன், தலைமைக்கு நெருக்கமானவர்.  தாலுகாவாக இருந்த திருவாரூரை மாவட்டமாக்கி, பிரச்னையே இல்லாத பிரதேசமாக்கியது திமுக. புது பஸ் ஸ்டாண்ட் பிடிக்கவில்லை. மறுபடியும் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் விடவேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாம்! இதெல்லாம் 11:05ல் சரி செய்துவிடக்கூடிய பிரச்னை!

சீர்காழி : வழக்கறிஞர் பன்னீர்செல்வம், நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வாங்கியவர். 2016ல் திமுக தவற விட்ட முக்கியமான தொகுதி இது. முன்பின் அறிமுகமில்லாத கனிமொழி ஆதரவாளரை நிறுத்தி, தோற்றுப் போனார்கள். இம்முறை தோல்விக்கு வாய்ப்பில்லை. அண்ணியாரின் சொந்த ஊரான, திருவெண்காடு வேறு சீர்காழி தொகுதியில்தான் வருகிறது. 

கும்பகோணம் : சாக்கோட்டை அன்பழகன், அந்த காலத்து கோ. சி. மணியின் இடத்தை நிரப்புகிறார். மாஸ்க் போடுங்க, அப்புறம் எனக்கு ஓட்டு போடுங்க என்றுதான் பிரச்சாரம் செய்கிறார். மாயவரம் கூட மாவட்டமாகிவிட்டதே என்று கும்பகோணத்து மக்கள் கொதித்துக் கிடந்தபோது, நிச்சயம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று ஸ்டாலின் பேசியது முதல் திமுக வட்டாரத்தில் செம உற்சாகம்

மூவரில், இருவரை மாண்புமிகு மந்திரியாக எதிர்பார்க்கலாம்!

பேராவூரணி: அதிமுகவின் கோட்டை. எங்கிருந்தோ வந்த நடிகர் அருண் பாண்டியனைக் கூட ஜெயிக்க வைத்த தொகுதி. திமுக எந்நாளும் இங்கே ஜெயித்ததில்லை. 

அதிமுக சார்பில் போட்டியிடும் திருஞானசம்பந்தம், ஏற்கனவே இருமுறை தமாகா சார்பாக எம்எல்ஏவாக இருந்தவர். காங்கிரஸ் பின்புலம் + முத்தரையர் என்பதெல்லாம் பெரிய பிளஸ். 

2016ல்தான் அதிமுகவில் சேர்ந்தார். தற்போதைய அதிமுக எம்எல்ஏக்கு சீட் தராமல் இவருக்கு கொடுத்திருப்பதால் கட்சிக்குள் ஏகப்பட்ட கோஷ்டிபூசல். ஆனாலும், எல்லோரையும் சமாளித்து முன்னேறுகிறார். 

அமமுகவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ள தொகுதி என்றாலும் தேமுதிகவோடு சேர்ந்து திமுகவுக்குப் போக வேண்டிய வாக்குகளை பிரிப்பதால் திமுக தரப்பு பலவீனமாக இருக்கிறது. எப்படியும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலை கரை சேர்ந்துவிடும்!

பாபநாசம் : நன்னிலத்திற்கு காமராஜ் போல் பாபநாசத்திற்கு துரைக்கண்ணு. மூன்று முறை ஜெயித்து, செல்வாக்கின் உச்சியில் இருந்த அமைச்சரை கொரானா பலிவாங்கிவிட்டது. எஸ்பிபி மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட கொரானா மரணம் அது.

1989ல் தனியாக நின்று மூப்பனார் ஜெயித்த தொகுதி இது. மூப்பனார் மறைவுக்குப் பின்னர் தமாகா வசமிருந்த தொகுதியை அதிமுகவுக்குக் கொண்டு வந்தவர், துரைக்கண்ணு. அவருடைய மகனுக்குத்தான் சீட் கிடைக்கும் என்று நினைத்தபோது, வன்னியரல்லாத ஒருவரை களத்தில் இறக்கியது, செம ட்விஸ்ட். டெல்டாவின் ஜாதிக் கணக்குகள் தெரிந்தவர்கள், இதை பிரமாதமான யுக்தி என்பார்கள். 

எந்நாளும் திமுக ஜெயித்திராத தொகுதியைத்தான் மனித நேய மக்கள் கட்சிக்கு தள்ளிவிட்டிருக்கிறார்கள். நண்பர் ஜவஹாரூல்லா, ஒரு எம்.பி மெட்டீரியல். டெல்லிக்குப் போகும் வழியை அவர் தேடுவதுதான் சரி

பாபநாசமும் பேராவூரணியும், இரட்டை இலை வசம்!

பூம்புகாரும் திருவிடைமருதூரும், காவிரியின் கடைமடை பகுதிகள். வந்துவிட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் வரப்போகும் கும்பகோணம் மாவட்டத்திற்கும் வருவாய் தரப்போகிற தொகுதிகள். ஏகப்பட்ட கோயில்கள், சுற்றுலாத் தலங்கள் என பரந்து விரிந்த ஏரியா. பெரிய கட்சியில் பரவலான அறிமுகமுள்ளவர்கள், எந்நாளும் தொகுதியில் இருந்தபடி சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய,  மாற்று சமூகத்தவர்களையும் மதிக்கும் எம்எல்ஏவால் மட்டுமே சமாளிக்க முடியும்.

கிழக்கில் சந்திரபாடி முதல் மேற்கில் கோனேரிராஜபுரம் வரை பரந்து விரிந்த தொகுதி, பூம்புகார். அடிப்படையில் அதிமுக அபிமானிகள் + வன்னிய வாக்காளர்கள். 1996ல் அடித்த அலையில்  மட்டுமே திமுக ஜெயித்தது. அதற்குப் பின்னர் திமுகவுக்கு வாய்ப்பே இல்லை. 

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பூம்புகார் தொகுதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. மயிலாடுதுறை மாவட்டம் உருவாக காரணமான அதிமுகவின் பவுன் ராஜ், மூன்றாவது முறையாக களத்தில் இருக்கிறார். திமுகவின் மா.செ, கடுமையான போட்டியை தருகிறார். ஜாதி கணக்குகளின் அடிப்படையில் இரட்டை இலை முன்னிலையில் இருக்கிறது.

80களில் திமுகவின் கோட்டையாக இருந்தது, திருவிடைமருதூர் ரிசர்வ் தொகதி. 4 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்த ராமலிங்கம், மயிலாடுதுறையின் தற்போதைய எம்.பி. நடுவே அதிமுக வசம் போன தொகுதியை மீட்டு,  அடுத்தடுத்து 2 முறை எம்எல்ஏவாகியிருக்கிறார், கோவி. செழியன். திமுக வட்டாரத்தில் தெரிந்த முகம். 

2016ல் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தொகுதியை திமுக தக்க வைத்தது. ஆடுதுறை, திருப்பனந்தாள், திருபுவனம் என கும்பகோணத்தின் முக்கியமான பேரூராட்சிகளும், உலகப் புகழ் கதிராமங்கலமும் தொகுதிக்குள்தான் வருகிறது. அதிமுக வேட்பாளருக்கு பெரிய அளவில் அறிமுகமில்லை. உதய சூரியனுக்கே ஏறுமுகம். 

பூம்புகார் & திருவிடைமருதூர் - இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற சிட்டிங் எம்எல்ஏக்களின் மீது மக்களுக்கு சலிப்பு வருவது சரிதான். இழுபறிதான் என்றாலும் சிட்டிங் எம்எல்ஏக்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கரையேறிவிடுவார்கள்

பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வந்திருக்கும் பலமான போட்டியாளர் வேதரத்தினத்தை எதிர்கொள்கிறார், ஓ எஸ் மணியன். டெல்டாவின் அரசியலைத் தீர்மானிக்கும் மணியன், பாதுகாப்பான தொகுதிக்கு மாறியிருக்க முடியும். நாகப்பட்டினத்தை மட்டுமல்ல இன்னும் சில தொகுதிகளையும் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சாதகமாக்கிவிட்டு, சொந்த தொகுதியான வேதாரண்யத்தில் களமிறங்கியிருக்கிறார். 

கடுமையான போட்டிதான். கடலோர கிராமங்களே முடிவுகளை தீர்மானிக்கும். எது எப்படியிருந்தாலும் மணியனின் அரசியல் செல்வாக்கில் குறையிருக்காது. அவரைப் போல் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டு, மீண்டெழுந்து வந்தவர்கள் டெல்டாவில் வேறெந்த கட்சிகளிலும் இல்லை. 

நாகப்பட்டினத்தில் நண்பர் ஆளூர் ஷநவாஸ். டிவியில் தெரிந்த முகம், ஆனால் தொகுதிக்கு அந்நிய முகம். பானை சின்னம், திமுகவின் கோஷ்டி பூசல் என்றெல்லாம் ஏகப்பட்ட மைனஸ் பாயிண்ட். ஒருவேளை மயிலாடுதுறையில் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் ஷநவாஸ் வெற்றி உறுதியாகியிருக்கும்.   

வேதாரண்யத்தில் இழுபறி; நாகப்பட்டினத்தில் இரட்டை இலை!

'முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டியா, பட்டுக்கோட்டையா... எந்த தொகுதி?' என்றேன். இரவு 11 மணிக்கு மேல் போன் அடித்து டெல்டா நிலவரம் கேட்டால் யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.

'எதுவா இருந்தா என்ன, யாரும் அதை தெரிஞ்சுக்க போறதில்லை. நீட் தேர்வு என்னவாகும்? நகைக்கடன் தள்ளுபடி இருக்குமா? ரிசர்வேஷன் என்னவாகும்? அதைப் பத்தி மட்டும் பேசு' என்றார், நண்பர். 

கள அரசியலை விட கொள்கை அரசியலுக்கு இருக்கும் கிரேஸ் தனி ரகம்தான். அனைத்து சாதிக்காரர்களும் அர்ச்சகராக வேண்டுமா என்று நள்ளிரவில் ஒற்றைக் கேள்வி கேட்டதும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். Moral of the Story : ஊரோடு ஒத்து வாழ்!