Saturday, March 06, 2004

மகாமக தரிசனம்

''கும்ப மேளாவில் நிறைந்திருந்த கூட்டத்தின் அளவையும் அமர்க்களத்தையும் பார்த்து நான் பிரமித்து விட்டேன். சுற்றும் முற்றும் தேடியும் எந்த மகானுடைய ஒளி பொருந்திய முகமும் எனக்கு தென்படவில்லை. இந்த திருவிழா இரைச்சலும், பிச்சைக்காரர்களும் நிறைந்த பெருங்குழப்பமே தவிர வேறொன்றுமில்லை என்று நினைத்திருந்தேன்.

பாபாஜி, மரத்தடியில் அவர் அருகில் இருந்த ஆசனத்தில் அமருமாறு சைகை செய்தவர், நான் இயல்பாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்பியதும் எனக்கு வெளிப்படையாக தெரிந்தது.

'கும்ப மேளாவை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?'

'நான் மிகவும் ஏமாற்றமடைந்துவிட்டேன் ஸ்வாமி! என்னவோ, மகான்களையும் இந்த அமர்க்களத்தையும் சம்பந்தப்படுத்தி பார்க்க முடியவில்லை'

'குழந்தாய்! மணலும் சர்க்கரையும் கலந்த கலைவையைப் போல இந்த உலகத்தில் அனைத்தும் கலப்படமானவையே! சர்க்கரையை மட்டும் எடுத்துக் கொண்டு மணலைத் தொடாமலே விட்டு விடும் எறும்புவின் புத்திசாலித்தனம் நமக்கு இருக்க வேண்டும். இங்கு சாதுக்களில் பலர் இன்னும் மாயையில் உழன்றாலும், இந்த கும்ப மேளா கடவுளை உணர்ந்த சில மகான்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது'

- பாபாஜி தரிசனம் பற்றி யோகானந்தர் தனது 'ஒரு யோகியின் சுயசரிதை' நு¡லில்...

********************************************************************************************

பிருஹ்ம விஷ்ணு சதாசிவ ஜானத அவிவேகா
ப்ரணவாக்ஷர கே மத்யே யஹ் தீனோம் ஏகா

உதடுகள் உச்சரித்துக் கொண்டே கலங்கலான குளோரின் தண்ணீரை கையில் ஏந்தி கிழக்கு பார்த்து சங்கல்பம் செய்து முழங்கால் மட்டுமே தண்ணீர் இருந்தாலும் முட்டிக்கால் போட்டு ஒரு முழுக்கு. பாதி து¡க்கம் கெட்டு பஸ்ஸில் நின்றுகொண்டே பயணம் செய்து வந்ததால் பாதிக்கப்பட்ட கண்களை சூரிய பகவானும் பதம் பார்த்துக் கொண்டிருந்தார். குளக்கரையின் ஊடே நடந்து இருபது தீர்த்தங்களில் ஏறக்குறைய பெரும்பாலான தீர்த்தங்களை தலையில் தெளித்துக் கொண்டே கரையேறும் போதுதான் கவனித்தேன். கரையெல்லாம் காக்கிப்பூக்கள்!

முன்று வருஷமாவே காக்கிச்சட்டையை பார்த்தாலே மிரண்டிருந்தவனுக்கு கனிவான முகமும் அக்கறையான அதட்டல்களும் புதிதாக தெரிந்தன. பத்தடிக்கு ஒரு போலீசார் வீதம் கும்ப மேளா காக்கி மயமாய் தெரிந்தது. மதுரை, நெல்லை, விருதுநகர், கோவை என்று விதவிதமான தமிழ் காக்கிச்சட்டைகளின் வார்த்தைகளில் விளையாடிக் கொண்டிருந்தது. விதவிதமான போஸ்டர்களில் பக்தர்களுக்கு வரவேற்பையும் எச்சரிக்கையையும் கொடுத்திருந்தது நகர காவல்துறை!

மகம் என்பது வருஷாவருஷம் மாசி மாதத்தில் வரும் வழக்கமான சங்கதிதான். அதுவே பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்போதுதான் மகாமகம் என்று விசேஷமான சங்கதியாகிவிடுகிறது. காவிரிக்கரையோர சிவத்தலங்களில் ஜப்பசி மாத தீர்த்தவாரி மிகவும் விசேஷமானது. வருஷாவருஷம் ஜப்பசி மாத கடைசி நாளன்று வரும் தீர்ததவாரி மாயவரத்தில் 'கடை முகம்' என்று கொண்டாடப்படும். பொதுவாக பல நதிகளும் தீர்த்தவாரி நேரத்தில் சங்கமிப்பதாக ஒரு ஜதீகம். திராவிடக்கட்சிகளின் எழுச்சியால் 1968க்கு பின்னர் வந்த மகாகமகங்களில் சுரத்து குறைந்தே இருந்திருக்கிறது. 1992 மகாமகமோ தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவமாக அமைந்துவிட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். போன மகாமகத்தால் மிரண்டு போயிருந்த கும்பகோணத்து மக்களை பத்து நாட்களும் குளத்தில் நீராடலாம் என்று காஞ்சி சங்கரச்சாரியார் புதுவிதி செய்ததிருந்ததால் நிறைய பேருக்கு நிம்மதி.

மகாமகக் குளத்திலிருந்து பொற்றாமரைக்குளம் நோக்கி ஒரு இரண்டு கிமீ பயணம். மகாமகக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே அரசு தத்தெடுத்திருப்பது பொற்றாமரைக் குளத்துக்கு வந்தபின்புதான் தெரிந்தது. முழுங்காலுக்கும் குறைவான தண்ணீர் இருந்த குளத்தில் இறங்கி மண்டபத்தை சுற்றி வந்து முழுக்கு போட்டுவிட்டு திரும்பவும் ஒரு இரண்டு கி.மீ பயணம் காவிரியை நோக்கி!

ஏறக்குறைய பதினைஞ்சு வருஷம் கழிச்சு காவிரி அன்னையின் மடியில் நான்! சின்ன வயசில் மாயவரம் துலாக்கட்டத்தில் அம்மாவின் கண்காணிப்பில் முழுக்கு போட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. திரும்பவும் இந்த வாய்ப்பு கிடைக்குமோ என்கிற ஏக்கமும் சில்லென்ற காவிரிநீரும் ஓரளவு சுத்தமான சக்கரப்படித்துறையின் தோற்றமும் ஆற்றில் ரொம்ப நேரம் நீராட வைத்தது.

மகாமகக்குளத்திலிருந்து காவிரி ஆற்றுப்படுகை வரை பக்தர்கள் வந்து சேர உதவும் காவல்துறைக்கு கோயிலுக்கும் பஸ் ஸ்டாண்டுகளை நோக்கி திரும்பும் மக்களை முறைப்படுத்தி அனுப்பத்தான் முடியவில்லை. ஆதி கும்பேஸ்வரர், ராமசாமி, சாரங்கபாணி என்று பெரும்பாலான கோயில்களில் தரிசன வரிசை வீதி வரை நீண்டிருந்தது. 'ஏண்டா, லோக்கல் ஆளு நீ! பொறுமையா வந்து என்னை தரிசனம் பண்ணக்கூடாதான்னு எல்லா கடவுள்களும் என்னை கேட்ட மாதிரி ஒரு ·பீலிங் மனசில் வந்து மணியடித்ததால் நேரே ஸ்டேஷனை நோக்கி ஜீட்!

கம்மிங் பேக் டு த பாயிண்ட்

பாபாஜி சொல்ற மாதிரி எறும்பு மாதிரி நடந்துக்கணும்னு நினைச்சாலும் நம்ம தமிழ்நாட்டு ஆளுங்களால முடியாது போலிருக்கிறது!

மகாமக குளக்கரைக்கு பக்கத்திலேயே அலங்கரமான மண்டபத்துடன் அண்ணா கம்பீரமாக கைநீட்டிக் கொண்டிருந்தார். அமைப்பு நகர திமுகவாம்! அண்ணாமலையாரை கும்பிடுவதுதான் முடநம்பிக்கை. அதுவே அண்ணாவாக இருந்தால் பகுத்தறிவு போலிருக்கிறது. குளத்தை சுற்றியிருந்த பெரிய கட்டிடங்களில் மெகா சைஸ் கட்அவுட்டுகளில் திராவிட பாராம்பரியத்தில் வந்த அம்மா சிரித்துக் கொண்டிருந்தார். காவிப்படைகளையும் காவிக் கொள்கைளில் அணுசரணையாக இருப்பவர்களையும் குறிவைக்கும் பிரச்சாரம் மாதிரி! அந்த வகையில் இது (அம்)மாகாமகம்தான்!

- கும்பகோணத்திலிருந்து ஜெ. ரஜினி ராம்கி.

Wednesday, March 03, 2004

உண்மைக்கு தெரியாதா உண்மை?

கல்யாண சந்தையில் செலவழிப்பதுதான் கெளரவம் என்கிற விதியை யாரும் மாற்றமுடியவில்லை என்று 'சிந்திக்க ஒரு நொடி'யில் ஸ்ரீரங்கம் சொன்ன செய்தியாக 'இந்தியா டுடே'வில் வருத்தப்பட்டிருந்தார் வாஸந்தி. சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட திருமணங்களை ஆடம்பரமாக நடத்துவதும் வயதானாலும் வரதட்சணை வாங்குவதற்கு தடையில்லை என்பதும் கல்யாணம் என்கிற புனிதமான சங்கதியை கேலிக்கூத்தாக்குகின்றன. வீடியோ எடுப்பது போன்ற ஆடம்பரங்களே வேண்டாமே என்ற வாஸந்தியின் ஆதங்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாவிட்டாலும் ஒரளவு பின்பற்ற முயற்சி செய்வதில் தப்பில்லை.
சரி விஷயத்துக்கு வருவோம். அக்னி வளர்ப்பது, தாலி கட்டுவது போன்றவற்றையும் தவிர்க்கலாமே என்று பிராமண வகுப்பை சேர்ந்த வாஸந்தியால் சொல்ல முடியாது என்று கருப்புச்சட்டைக்காரர்களின் 'உண்மை' இதழ் கிண்டலடித்திருக்கிறது. எனக்கு தெரிந்து பலமுறை வாஸந்தி இந்தியா டுடேவில் மதத்தின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனங்களை கண்டித்திருக்கிறார். அப்பொதெல்லாம் வாஸந்தியை பாராட்டி ஒரு வார்த்தை எழுதியது கிடையாது 'உண்மை'. தமிழ்நாட்டில் பிராமண வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு முடநம்பிக்கைகளை பற்றி எழுதவும் பேசவும் தகுதியில்லை என்கிற முடநம்பிக்கை ரொம்ப காலமாகவே இருந்து வருகிறது. எனக்கு 'பிராமண வகுப்பைச் சேர்ந்தவள்' என்கிற அடையாளம் ஒரு சிலுவை மாதிரின்னு ஒரு பேட்டியில் வாஸந்தி சொல்லியிருந்ததில் மறைந்திருக்கும் சோகத்தை இப்போதுதான் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.

- ஜெ. ரஜினி ராம்கி