Friday, April 09, 2004

பொம்மலாட்டம் நடக்குது!

'...நான் 13 வயதிலே அரசியலுக்கு வந்தேன் என்றாலும் சிறுவனாக இருந்தபோது, நீதிக்கட்சியின் தராசு கொடி ஒரு கையிலே இருக்கும். இன்னொரு கையிலே முஸ்லீம் லீக்கின் பச்சை பிறைக்கொடி இருக்கும்... அப்போதெல்லாம் பாகிஸ்தான் பிரச்சினை. ஒரு கையிலே திராவிடஸ்தான், திராவிட நாடு திராவிடர்க்கே என்கிற முழக்கம். இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கம். இந்த இரண்டு முழக்கங்களையும் ஒலித்த வாய்தான் இந்த கருணாநிதியின் வாய்.....'
- இஸ்லாமிய, கிறிஸ்துவ, தலித் அமைப்புகளின் எழுச்சி மாநாட்டில் கலைஞர் பேசியதாக முரசொலியில்....

மதச்சார்பின்மையை நிரூபிப்பதற்காக அரசியல்வாதிகள் மண்டையை உடைத்துக் கொண்டு யோசிப்பது தமிழ்நாட்டில்தான் அதிகம் மாதிரி எனக்கு தெரிகிறது. ஒரு ஆச்சரியமான சங்கதி என்னவென்றால் தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை தேசியக்கட்சிகளான பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நினைப்பதில்லை. இந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட தமிழகத்தின் பிரச்சினைகளை முன்வைத்துதான் பிரச்சாரங்கள் நடந்துவருகின்றன. காவிக் கொடியை கண்டாலே முகம் சுளிப்பவர்களுக்கு பச்சைக் கொடியின் மீது பாசம் வருவதற்கு ஓட்டு வங்கி என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

வேளாங்கண்ணி மாதா கோயிலையும் நாகூர் தர்காவையும் சிக்கல் சிங்காரவேலரையும் ஒரு சேர வலம் வரும் எங்கள் மாவட்டத்துக்காரர்கள் மதச்சார்பின்¨மை பற்றியெல்லாம் அதிகமாக யோசித்ததில்லை... கோவையில் குண்டுவெடிக்கும் வரை! ஆனால் தொடர் குண்டுவெடிப்பெல்லாம் ஒரேயடியாக இந்து-முஸ்லீம் உறவை தகர்த்தெறிந்துவிட்டன என்றெல்லாம் மிகைப்படுத்தி சொல்லி விட முடியாது. இன்றைக்கும் எங்கள் ஊரில் சில முஸ்லீம் வீடுகளில் வாசல்களில் சாணி தெளிக்கும் வழக்கமுண்டு. வாழ்க்கை முறைகளிலும் பெரிய வித்தியாசமெல்லாம் இருக்காது. பத்தாண்டுகளில் பார்வைகள் மாற வேண்டிய அவசியம் ஏன் வந்தது? விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் காரணத்தை கண்டுபிடிப்பதில் பெரிய கஷ்டமிருக்காது. அரசியல்!

தேர்தல் நேரத்தில், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அவர்களை தமிழகத்தில் வளரவிட்டதற்காக மன்னித்துவிடுங்கள் என்று மெரீனா கடற்கரையில் அம்மா சொன்னதற்கும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதற்காக இன்று கலைஞர் பெருமைப்படுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை. துக்ளக் சோ சொல்வது போல பாகிஸ்தானுடன் சேர்ந்து திராவிடஸ்தான் பெற்றுத் தரவேண்டும் என்று ஜின்னாவிடம் பெரியார் கோரிக்கை வைத்தது மாதிரியான 'வித்தியாசமான' விஷயங்கள் நம்மூரில் ஜாஸ்திதான். இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்வதால் இந்திய முஸ்லீம்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைப்பது இந்திய மக்களின் ஒரு பிரிவினரின் நாட்டுப்பற்றையே சந்தேகிப்பது மாதிரிதானே? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது!

Wednesday, April 07, 2004

'தலித்'துவம் எத்தனை நாளைக்கு?

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடனும் வந்த தலித் இலக்கிய எழுச்சி தலித் போராட்டங்களை முன்னிலைப்படுத்தியதைவிட சில தலித் எழுத்தாளர்களின் சுய பிரஸ்தாபங்களை முன்னிறுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். தலித்துகளின் சோகத்தையும் கோபத்தையும் மட்டும் எழுத்தில் வடிப்பதுதான் தலித் இலக்கியம் என்றால் வேட்கை குறைய ஆரம்பித்துவிட்டதாகத்தான் கொள்ள முடியும். தலித் சமூகத்திலிருந்து வந்து பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கான எந்த முயற்சியும் செய்வதில்லை. தீண்டாமைக் கொடுமையை நீக்க முயற்சிப்பதை மறந்துவிட்டு அது இந்து மதத்தின் சாபக்கேடு என்று சொல்லி தப்பித்துக் கொள்வது நியாயமான விஷயம்தானா? மகாத்மா காந்திஜி முன்மொழிந்த 'ஹரிஜன்' என்கிற சொல்லாக்கத்தையும் து¡ர எறிந்து விட்டு 'தலித்' என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசியலில் கூட தலித் கட்சிகளை சிலர் ஜாதிக் கட்சிகளாக கருதுவதில்லை. திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் தாழ்த்தப்பட்ட வர்க்கமான தலித்துகளுக்காக பாடுபடுகின்றார்களாம்! அவர்கள் ஜாதி என்கிற குறுகிய வட்டத்தில் வளைய வருவதில்லை என்று சர்ட்டிபிகேட் கொடுப்பவர்கள், பாமகவை ஜாதிக் கட்சி என்று சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது. சாதாரண மக்களை பொறுத்த வரை பாமகவும் சரி, திருமாவளவனின் கட்சியும் சரி, தென்மாவட்டங்களில் பரபரப்பை கிளப்பும் தேவர் இனத்து மக்களின் கட்சிகளும் சரி எல்லாமே குறுகிய ஜாதீய சிந்தனையுடைய அரசியல் அமைப்புகளாகவே பார்க்கப்பட்டுவருகின்றன. இத்தகைய கட்சிகளால் தங்கள் ஜாதி மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே கோலோச்ச முடியும். ஜாதி அரசியல் தமிழகத்தில் தற்போது உச்சத்திலிருக்கிறது. பெரிய கட்சிகளின் அரசியல் முடிவுகள் பெரும்பாலும் ஜாதி ஓட்டை பொறுத்தே அமைந்திருக்கின்றன. சமீபத்திய உதாரணம், திருச்செந்து¡ரில் ராதிகா செல்வியும் தர்மபுரியில் பு.தா. இளங்கோவனும் போட்டியிடுவது. ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று பாடிய பாரதியார் இன்றிருந்தால் தமிழ் நாட்டை என்ன இந்தியாவை விட்டே ஓடிப் போயிருப்பார்!

'தலித்' என்ற பெயரில் நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் இன்னும் எத்தனை நாளைக்கோ?!