Friday, December 03, 2004

மொட்டை

ஏர் பிடித்த உழவன் மாதிரி லாவகமாக கத்தியை வைத்து சரசரவென்று இழுத்து போய்க்கொண்டே இருப்பார். தலையிலிருந்து பொத் பொத்தென்று முடிக்கற்றைகளாக தரையில் விழும். கூடவே கண்ணீர் துளிகளும். ஆரம்பத்தில் கொஞ்சம் அசெளகர்யமாக இருக்கும். நாலே நிமிஷத்தில் 'முடிஞ்சுடுச்சுப்பா'ன்னு சொல்லும்போது இன்னும் கொஞ்சம் இழுக்கக்கூடாதான்னு சின்னதா ஒரு ஏக்கம்! சட்டையில்லாத உடம்பில் ஒட்டிக்கொண்ட முடிகளை தட்டி தூக்கிவிட்டுவிட்டு நிற்பவரிடம் சில சில்லறைகளை(?) நீட்டுவார் அப்பா. சோகமாய் சட்டையை சுருட்டிக்கொண்டே அப்படியே நடத்தியே அழைச்சுக்கிட்டு கோயில் குளத்தை நோக்கி நடக்கும்போது இப்பவே குல்லா வாங்கி தரமாட்டாரான்னு தோணும். ஆனா, மனுஷன் வாயே திறக்காம குளத்துக்கு போய் மிச்சம் மீது இருக்கும் டவுசரையும் கழட்டி விட்டு பொம்பளைங்க முன்னாடியே குளத்தில் இறங்கி குளிக்கச் சொல்வார். முங்கி எழுந்து வந்ததும் கையோடு கொண்டு வந்திருக்கும் அரைச்ச சந்தனத்தை தலையில்.... தடவ மாட்டார், சின்னதம்பி பிரபு மாதிரி மொட்டைத் தலையையே மிருதங்கமாக்கிவிடுவார். சந்தனத்தின் குளிர்ச்சியும், கொஞ்ச நாளைக்கு எண்ணெய் தடவி தலையை சீவ வேண்டாமே என்கிற நினைப்பும் சந்தோஷமாத்தான் இருக்கும். ஆனா, அடுத்த நாள் ஸ்கூலில் சக மாணவியர்கள் முகத்தில் வரும் நமுட்டுச் சிரிப்பை பார்க்கும்போது முகமே பேஸ்தடிச்சு போய்டும்!

ஆனாலும் ஒவ்வொருத்தருக்கும் மொட்டை ஒரு இனிய அனுபவம்தான். மொட்டை என்கிற சடங்கு சரியா, தப்பான்னு தெரியலை. இந்து மதம் என்றில்லாமல் மற்ற மதங்களிலும் நேர்த்திக்கடனாக மொட்டை போடுவதில் ஏதோ சைக்காலஜிக்கல் காரணம் இருக்கும்னுதான் நினைக்கிறேன். மொட்டை அடிப்பது இப்போ கொஞ்சம் காஸ்ட்லியான விஷயமாகிவிட்டது. கலோக்கியலா பேசும்போது மொட்டையடிக்கிறது என்பதற்கே வேற அர்த்தம் வந்துவிட்டது. சின்ன வயசில் நிறைய தடவை மொட்டை போட்டிருக்கேன் (போடும்படி ஆக்கப்பட்டிருக்கேன்!). வைத்தீஸ்வரன் கோயிலில் ஆரம்பிச்சு, பழனி, சமயபுரம்னு எட்டாங்கிளாஸ் வர்றதுக்குள்ளேயே நாலு மொட்டை. நாடு இருக்குற இன்றைய நிலைமையில முக்கியமான மொட்டையாக நான் நினைக்கிறது நாகூரில் அடிச்சதைத்தான். லேட்டஸ்ட் மொட்டை, போன வருஷம் திருப்பதியில் 'கவனிச்சு' போட்டது! திருப்பதியில் மட்டும் ஏன்தான் மொட்டையடிச்சதும் சந்தனம் தடவ மாட்டேங்கறாங்களோ தெரியலை! கடலூர் பக்கம் கெமிக்கல் கம்பெனியில் வேலைசெய்யும் என்னோட ·பிரண்ட், முடியிலிருந்துதான் நிறைய கம்பெனியில் பிஸ்கெட் தயாரிக்க புரோட்டீன் எடுக்கிறாங்கன்னு ஒரு விஷயத்தை எடுத்துவிட்டு 'உவ்வே' வரவழைச்சான். எத்தனையோ கேள்விகளை ஆனந்த விகடனில் மதனிடம் கேட்டிருந்தாலும் இன்னும் என் நண்பர்களின் ஞாபகத்திலிருக்கும் ஓரே கேள்வி...

'மொட்டையடித்தால் மீசையையும் எடுக்க வேண்டுமா?'

'லேடீஸ் என்றால் அவசியமில்லை!'



'ப்பூ.... வலைப்பூ ஆரம்பிச்சு இன்னியோட ஒரு வருஷமாச்சே! இன்னிக்கு பார்த்தா இப்படியொரு மேட்டர் எழுதறது?!'

Wednesday, December 01, 2004

கேள்வியின் நாயகனே!

"சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்! ஏன் மத்திய அமைச்சர்கள்மீதும், மற்ற தலைவர்கள்மீதும் இப்படி கொலைக் குற்றம் சாட்டப்பட்டாலே அவர்கள் வகிக்கும் பதவியிலிருந்து விலகவேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கூறும் பலர், இந்த சங்கராச்சாரியாரை அவர் வகிக்கும் மடாதி பதி பதவியிலிருந்து உடனடியாக நீக்கி வைக்கவேண்டியது, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமை யாகும்! சட்டம் வளையக் கூடாது என்றோம்; அப்படி யாராவது வளைக்க முயன்றால் அவர்களை மக்களும், உண்மை நாடுவோரும் கடைசிவரைக் கண் காணித்தலும் அவசிய மாகும்! இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடே எதிர்பார்க்கிறது." தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கையில்... சில கேள்விகள் * ஜெயிலில் இருக்கும் ஜெயந்திரரை, விஜயேந்திரர் பார்க்க மறுப்பது ஏன்? இவ்வளவு நடந்தபின்பும் மடாதிபதி பதவியிலிருந்து ஜெயந்திரரை விலக்க முடியாதது ஏன்? * இந்து சமய அறநிலைய பாதுகாப்புத்துறையால் ஜெயந்திரர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? இந்து அறநிலையத்துறையின் அதிகார வரம்பை எல்லா சமயக் கோயில்களுக்கும் விரிவுபடுத்த முடியாதது ஏன்? * ஜெயந்திரர் கைதை எதிர்க்கும் பிராமண சங்கத்திற்கும் மற்ற ஜாதி சங்கங்களுக்கும் வித்தியாசம் உண்டா? * சங்கரராமன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சத்தை அள்ளிக் கொடுத்ததன் மூலம் ஜெயலலிதா சாதிக்க நினைத்தது எதை? * ஜெயந்திரர் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸின் கோரிக்கை குறித்து கலைஞர் வாய்திறக்காதது ஏன்? * எத்தனை நாளைக்குத்தான் ஜெயந்திரர் விஷயத்தில் மெளனச் சாமியாராக இருக்கப்போகிறது காங்கிரஸ்? மேட்டர் உண்மைதானுங்களா?! "அய்யோ... சில்லறை இல்லேன்னா ஆளை வுடு சாமி.... தோண்டி துருவாதே! நான் அந்த மாதிரி சாமியாரில்லை!"

Monday, November 29, 2004

திருக்கார்த்திகை தீபம்

தீபத்திருநாள்தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி! மண்பாண்டத்தில் செய்யப்பட்ட விளக்கு, நல்லெண்ணெய் வாசம், தீபாவளிக்கு வாங்கி வெடிக்காமல் நமத்துப்போயிருக்கும் பட்டாசு, பிசுபிசுவென்று கையில் ஒட்டிக்கொண்டாலும் இனிக்க வைக்கும் பொரி, பெரிய கோயில் சொக்கப்பானை, அதில் தேடிக்கண்டுபிடித்து வீட்டுக்கு எடுத்துவரும் கரித்துண்டுன்னு சுவராசியமான நினைவுகள்...

போன வருஷம் திருக்கார்த்திகைக்கு பஸ்ஸில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே திருவண்ணாமலை போய் சேர்ந்து ஏதோ ஒரு தெரு முனையில் நின்று அண்ணாந்து பார்த்து அண்ணாமலை தரிசனம் செஞ்சதை விட கூடுதல் திருப்தி 'ஜெயா' டிவியின் புண்ணியத்தில் இந்த வருஷம் வீட்டிலிருந்தபடியே கிடைத்துவிட்டது. திருவண்ணாமலைக்கு போனால் கூட கோயில் பிராகாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது. அதுவும் தீபம் ஏற்றியவுடன் திருவண்ணாமலை நகரத்துக்கே வெளிச்சம் வரும் காட்சியை தெருவில் நின்று பார்ப்பதைவிட வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து டிவியில் பார்ப்பதில் பரவசம். அகிலா கிரேனில் சரசரவென்று ஆக்ஷன் படம் மாதிரி காமிரா இயங்கி, எறும்பு போல ஊர்ந்து போகும் மக்களை படம்பிடித்தது அசத்தல். சன்டிவியாக இருந்திருந்தால் டெக்னாலஜியில் இன்னும் அசத்தியிருப்பார்கள். தடையாக இருப்பது பகுத்தறிவு கொள்கையா, சீரியலில் வரும் பணமான்னுதான் தெரியவில்லை! நமக்கெதுக்கு அரசியல்?!

சாம்பிளுக்கு குவாலிட்டி இல்லாத ஸ்டில்ஸ் கொஞ்சம். ஜெயாடிவியிலிருந்து சுட்டவை!

திருவண்ணாமலை சாயங்கால நேரம்...



உண்ணாமலை அம்மன் உற்சவத்துக்கு ஆஜர்...



கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்....



சிக்னல் கொடுத்தாச்சு!



மலை மீது தீபம்!



பிரகாசமாய் கொழுந்துவிட்டு...



கீழே, கோயில் பிரகாரத்தில் தீபம்...



லைட்ஸ் ஆன்..!



ஜொலிக்குதே...தங்கம் போல் ஜொலிக்குதே!



எறும்பு போல பக்தர்கள், அண்ணாமலையாரை சுற்றி!



அண்ணாமலையாருக்கு அரோஹரா!